Thursday, November 07, 2013

வெண்மழை

""டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்... நடந்து போங்க...'', ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்.
சாலினி அதிர்ச்சி அடைந்தாள். "நடக்கவா... எவ்வளவு தொலைவிற்கு...?'
ஆறு கி.மீ. இறங்கினால், மார்ஹி என்றொரு ஊர் வரும். அங்கு வேன்கள் இருக்கும். அதில் உங்கள் லாட்ஜ்க்கு செல்லலாம்..
சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் கோபமாய் வந்தது. அவன்தான் மணாலி சுற்றுலாவை குளிர்காலத்தில் செல்ல பிடிவாதம் பிடித்தான். குளிர்காலத்தில்தான்
உச்சகட்ட குளிரை அனுபவிக்கலாமாம். மேலும் பனிப் பொழிவு வாய்ப்பும் உண்டு என்று ஆலாய்ப் பறந்தான். வச்சுவும், அப்பாவும் விச்சுவுக்கு சப்போர்ட் பண்ண சாலினி பாடல்லவா இப்போது திண்டாட்டமாகி விட்டது. அவளுக்கு நம்மூர் இருபது டிகிரி குளிரே ஒத்து வராது. காலை மணாலியில் இறங்கும் போதே அக்கூ வெதர் மைனஸ் இரண்டு என்றது. இப்போது, இந்த லே சாலை மலை மீது பதினைந்து கி.மீ. வந்துள்ளார்கள். இங்கு நிச்சயம் மைனஸ் பத்து இருக்கும்.
அவர்கள் சுற்றுலாவின் பிரதான அம்சமே குலாபாவின் பனிப்பரப்பு ஆட்டம், பனிச்சறுக்கு விளையாட்டு, ரோப் கார் பயணம், முடிந்தால் சார்பிங்...  இவ்விடத்திற்குரிய பிரத்யேக குளிர் தடுப்பு உடைகள், சறுக்கு காலணி, கைடு என்று மொத்த பேக்கேஜாகப் பேசியிருந்தார்கள். என்னதான் நான்கைந்து தடுப்பு உடை போட்டிருந்தாலும், குளிர் அதனையும் ஊடுருவி, முதுகுத் தண்டைப் பிடித்து, சாலினியின் மூளையை உறைய வைத்தது. முகத்தை மறைக்க தடுப்பு எதுவும் கிடையாதா... அது மட்டும் என்ன பாவம் செய்தது?
விச்சுவோ அவன் அம்மாவிற்கு நேரெதிர். குளிர் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
சாலினிக்கு விச்சுவின் மீது ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், குலாபா அவள் எண்ணத்தை மாற்றி விட்டது.
ஆம்... குலாபா... ரோடங் கணவாய் பனிப் பரப்பு இங்கிருந்தே ஆரம்பித்து விட்டது. முதன்முதலில் பனியின் மீது காலடி வைத்ததும் அவளுக்குள் எழுந்த சிலிர்ப்பு... ஆஹா எங்கெங்கு காணினும் வெண்மையடா... என்று உரக்க கத்திக் கொண்டு வயசை மீறி குதியாட்டம் போட ஆசை விழைந்தது. பார்க்கப் பார்க்க திகட்டாத காட்சி... நீண்ட நேரம் அதன் அழகில் மயங்கி இருந்தாள். அவ்விடம் முழுவதும் தேனிலவு தம்பதிகளே அதிகம் இருந்தனர். இவர்களைப் போல குடும்பத்தோடு வந்தவர்கள் வெகு சிலரே. அதிலும் தமிழ் கேட்பதே அபூர்வம்.
குழந்தைகள் என்ன செய்கின்றனர்? விச்சு, வச்சுவை தேடினாள். இருவரும் சறுக்கு காலணி மாட்டிக் கொண்டு ஸ்கீ கற்றுக் கொள்ள தயாராயினர். கைடு கரண் சொல்லிக் கொடுத்தார்.
""முட்டியை மடக்கி, உடலை நன்றாக முன்னால் கொண்டு வந்து, ஸ்டிக்கை மாற்றி மாற்றி சப்போர்ட்டாக வைத்துக் கொண்டே சறுக்குங்கள்''
குழந்தைகள் உற்சாகமாக சறுக்கினர். "ஹூடிபாபா... ஹூடிபாபா..' என்று கரண் உற்சாகப்படுத்தியது வேடிக்கையாக இருந்தது. ""காலை அகட்டி வைக்காதே.. விழுந்து விடுவாய்'', சொல்லி முடிப்பதற்குள் விச்சு வழுக்கி விழுந்தான். அதற்காக சிறிதும் கவலைப்படாமல் மீண்டும் எழுந்தான். சறுக்கினான். ஆர்ப்பரித்தான். அம்மாவிற்கு காலணி மாட்டி விட வந்தான். "ஆளை விடு சாமி' என்று சாலினி காத தூரம் ஓடிவிட்டாள்.
அப்போது, சிறுசிறு துளியாக, வெண்மழை விழ ஆரம்பித்தது.
""அம்மா... ஸ்நோ ஃபால்...''
அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த பனிமழை வந்தேவிட்டது. அனைவரும் உற்சாகமாகி விட்டனர். பஞ்சு பஞ்சாகக் காற்றில் அது மிதந்து வரும் அழகே தனி. மழைத் தூறலில் நனைவதையே விரும்பும் சாலினி, பனித்தூறலை வேண்டாமென்றா சொல்வாள்? சில வினாடிகளில் உடை முழுவதும் வெண்மழை படர்ந்து, அவள் உடையை வெண்மையாக்கியது. ஓர் உதறு உதறியதும், அவையனைத்தும் தெறித்து மறைந்தும் விட்டன. மீண்டும் வெண் உடை, உதறுதல், மறைதல் சாலினிக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது
""இப்ப தெரியுதாம்மா.. ஏன் நான் அடம் பிடித்தேன் என்று?'' - விச்சு கேட்க, ""சரிடா.. உன் மீது எனக்கு கோபம் கிடையாது'' என்றாள்.
அவன்மீது வந்த கோபமெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சாலினிக்கு தோன்றியது. எதற்காகக் கோபப்பட வேண்டும்? இந்தியா, பலதரப்பட்ட மக்கள், பரப்புகள், வளங்கள் மிகுந்த நாடு என்று வேற்றுமையில் ஒற்றுமை என புத்தகத்தில் படித்திருந்தாலும், நேரில் அனுபவிக்கும் உணர்வே அலாதிதானே?
சிறிது சிறிதாகப் பனிப் பொழிவு அதிகரிக்க ஆரம்பித்தது.  ஆங்காங்கே விழுந்து கொண்டிருந்த வெண்மழை இப்போது தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெண்ணிற குல்லா மாட்டிக் கொண்டன. சாலையில் நின்று கொண்டிருந்த டாக்ஸிகளின் கூரை மீது பனி, வீடு கட்ட ஆரம்பித்தது. குலாபாவின் சூழலும் மாற ஆரம்பித்தது. ஒவ்வொரு குழுவாக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தனர். ஏன்? ஏன்? சாலினிக்கு புரியவில்லை. வெண்மழையை ரசித்து மகிழ வேண்டிய நேரத்தில், ஏன் இவ்வளவு அவசர அவசரமாகக் கிளம்புகிறார்கள்?
அவள் கணவர் கூறினார். பனிப் பொழிவு அதிகமாகி விட்டதாம். ஏற்கெனவே நாம் வந்த மலைப் பாதை மீது பனி படர ஆரம்பித்து விட்டது. விரைவில், அது மூன்றடி, நான்கடி உயரத்திற்கு மூடிவிடுமாம். அதன்மீது வாகனத்தை ஓட்டுவது கடினமாம். கைடு நம்மையும் சீக்கிரம் வரச் சொல்கிறார்.
குலாபாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், கடைசி நபராக அங்கிருந்து சென்றார்கள்.
இறங்கும்போதுதான் சாலினி கவனித்தாள். அவர்கள் ஏறி வந்த பாதை, இடது பக்க மலை, வலது பக்கச் சரிவு அனைத்துமே பனியால் மூடியிருந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் ஏற்படுத்திய தடத்திலேயே, பின் வாகனங்கள் சென்றன.
சில பழக்கமில்லாத வாகனங்கள், டிரைவர்களால், ஆங்காங்கே போக்குவரத்து தடைகள் ஏற்பட ஆரம்பித்தன. அவர்களின் சக்கரங்கள், நம்மூர் சேற்றில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் சக்கரங்கள் போல, பனிப் புதைவிற்குள் சுழன்று கொண்டே நகர மறுத்தன. இரண்டு கி.மீ. கூட இறங்கியிருக்க மாட்டார்கள். டிராபிக் ஜாமில் அவர்களின் டாக்ஸியைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.
டாக்ஸியில் இருந்து இறங்கிய விச்சு, வச்சுவுக்கு பனி உருண்டை செய்ய சொல்லிக் கொடுத்தான். சாலினியின் டென்சன் அதிகரித்தது. இந்த நேரத்தில் விச்சுவால் எப்படி விளையாட முடிகிறது?
பனிப் பொழிவோ சிறிது கூட நிற்காமல், பாதையை மேலும் மேலும் மூடிக் கொண்டேயிருந்தது. வாகனத் தடங்களும் மூடப்பட்டு விட்டன. பெரிய டயர் உள்ள ஜீப் போன்ற வாகனங்களால் மட்டுமே இனி பாதை ஏற்படுத்த முடியும். இல்லையேல், பனி அகற்றும் வாகனம் வரவேண்டும். போக்குவரத்து இப்போதைக்கு சரியாகாது.
மணாலி போலீசாரின் கூற்றைக் கேட்டு வேறு வழியில்லாமல் மார்ஹிக்கு நடக்க ஆரம்பித்தனர்.
சாலினிக்கு தங்களின் நிலைமை "பளிச்'சென்று புரிந்தது. ஆறு கி.மீ. நடை.. இறக்கமான சரிவு பாதைதான் என்றாலும் பனியில் வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் என்பதால் மார்ஹியில் வேன்கள் கிடைப்பது என்ன நிச்சயம்? வெண்மழையின் அழகை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த அவளுக்கு, அதன் மற்றொரு முகமான பிரச்சனைகள் எரிச்சலை உண்டு பண்ணியது. விச்சுவின் மீது வந்திருந்த கோபமும் அதிகரித்தது. இந்தக் கொடுமையான குளிரில் வரவைத்து கஷ்டப்படுத்தி விட்டானே...
கைடு துணைக்கு வருவது சற்று தெம்பாக இருந்தது. ""வேகமாக நடக்காதீர்கள்.. முன்னங்காலை நன்றாக அழுத்தி, பிறகு குதிகாலையும் அமுக்கி நிதானமாக ஒரே சீரான வேகத்தில் நடங்கள்'' என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழக்கம்போல விச்சு அவர் பேச்சைக் கேட்காமல், அவன் ஷூவையே ஸ்கீயாக்கி, சறுக்கிக் கொண்டே வந்தான். கணவர் வச்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க, சாலினி தனியாக நடந்தாள்.
அப்போதுதான் ஆபத்பாந்தவன் போல வந்தன சில ஏடிவி வண்டிகள். இவை பனியின் மீது ஓட்டுவதற்கென்றே உரிய வண்டிகள். மணாலி லாட்ஜ்க்கே விட்டு விடுவதாய் கூவிக் கொண்டே வந்தனர். ஆர்வத்தோடு பலர் விசாரிக்க, வாடகையை கேட்டு, மலைத்து சிலர் நடையைக் கட்டினர். சாலினி கணவர் ஒரு நபரிடம் பேரம் பேசி அழைத்து வந்துவிட்டார்.
அது ஒரு மூன்று சக்கர ஏடிவி மோட்டார் சைக்கிள் போன்றே உருவத்தில், அதே நீளத்தில் இருந்தது. டயர்கள் அகலமாக, கனமாக இருந்தன. பின் சக்கரங்கள் ஆட்டோவின் பாதி அகலத்தில் இருக்க, அதன் மேலே அரை வட்டமாய், முக்கால் அடி அகலத்தில் மக்காடு இருந்தது. இதில் அவர்கள் நால்வர் எப்படி உட்கார்வது? கைடு வேறு இருக்கிறார்.
ஏடிவி டிரைவர் நானக், முதலில் பெட்ரோல் டாங்க்கை ஒட்டி அமர, அவர் பின்னால் விச்சுவும், வச்சுவும் அமர்ந்தனர். சீட் முடிந்தது. சாலினியும், கணவரும் மக்காடு மீது உட்கார்ந்து, பின்புற கம்பியை பிடித்துக் கொண்டனர். "நான் அம்பேல்' என்று சாலினி பயந்து கொண்டே இருந்தாள். கரண் முன்சக்கர மக்காடு மீது உட்கார்ந்து கொண்டார்.
""நம்மது அமெரிக்கா இறக்குமதி வண்டி... பத்து பேர் கூட இதில் உட்கார்ந்து போகலாம்...'', என்று நானக் தன் வண்டி புகழ் பாடிக் கொண்டே ஏடிவியை கிளப்பினார்.
விச்சு, ஏடிவி மீதிருந்த ஒரு வாசகத்தை சாலினிக்கு காண்பித்தான்.
"இது இரு நபர்கள் மட்டுமே செல்லக் கூடிய வண்டி. அதிகம் ஏற்றினால் ஆபத்து ஏற்படும்' என்ற மணாலி போலீசாரின் எச்சரிக்கை ஸ்டிக்கர் அதில் ஒட்டியிருந்தது
"ஐயய்யோ... ரூமிற்கு போனதும் உனக்கு இருக்குதுடா விச்சு'
என்னவொரு பயணம்... எதிர்காற்று, பனிப் பொழிவு, அபரீத குளிர், இவற்றால் விரைத்து விட்டாள் சாலினி. கடலில் படகு மிதந்து செல்வது போல, இந்த பனியில் ஏடிவி மிதந்து சென்றது. வெண்மழை சாலினி முகத்தில் அடித்தது. முகத்தை மூடிய பனியை, அடிக்கடி துடைக்க வேண்டியதிருந்தது. உதடுகள் குளிரில் கனத்தன. இமைகளின் மீது விழுந்த பனிப் பஞ்சினால் அவளின் கண்களைத் திறக்க முடியவில்லை. இரண்டு கையுறைகள் கூட அவளுக்குப் போதவில்லை. ஆனால் நானக்கோ கையுறையே இல்லாமல் அநாயசமாக ஓட்டினார். பயணிகள் பயந்து விடக் கூடாது என்பதற்காக பாதை நடுவிலேயே பயணித்தார். ஆனாலும் சாலினி பயத்தில் கத்திக் கொண்டே வந்தாள். விச்சு உற்சாகத்தில் கத்தினான். கரண் ஹூடிபாபாவை விடவில்லை.
வழி முழுவதும், போர்க்கள பூமியாகக் காட்சியளித்தது. பனிப் புறாக்களும், வேறு சில பறவைகளும், மரக்கிளைகளுக்கிடையேயும், மலைகளின் இடுக்குகளுக்கிடையேயும் கட்டியிருந்த தத்தமது கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மாடுகள், குதிரைகள், எல்லாம் பெரிது பெரிதாய், புஸý புஸýவென்று முடியோடு, மறைவிடம் தேடியலைந்தன. ஆங்காங்கே சிக்கியிருந்த கார்களை விடுவிக்க, சிலர் முயன்று கொண்டிருந்தனர். காருக்குள்ளே எப்போதும் வைத்திருக்கும் கருவிகளை உபயோகித்து, சக்கரங்களுக்குக் கீழே பள்ளம் தோண்டி, சக டிரைவர்கள் பின்னால் தள்ளி உதவ, காரை விடுவிக்கப் போராடினர்.
அதேசமயம், உள்ளூர்வாசிகளில் சிலரோ பனி உருண்டை செய்து, நண்பர்கள் மீதும், காதலிகள்  மீதும் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். குடை பிடித்து வருபவர்களைப் பார்த்தபோது, பனிக்கு கூட குடை பிடிப்பார்களோ என்றிருந்தது. நடந்து வரும் தேனிலவு ஜோடிகளோ, தங்கள் அலுப்பைப் பொருட்படுத்தாமல், பனியில் உற்சாக குளியல் மேற்கொண்டனர். முழு உருவமும், கூந்தலும் பனியால் மூடியிருப்பது, அவர்களை காதல் தேவதைகளாய் உருமாற்றின. மொத்தத்தில் இந்த பனிப் பொழிவு, இம்சையையும், உற்சாகத்தையும் ஒருங்கே கொண்டு வந்துள்ளது.
அரைமணி நேர ஏடிவி பயணத்திற்கு பிறகு, மார்ஹியை தாண்டி வந்த ராணுவ கேம்ப் கிராமத்தில் ஒரு வேன் அருகில் நிறுத்தினார் நானக்.
""இங்கிருந்து வேன் ஏற்பாடு செய்கிறேன். அதில் லாட்ஜுக்கு போய் விடுங்கள்''
டிரைவர் அங்கு தகராறு பண்ணக் கூடாது.
""என்னுடைய தம்பி சார்..'' என்று கூறிவிட்டு தம்பியிடம் வாடகை பேரம் பேசிக் கொண்டிருந்தார் நானக்
அப்போது.... விச்சு கத்தினான்.
""ஏய்ய்ய்..... அங்கே பாருங்கள்...''
அந்த பனிப் பாதையில் ஒரு சுற்றுலா டாக்ஸி, டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பாதையில் வழுக்கிக் கொண்டு, வலதுபுறமாய் பள்ளத்தை நோக்கி சறுக்கிக் கொண்டிருந்தது. அதன் டிரைவர் டாக்ஸியை தன் கட்டுக்குள் கொண்டு வர பிரம்மபிரயத்தனம் செய்தார். பிரேக் போட்டாலும், ஸ்டியரிங்கை திருப்பினாலும், அதன் சறுக்கல் மட்டும் நிற்கவில்லை.
காருக்குள்ளே இருந்த தேனிலவு ஜோடி.. கத்தினார்கள்...
""வாங்க... காப்பாத்துவோம்''
விச்சு கத்திக் கொண்டே அந்த டாக்ஸியின் வலது பக்கம் சென்று தன் முழு சக்தியோடு டாக்ஸியை பாதைக்குள் தள்ள முயன்றான். விச்சு எட்டாவது படிக்கும் சின்னப் பையன். உன் எதிர்ப்பு எல்லாம் எனக்கு ஜுஜுபி என்பது போல அந்த டாக்ஸி அவனையும் சேர்த்து தள்ளிக் கொண்டு பாதை ஓரத்திற்கு வந்தது. விச்சுவின் கத்தலையும், ஓட்டத்தையும் கண்ட அப்பா, நானக், கரண் மூவரும் கண நேரத்தில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு, அவர்களும் டாக்ஸிக்கு முட்டுக் கொடுக்க, அதன் வேகம் மட்டுப்பட்டது.
என்றாலும், முழுவதுமாக நிற்கவில்லை. உடனே விச்சு, வலப்புற பானட் அருகே சென்று, சரியாக முன் சக்கரத்திற்கு மேலே கையை வைத்து தள்ளினான். இப்போது அதன் சறுக்கும் திசை இடம் மாறியது. டாக்ஸி, இடதுபுறமாய், மலைப் பக்கம் சென்று, பாதையில் இருந்து இறங்கி, பனிக்குள் சக்கரங்கள் புதைந்து, ஒருவழியாய் நின்றது.
பெரிய ஆபத்தில் இருந்து அந்த மூவரும் தப்பினர்.
காரிலிருந்து இறங்கிய பின்னரும், அவர்களின் கை,கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் புவனேஸ்வரை சேர்ந்த ஜோடி. "தன்யவாத், தன்யவாத்' என்று உணர்ச்சியுடன் கூற, நானக் அவர்களிடம், ""தம்பிக்கு மட்டும் நன்றி கூறுங்கள். அவன் தான் உண்மையான ஹீரோ'' என்று கூறினார். விச்சு, பாராட்டு மழையில் நனைந்தான்
வேனில் ஏறி ரூமிற்கு வந்தும், விச்சுவுக்கு கிடைத்த தன்யவாத்தும், பாராட்டுகளும் சாலினி காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. குளிர் காலத்தில் போய் சுற்றுலா வந்தோமே என்று குழப்பத்தில் இருந்த சாலினிக்கு, இந்த ஜோடி தப்பிக்க உதவும் கருவியாகத் தான் வந்தோமோ என்ற எண்ணம் வந்தது. விச்சுவை கட்டி முத்தமிட வேண்டும்.
விச்சு எங்கே?
அதோ பார், என்று அவள் கணவர் ஜன்னல் வழியே காண்பிக்க, அங்கு விச்சு ரோட்டில் புதிதாய் பிறந்திருந்த மூன்றடி பனிப் படுக்கையில் படுத்துக் கொண்டு கையை நீச்சலடிப்பது போல அசைத்துக் கொண்டு, தேவதை ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். தங்கை வச்சுவுக்கும் அவன் சேட்டையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இம்முறை சாலினிக்கு விச்சுவின் மீது கோபம் வரவில்லை.

** தினமணி கதிரில் (27/10/2013) வெளிவந்த சிறுகதை**

Thursday, October 17, 2013

எண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்

”எண்பது நாட்களில் உலகத்தை சுற்றி வர தன்னால் முடியும் என்று கதையின் நாயகர் பீலியாஸ் போக், தன் நண்பர்களிடம், மிகப் பெரிய தொகையை பந்தயம் கட்டுகிறார். அன்றிரவே லண்டனிலிருந்து பயணத்தை தொடங்கியும் விடுகிறார்!

நீராவி இன்ஜின்கள், புகை வண்டிகளைத் தவிர வேறெந்த இயந்திர வாகனங்களும் கண்டுபிடிக்கப்படாத 1872ம் வருடம் அது. புயல், மழை தாமதங்கள், ரயில் தாமதங்கள், செவ்விந்திய கொள்ளையர்கள் என பலவித இடைஞ்சல்கள் வருகின்றன. வங்கிக் கொள்ளையராய் இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு அவரைத் துரத்துகிறது. பயணிகள் கப்பல், ரயில், வணிக கப்பல், பாய்மரப் படகு, பனிச்சறுக்கு படகு, யானைப் பயணம் என்று அனைத்து வித வழிகளிலும் பயணம் செய்கிறார். இறுதியில் பந்தயத்தில் வெல்கிறாரா? அல்லது தன் சொத்தை இழக்கிறாரா? அல்லது உண்மையில் அவர் கொள்ளையர்தானா?
பரபரப்பாக நகரும் கதையின் இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பமே, நூறாண்டுகளுக்கும் மேலாக, இன்றும், இக்கதையை வெற்றிகரமானதாக ரசிக்க வைக்கின்றது...!”

நாடு, மொழி, இனம் கடந்து பல தலைமுறைகளால் ரசிக்கப்படும், பிரபல ஃபிரன்சு எழுத்தாளர் ஜூல் வெர்னேவின் சாகாவரம் பெற்ற நாவல் “AROUND THE WORLD IN EIGHTY DAYS" தமிழில், ஸ்ரீதேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது..!

நாவலை வாங்க விருப்பமுள்ளவர்கள் நுழைய வேண்டிய இணைப்பு
http://www.amazon.com/Around-World-eighty-Jules-Version/dp/1456559222/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1381986449&sr=1-1&keywords=sridevi

Saturday, September 28, 2013

ஸ்பெஷல் தோழி

ஃபோரம் லேண்ட்மார்க்கிற்குள் நுழையும்போது தான் எஸ்கலேட்டரில் ஏறிக்கொண்டிருந்தவளை கவனித்தேன். அது... அது... நெட்டை நித்யா தானே...? ஆம்... அவளேதான். உடை, ஹேர்ஸ்டைல், பேசும் விதம், மேக்கப்... எட்டு வருட இடைவெளியில் அடியோடு மாறிவிட்டாளே? எனக்கு நித்யாவை நேருக்கு நேர் சந்திக்க தயக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

காரணம் பிறகு... முதலில் நித்யாவின் கண்ணில் பட்டுவிடக் கூடாது. என் மகளை இழுத்துக் கொண்டு சிடி செக்சனுக்குள் நுழைந்தேன். கண்கள் சிடிக்களை மேய்ந்தாலும், என் சிந்தனை கல்லூரி காலத்திற்கு சென்றது.

இருவருமே கோவை ஜிசிடியில் ஐடி படித்தவர்கள். கல்லூரியில் அமைதியாக அடக்கமாக இருந்தாலும், விடுதியில் நான் அடிக்கும் லூட்டியே தனிதான். சீனியர், ஜூனியர், ஏன் லெக்சரர்களை கூட விட்டு வைக்காமல் ஓட்டு ஓட்டுவேன். கலாட்டா காலனி என்றுதான் எல்ஹைச்சுக்கு பெயர் சூட்டியிருந்தோம்! என்னிடம் அதிகமாக சிக்கித் தவித்தது நித்யாதான்! ஆறு மூன்று என அதீத உயரம், திக்கல் பேச்சு, குழந்தைத்தனம் என்று நித்யா ஒரு வெகுளியானப் பெண். டிரெஸ்ஸிங் சென்ஸ் கிடையாது. மேக்கப் தெரியாது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தேவையில்லாத பயம்.

என்னால், அவள் அழாத நாளே இருக்காது! கரெக்டாக கூறனும்னா, என்னை அவள் எரிச்சலூட்டாத நாளே கிடையாது! நித்யாவை நான் எவ்வளவு திட்டினாலும், என்னையே சுற்றி சுற்றி வருவாள். கேள்விக் கணைகளால் என்னை துளைத்து எடுத்து விடுவாள். ஐயோ என்னை விட்டுடின்னு கையெடுத்து கும்பிட்டாலும் விடமாட்டாள்.

அவள் பிறந்த நாளுக்கு பாஸிட்டிவாக செய்வோம்னு ஒரு அட்வைஸ் செய்தேன். பிறந்த நாள் உடை விஷயமாய்.

“உன் உயரத்திற்கு சேலை கட்டனும்னா, லோஹிப்ல கட்டனும். அதை நீ செய்ய மாட்டே... அதனால் இந்த தடவை சுரிதார் மெட்டிரியல் எடுத்து தைக்கலாம். அளவெடுக்கும் போது உன் திருவாயை மூடி வைத்துக் கொண்டு சும்மா இரு! மாடல், மற்ற விஷயங்களை நான் கூறிக் கொள்கிறேன். அளவை மட்டும் கொடுத்து விட்டு வா! உன் பிறந்த நாளன்று நீதான் நா.ந.நி! நாகரீக நங்கை நித்யா!!” அவள் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு எரிந்தது.

இவ்விஷயத்தில் நான் சொன்னபடியேதான் செய்திருந்தாள். ஆனாலும் பிறந்த நாளன்று வந்தாளே ஒரு சுடிதாரோடு! அந்த கலர்...! ஐயோ! கண்ணைக் கூசுவது போல மிட்டாய் கலரில்...! ரெண்டு நிமிஷம் அதிகமாக பார்த்தால் கண் கெட்டுப் போய்விடும்! தலையில் அடித்துக் கொண்டேன். “நீ திருந்தவே மாட்டேடி.... நிச்சயமாய் நீ அநா.ந.நி.தான்!”

அவ்வளவுதான். அவளின் உற்சாகம் ஒரு வினாடியில் குறைந்துவிட்டது. கண்கள் குளமாகி விட்டன. அழ ஆரம்பித்து விட்டாள். பிறந்த நாளன்று கூட வெறுப்பேற்றி விட்டோமேன்னு எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

எதிர்பாராத விஷயங்கள் நடப்பதுதானே எதிர்காலம்! நினைப்பது எல்லாம் நடந்து விடுவதில்லையே! எழுபத்தைந்து சதவீத மதிப்பெண்கள், கேம்பஸ் இண்டவியூவில் செலக்சன் என்றிருந்தாலும், என்னுடைய பல வருட கனவான அமெரிக்கா வேலை மட்டும் சாத்தியமாகவேயில்லை!
நான் வேலை பார்ப்பதென்னவோ அமெரிக்கா பேஸ் கம்பெனிதான் என்றாலும், வேலை பெங்களூரில்தான். அடுத்த புராஜக்ட்க்கு அனுப்புவோம்னு சொல்லி சொல்லியே காலத்தை கடத்தி விட்டனர். இடையில் லேஆஃப் வரவும் இருக்கிற வேலை நிலைத்தால் போதும்னு, நானும் ரொம்ப நெருக்கவில்லை. கல்யாணம், குழந்தை, அவளுக்கு ஸ்கூல்னு நாட்கள் பறந்து விட்டன. என் ஹஸ்பெண்டும் சாஃப்ட்வேர் என்ஜினியர்தான். என்னைப் போலவே... என் ஆபீஸிலேயே.... ஸோ இனி ரெண்டு பேருக்கும் சேர்த்து அமெரிக்கான்னாதான் வசதியும் கூட. மொத்தத்தில் ஒரு விஷயத்தில் தெளிவாகிவிட்டேன். அமெரிக்கா கனவு இனி கானல் நீரே!

அதே நேரத்தில் நெட்டை நித்யாவின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. கல்லூரி முடித்த ஒரு வருடத்திற்குள் கல்யாணம்... அமெரிக்கா மாப்பிள்ளை... பறந்து விட்டாள்! ஃபேஸ்புக்கில்தான் விபரங்கள் அறிந்து கொண்டேன்.

எதிர்காலம் புதிரானதுதான். விதி வலியது! தகுதியான எனக்கு அமெரிக்கா கிட்டவில்லை. நித்யாவிற்கு கிட்டியிருந்தது. அமெரிக்காவிற்கு அவள் தகுதியானவளா...? சொல்லத் தெரியவில்லை. ஏன் இப்படி யோசிக்கிறேன்? மனதிற்குள் பொறாமைப் படுகிறேனோ? அதுவும் தெரியவில்லை!
எப்படியிருந்தாலும் இப்போது அவளை நான் சந்திக்க முடியாது. எப்படியெல்லாமோ அவளை வெறுப்பேற்றியிருக்கிறேன். அழ வைத்திருக்கிறேன். டென்னிஸ் பந்து நிச்சயமாய் திரும்பி வரத்தான் செய்யும். அவள் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணத் தான் செய்வாள். எட்டு வருடத்தில் அவள்  உருவமே மாறிவிட்டது. அல்ட்ரா மாடர்ன்னாக இருக்கிறாள். கல்லூரியில் எப்படியெல்லாம் இருக்கணும்னு அவளைத் திட்டினேனோ, எந்தெந்த விஷயத்திலெல்லாம் மாறச் சொன்னேனோ, அதன்படியே மாறி இருக்கிறாள். ஆனால், இந்த மாற்றம் எனக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணுவதற்கு பதில், பயத்தையே உண்டு பண்ணுகிறது. நோ...! அவள் பார்வையில் பட்டுவிடக் கூடாது.

வெளியே வந்த நான், உடனே KFCக்குள் நுழைந்தேன். மகள் ஷிவானிக்கு ஆச்சர்யம்.

”நான் கேட்காமலே கூட்டி வந்து விட்டீர்களே?” என்று சந்தோஷப்பட்டாள்! அவளுக்கென்ன தெரியும்,  என்னுடைய மனக் குழப்பம்...
’கிரிஸ்பி சிக்கன் ஸ்ட்ரைப்ஸ்’ ரெண்டு பிளேட் வாங்கிக் கொண்டு டேபிளுக்குச் சென்றால், அங்கே என் மகளோடு நித்யா பேசிக் கொண்டிருந்தாள்!

”ஹாய் ரேஷ்மி, நீ லேண்ட்மார்க்கிலிருந்து வெளியேறும் போதுதான் உன்னைப் பார்த்தேன். குஷியில் கத்தி கூப்பிடனும்னு நினைத்தேன். ஆனால், பொது இடத்தில் பெயரைச் சொல்லி கத்தாதேன்னு நீ அட்வைஸ் பண்ணியது நினைவுக்கு வந்தது. அதான், அமைதியாக பின்னாலேயே வந்தேன்!”

“என் திட்டுதலை அட்வைஸ்னு நாகரீகமாக சொல்றியே, நித்யா.... அது மட்டுமில்லை நீயே மாடர்ன்னா மாறிட்டியே...?”

“எல்லாவற்றுக்கும் நீதான் காரணம் ரேஷ்மி! கல்லூரி நாட்களில் உன்னிடம் கொஞ்சம் பயம் இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் உன்னையே ஃபாலோ பண்ண முயற்சிப்பேன். உன்னோட தோழியாக இருக்க முயற்சிப்பேன். இப்போதுகூட ஃபேஸ்புக்கில் உன் போட்டோக்களை மாடலாக வைத்துதான் என்னையே நான் மாற்றிக் கொண்டுள்ளேன்! என்னுடையே ரோல் மாடலே நீதான் ரேஷ்மி!”

கல்லூரி நாட்களில் பார்த்த அதே நித்யாதான்.... அதே வெகுளித்தனம்...

“ஹே ஷிவானி குட்டி! கார்ட்டூனில் உங்களுக்கு என்ன பிடிக்கும்?,,, ஓ...! டாம் அண்ட் ஜெரியா...? என்னோட ஃபேவரைட்டும் அதுதான்!”

அதே குழந்தைத்தனம்... நித்யா மாறவில்லை! அப்படியேதான் இருக்கிறாள்! ஆனால்... அவளின் குணம் இப்போது என்னை எரிச்சலூட்டவில்லை!

“ரேஷ்மி, நீயும் யூ.எஸ். வரலாமே?”

“முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நித்யா. கிடைக்க வாய்ப்புள்ளது. பார்ப்போம்”

“வேலை நிமித்தமாய் வரணும்னு இல்லையே. ஃபேமிலியோடு வெக்கேசனுக்கு வாயேன். ஷிவானி குட்டி, அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு எங்க வீட்டிற்கு வா. டிஸ்னிலேண்ட், நயாகரா, லீகோலேண்ட் எல்லாம் பார்க்கலாம். செலவைப் பற்றி யோசிக்காதேடி. நீ அங்கு வந்து, உன் விருப்பம் போல பத்து நாளோ, இருபது நாளோ இருந்து சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி இந்தியா வரும் வரையில் எல்லாமே என் பொறுப்பு! எனக்கு தன்னம்பிக்கை ஊட்டிய தேவதை நீ. ரேஷ்மியா இருந்தா எப்படி டிரெஸ் பண்ணிப்பா, எப்படி பேசுவா. இப்படி நினைச்சு நினைச்சு தான் நானே மாறினேன்... நீ என்னோட ஸ்பெஷல் தோழிடி!”

முதன்முறையாக நித்யாவால், என்னுடைய கண்கள் கலங்கின.

** மங்கையர் மலர்  ஜூலை 2012 தன்னம்பிக்கை சிறப்பிதழ் இதழில் வெளிவந்த சிறுகதை**

பயப்படவா


“மனைவிக்கு பயப்படும் கணவன்மார்கள் தான் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், நீங்களோ எனக்கு பயப்படுவதாய் தெரியவில்லையே”, என்று சுந்தரிடம் அலுத்துக் கொண்டாள் சுவாதி.

“ஆமாம். கதைகளிலும் ஜோக்குகளிலும் கூட அப்படித்தான் வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?”

சுந்தர் யோசித்தான்.

வினோதிற்கு தன் லேட்நைட் பார்ட்டியை தடை செய்து விடக்கூடாது என்ற பயம். கார்த்திக்கிற்கு, தான் ரேஸாடுவது தெரிந்து விடக் கூடாது. பிரேமிற்கு, சக ஸ்டெனோவிடம் பழக்கம்.

“பொய்.. பொய் சொல்வதுதான் பயத்திற்கு காரணம்”, என்ற சுந்தர், “இப்ப சொல்லு. நானும் உனக்கு பயப்படவா?”

“வேண்டாம்”, என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

** மங்கையர் மலர் பெட்டிக் கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை**

Tuesday, September 24, 2013

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர்.பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். “இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்டு வந்து விடுவார்” என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள்.

அவள் இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்டு, சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன்முறையாக. ‘என் வாழ்க்கை இவ்வளவுதானா?’ என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
எட்வர்டு தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க அவனால் இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவை சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்டு சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை அன்றே அவளிடம் கூறிவிட்டான். உடன் தன் நிலைமையையும் எடுத்துரைத்தான்.

ஆனால் லூசியாவோ, “உங்கள் குழந்தைகள் விருப்பமும் எனக்கு மிக முக்கியம்”, என்று கூறிவிட்டாள். மறுநாளே சந்தித்தான் குழந்தைகளுடன். அவள் அன்பாக பேசிய சில நிமிஷங்களிலேயே குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் வயது அப்படி.

வீட்டிற்கு வந்த சில நாளிலேயே எட்வர்டு மனதிலும், குழந்தைகள் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் லூசியா. வீட்டை அவ்வப்போது மாற்றங்கள் செய்வது, புதியவகை உணவுகள் தயார் செய்வது என முழுமையாக தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்து விட்டாள். முக்கியமாக குழந்தைகள் கவனிப்பில் அவளை மிஞ்ச அவளேதான். குழந்தைகள் தன்னை ‘லூசியா’ என்றே அழைக்கப் பழக்கப்படுத்தியிருந்தாள். இதனால், குழந்தைகளுக்கும், தனக்குமுள்ள இடைவெளி குறையும் என்பது அவள் எண்ணம். தினமும் கதை கூறுவாள். அடிக்க மாட்டாள். ஆனால், கண்டிப்புடன் இருப்பாள். மொத்தத்தில் தங்கள் அம்மாவையே மறக்கச் செய்து விட்டாள். அவர்கள் வளர்ந்து தன் வழியே சென்றபின், எட்வர்டு மட்டுமே அவளின் உலகமானான்.

‘டிங் டாங்’. அழைப்பு மணி ஓசை அவளை இக்காலத்திற்கு மீட்டது. சுயநினைவு வந்தவளாய், உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்தது. எட்வர்டு தான் வந்தான்.

அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டேக் கேட்டாள். “எட்வர்டு, நான் உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?”

“இது என்ன புது கேள்வி?! எப்போதும் நீதான் பேசுவாய். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைக்கு என்ன ஆச்சு?”

அவன் ஹாஸ்யத்தை அவள் ரசிக்கவில்லை.

“இல்லை.. என்னைப் பற்றி பேச வேண்டும்”

அவன் அவளை விநோதமாகப் பார்த்தான். ‘இன்று இவளுக்கு என்ன ஆச்சு’என்ற விநோதப் பார்வை.

“சரி, சொல்லு”, என்றான் எட்வர்டு, மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.

“எட்வர்டு, நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டதாக உணர்கிறேன்”

அவளை ஆழமாகப் பார்த்தான். இன்று லூசியா அவளாகவே இல்லை.

“எனக்கு நீங்கள், குழந்தைகள், சமையலறை தவிர வேறு ஒன்றுமே என் வாழ்க்கையில் இல்லை. இத்தனை நாள் இப்படி, எப்படி இருந்தேன் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களோடு இருபது வருடம் வாழ்ந்து விட்டேன். ஆனால், அதனால் நான் சாதித்தது என்ன??..” அவள் பேசிக் கொண்டே போனாள்.

அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. லூசியா எப்படி இப்படி மாறினாள் என அதிசயித்தான். இத்தனை நாள் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இப்போதாவது சிந்தித்தாளே என்று மகிழ்ந்தான். ஆனால், அடுத்த நொடி சற்றே நிதானித்து விழித்துக் கொண்டான்.

அவர்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் ஞாபகமாக ஞாபகத்திற்கு வந்தது.

“உன் பெயர் என்ன?”

“லூசியா. உங்கள் பெயர்?”

“எட்வர்டு. உன் வயது?”

“ஆறு!”

அப்படியானால், இவள் வயது இப்போது இருபத்தியாறு. எப்படி மறந்தேன் இதை. அவளின் அன்பின் பிடியில் மறந்து விட்டேன் போலும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி விட்டது. இது ஆபத்தின் அறிகுறி. சட்டென்று தன் லேசர் பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பது போல கீழே குனிந்தான்.

அவளின் கெண்டைக் காலில் மச்ச்ம் போன்ற ஒன்று இருந்தது. சட்டென அதை அழுத்தினான்.

“எட்வர்டு, என்ன செய்கிறாய்?” பதட்டமானாள்.

அவன் பிடியை விடவில்லை.

“விடு என்...”, பேச்சிழந்தாள்.

அதன் பிறகும் ஒரு நிமிடம் கழித்தே தன் பிடியை விட்டான். ’அப்பாடா’ என்றிருந்தது அவனுக்கு.அவன் அவளை, இல்லை, அதை தூக்கி ஓரமாக நிறுத்தி விட்டு, அவளை வாங்கிய இடத்திற்கு போன் போட்டு ‘Switch off' செய்து விட்டதை கூறினான்.

சோபாவில் கண்மூடி சாய்ந்தான். ‘லூசியாவை பிரியணும்’ என்ற எண்ணம் அவனை வதைத்தது. ‘ஆனாலும், லூசியா இல்லாவிட்டால் என்ன... வேறு ஒரு ஃபெல்சியாவோ, ஆசியாவோ வரப்போகுது. செய்யும் வேலைகள் ஒன்றுதானே’, என்று சமாதனமானான்.

ஆனாலும் ஒரு ரோபோ எப்படி இருபத்தைந்து வருடங்களில் சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு மட்டுமல்ல. பலருக்கும் இன்னும் அது புரியாத புதிராகவே உள்ளது. இந்த 24ம் நூற்றாண்டிலும் கூட!

எழுதியவர் மீனு

Wednesday, September 11, 2013

செல்வ மகன்

Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 11.00am

பிரியமுள்ள அப்பா,
நம் வீட்டில் உள்ள வீடியோ கேம்ஸ் ரிப்பேராகி விட்டது. கேஸட்டுகளும் பழையதாக உள்ளது. ஆபீஸ் விட்டு வரும்போது, புது பிளேயரும், கேஸட்டுகளும் வாங்கி வாருங்கள்.



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 11.05am

செல்வ மகனே!
இரண்டு மாதத்திற்குள் மூன்றாவது பிளேயரை காலி பண்ணிவிட்டாய்! பனிரெண்டு கேஸட்டுகளுமா சரியில்லை? இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணு. ஆபீஸில் ஒரு பிரச்சனை. அப்பா பிஸியாக இருக்கிறேன். டிஸ்டர்ப் பண்ணாதே.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 11.10am

கஞ்சூஸ் டாடி,
உங்கள் சக ஆபீஸர் வீட்டில் கழித்த ஓசிக் கேஸட்டுகள்தான் நம் வீட்டில் உள்ளன. மார்க்கெட்டில் புதியது நிறைய வந்துள்ளன. ஸோ, பிளேயர் & கேஸட்டுகள் அவசரம்!



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 11.15am

அதிகபிரசங்கி விச்சு,
அவை ஒன்றும் ஓ.சி.யில் கிடைக்கவில்லை....நீ பேசாமல் டி.வி.யில் பவர் ரேஞ்சரோ, ஜாக்கிசானோ பார். இங்கு ஆபீஸில் ஸ்டாக் ரிப்போர்ட் டேலி ஆகவில்லை. ஜீ.எம். என் தலையை உருட்டுகிறார். ரெண்டு நாளில் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங். அதற்குள் பலவித ரிப்போர்ட்டுகள் ரெடி பண்ண வேண்டும். இன்னமும் ஸடாக்கே closeஆக மாட்டேன்குது. டோன்ட் டிஸ்டர்ப் மீ. உன் பிரச்சனைகளை அம்மாவிடம் கூறு.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 12.05pm

டாட்,
அம்மாவிற்கும், எனக்கும் டி.வீ. பார்ப்பதில் ஒரே போராட்டம். டி.வி.யை மெகா சீரியலுக்கும், ஜெட்டிக்ஸுக்கும் மாற்றியதில் ரிமோட் பட்டன் உடைந்து விட்டது. ஆபீஸில் இருந்து வரும் போது ஸோனி மாடலுக்கு உரிய ரிமோட் ஒன்று வாங்கி வரவும்! எனக்கு ரொம்ப போரடிக்குது.



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 12.20pm

சன்,
பிளே பிரிக் கேம்.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 12.30pm

ஞாபகமறதி டாடி,
பிரிக் கேம் உடைந்து போய் ஒரு மாதம் ஆகி விட்டது! நீங்கள் வரும்போது அதிலும் ஒன்று வாங்கி வாருங்கள்! மேலும், என் பிரண்டு பிரதீப் வீட்டில் உள்ளது போல ஒரு லேப்டாப்பும், பிராட்பேண்ட் கனெக்ஷனும் வாங்கிக் கொடுத்து விட்டால், உங்களை ஒரி பண்ணாமல், சமர்த்தாக இருப்பேன்!



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 12.32pm

பேராசைக்கார பையா,
பெரிய பட்ஜெட்டாக இழுத்து விடாதே! பிரிக் கேமே வாங்கி வருகிறேன்! அது சரி. எப்போதும் எலக்ட்ரானிக்ஸ் சாதன சகவாசம்தானா? வெளியே போய் கிரிக்கெட், புட்பால் விளையாடலாமே?



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.00pm

சாரி டாடி,
நீங்கள் சொன்னபடி கிரிக்கெட் ஆடியதால் ஒரு பிரச்சனை. என் பேட்டிங் திறமையால், எதிர் வீட்டு ஜன்னலில் கீறல் விழுந்து விட்டது. சதீஷ் அங்கிள் திட்டிக் கொண்டிருக்கிறார். என்ன செய்ய?



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.05pm

சேட்டைக்கார விச்சு,
இங்கேயோ பேலன்ஸ் டேலி ஆகாமல் நான் அவதிப்படுகிறேன். நீ வேறு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறாய். நான், உன் பிரச்சனையை கவனிக்கவா? இல்லை, ஆபீஸ் பிரச்சனையை கவனிக்கவா? இங்கி பிங்கி பாங்கி போட்டுத்தான் பார்க்க வேண்டும்!



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.30pm

அதிர்ஷ்டக்கார அப்பா!
சதீஷ் அங்கிள் வீட்டுப் பிரச்சனை சால்வ்டு. அந்த ஜன்னலில் ஏற்கனவே கீறல் உண்டாம்! இருந்தாலும் அவர் கிரிக்கெட் பாலை பிடுங்கி வைத்துக் கொண்டார். வரும்போது ஒரு பால் வாங்கி வரவும்.



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.40pm

விச்,
உனக்கு இனி பதில் அனுப்பப் போவதில்லை. இன்னமும் ரிப்போர்ட் ரெடியாகவில்லை. ஜி.எம். காச் மூச் என்று கத்துகிறார். நைட் வீட்டிற்கு வருவதே கஷ்டம். நீ கீபோர்டு கிளாஸுக்கு போ. நாளை பார்ப்போம்.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.50pm

அப்ஸ்,
நல்லவேளை...ஞாபகப்படுத்தினீர்கள். போன கிளாஸில் என் கீபோர்டின் அடாப்டர் உடைந்து விட்டது. எனக்கு அது உடனே வேண்டும்.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.52pm

அப்ஸ்,
நல்லவேளை...ஞாபகப்படுத்தினீர்கள். போன கிளாஸில் என் கீபோர்டின் அடாப்டர் உடைந்து விட்டது. எனக்கு அது உடனே வேண்டும்.



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.55pm

சிறிது நேரம் தொந்திரவு பண்ணாமல் இருக்க மாட்டாயா? ஒரே மெசேஜை இரண்டு முறை வேறு அனுப்பி இருக்கிறாய்.



Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 4.00pm

சாரி டாடி,
தவறுதலாய் இரண்டு முறை சென்ட் பட்டனை அழுத்தி விட்டேன். வெரி சாரி. அடாப்டரை மறந்து விடாதீர்கள்.



Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 4.45pm

பெருமைக்குரிய விச்சு!,
உன்னுடைய டபுள் மெசேஜ்தான், ஆபீஸ் பிரச்சனையை தீர்த்து விட்டது! யெஸ்.. ஒரு ஸ்டாக் என்ட்ரி இரண்டு முறை எண்டர் ஆகியிருந்தது. அதை சரி செய்து விட்டோம். கம்பெனி லாபம் அமோகம். டைரக்டர் உற்சாக மிகுதியில், எல்லோருக்கும் போனஸ் அறிவித்து இருக்கிறார். பிரச்சனையை சால்வ் பண்ணியதற்கு எனக்கு சிறப்பு போனஸ்! இன்னும் இரண்டு நாட்களில், நாம் உன் அயிட்டங்களை வாங்கி விடுவோம்!

Sender :- xxx 9842252132
Receiver :- அப்பா 9949426466
Time :- 4.55pm

சந்தோஷ அப்பா!
உங்கள் விச்சுதான். பக்கத்து வீட்டு அண்ணா செல்லில் இருந்து அனுப்புகிறேன். உங்கள் மெசேஜை படித்ததும், குஷியில் துள்ளிக் குதித்தேன். அப்போது என் கையில் இருந்து செல்போன் நழுவி தண்ணீர் வாளிக்குள் விழுந்து விட்டது. அது இனி உபயோகப்படாது என்றே எண்ணுகிறேன். எனவே, என் லிஸ்டில் ஒரு கேமிரா செல்போனையும் சேர்த்து விடுங்கள்!

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**

செல்லுன்னு ஒரு காதல்

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 05.00 pm

மாட்டினாயா, திரு திரு திவ்யா? ஹா! ஹா! ஹா!

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 05.10 pm

திமிர் பிடித்த தினேஷா,

என்னை மாட்டிவிட்டதில் அப்படியென்ன சந்தோஷம்? எனக்கு தில் இருக்கு! பிட் அடிச்சேன். உனக்கு ஏன் புகை?

‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்;
ஆனால் காப்பாத்துவான்!
கெட்டவங்களை ஹா ஹான்னு சிரிக்க வைப்பான்;
ஆனால் கை விட்டுடுவான்!’

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 05.20 pm

திருட்டு ராணி திவ்யா!

அந்த காலத்து Girls எங்களை படிச்சு முந்தினாங்க. இப்ப, நீங்க, பிட் அடிச்சில்ல முந்துறீங்க!
அடேங்கப்பா! எங்கெங்கெல்லாம் பிட்ட ஒளிச்சு வைக்கிறீங்க!

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 05.30 pm

திறமையில்லாத தினேஷா!

‘மற்றவங்க Talentsஅ மதிக்காதவனும் ...
போட்டுக் கொடுக்கும் பொடிப் பசங்களும் ...
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’

நீ என்னை மாட்டி விடுவாய்ன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 05.35 pm

நீ காப்பியடிப்பாய்ன்னு நான் கூடத்தான் எதிர்பார்க்கவில்லை, திவ்யா. சப்ஜக்ட் வரலைன்னா டியூசன் படிக்கலாமே?
வெல் .. வெறும் 4 ரூபாய் பேலன்ஸ் வைத்துக் கொண்டு மெசெஜ் மேல் மெசெஜ் அனுப்புறீயே? கட்டுப்படியாகுமா?

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 05.45 pm

“தோ ... டா ...!

பன்னிங்க தான் ஏகப்பட்ட பேலன்ஸில் அலையும்.
சிங்கம், சிங்கிள் ரூபாயிலேயே சமாளிக்கும்!”
Free SMS டா!

பைசா வாங்காமல் டியூசன் எடுக்க யார் இருக்கிறாங்க?

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 06.15 pm

உட்கார்ந்து யோசித்தால், நானே உனக்கு டியூசன் எடுக்கலாம்னு தோணுது, திவ்!
நாளை enquiryல் நீ தப்பிக்கவும் என்னிடம் பிளான் உள்ளது!

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 06.20 pm

தின்,

என்னை ஏமாத்தலையே ... ஜாக்கிரதை ...

‘எனக்கு பின்னால் ஒரு கூட்டமே உள்ளது ... !
அன்பாலான கூட்டம் ... !
அன்பு சாம்ராஜ்யம் ... !’

கரிசனத்திற்கு காரணம் என்னவோ?

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 06.35 pm

அதான் சொன்னேனே திவ்வு குட்டி!!! உட்கார்ந்து யோசித்தால், நீ அழகா இருக்கிறே!!! உன்னை லவ் பண்ணலாம்னு தோணுதுன்னு!!!
நாளையே டியூசன் ஆரம்பிப்போமா?

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 06.50 pm

இந்தி நடிகர்கள் நினைப்பில் திரியும் தின்னு பையா,

நீ மீசை வைத்தால் டியூசன் படிக்க ரெடி! என் டி.மா. ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா?!
தென், பிளான் என்னவோ?

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 07.00 pm

ஸ்வீட்டி திவ்யா,

உன்னை மாட்டி விட வேண்டும்னு, நான் தான் பிட் எழுதி, உன் பாக்ஸில் வைத்ததாகவும், எக்ஸாம் ஹாலில் திடீர்னு அதைப் பார்த்ததும் டென்ஷனாகி ஒளித்து வைத்ததாகவும் கூறி விடு! நானும் ஒப்புக் கொள்கிறேன். எனக்கு வார்னிங்கோடு முடிந்து விடும்!


From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 07.10 pm

தூள் கிளப்புறீயே தினேஷா,

பிளான் பிரமாதம்!
என்ன? உனக்கு தான் சிக்கல்.

‘காவியங்கள் உனைப் பாட
காத்திருக்கும் பொழுது
காலேஜ் பிரின்சி யிடம்
மாட்டி விடு வாயே ...’

From :- தினேஷ்
Date :- 26.01.2010
Time :- 07.15 pm

தாங்க முடியவில்லை திவ்யா

முதல்ல ரஜினி வசனம் பேசறதை நிறுத்திறீயா!
இன்னைக்கு மெசெஜுக்கு காசு உண்டுங்கிறதை மறந்துட்டியா? உன் balanceல்லாம் பணால்!

மீசை வளர்க்க முடிவு செய்து விட்டேன்! (டி. மா. ஆக) என்னை “ஏற்றுக்” கொள்வது உன் கையில்!!

From :- திவ்யா
Date :- 26.01.2010
Time :- 07.30 pm

தினேஷ் கண்ணா!

என்னுடைய இதய மாஸ்டராகவே உன்னை ஏற்றுக் கொண்டேன்டா!!

By the bye, உன் அன்பு காதலிக்காக சில்லறை காசு 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ண மாட்டாயா !!!

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**

Tuesday, September 10, 2013

விச்சுவின் சாகசங்கள்


பள்ளி அலுவலகத்தில் அமர்ந்திருந்த விச்சுவை விட அம்மா தான் படபடப்போடு இருந்தார்.

ஆறாவதுக்கு அட்மிஷனே இப்படி உள்ளது! நன்கொடை கேட்காத, ரெண்டு பள்ளிகளில் இந்த பயல் தேர்வாகவில்லை. இந்த ஒன்றில் தான் அதிசயமாக இண்டர்வியூவிற்கு அழைத்துள்ளார்கள். செலக்ட் ஆகி விடுவானா?

அம்மாவின் பி.பி. எகிறிக் கொண்டிருந்தது.

“உனக்கு கொஞ்சங்கூட கவலை இல்லையாடா?”

“நானும் டென்ஷனில்தான் உள்ளேன்மா ... “

“நிஜமாகவா?”

“ம்ம் .. இங்கு லேட்டாவதைப் பார்த்தால், பென் டென்னை தவற விட்டு விடுவேன்னு நினைக்கிறேன்!”

“படவா ... சீட் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறேன். உனக்கு கார்ட்டூன் கவலையா?”

கோபப்பட்ட அம்மாவிடம் விச்சு, “கூல்!”, என்று சிவாஜினான்.

முதல்வரின் அழைப்பு வந்தது.

அறைக்குள் இருக்கையில் அமர்ந்த பின்பும் அம்மாவின் நடுக்கம் குறையவில்லை.

“ஓ ... நீ தானா அது?”, விச்சுவின் நுழைவுத் தேர்வு விடைத்தாளை பார்த்துக் கொண்டே கேட்டார் முதல்வர்.

“இந்த பதில் தான்! குட், குட்!”

அம்மாவின் மனதிற்குள் ஒரு நம்பிக்கை துளிர்ந்தது. ஏதோ ஒரு பதில் முதல்வரை கவர்ந்துள்ளது.

”எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்? என்ற கேள்விக்கு நீ எழுதிய பதில் என்ன, விஷால்?”

“ஆர்க்கியாலஜிஸ்ட், மேம்!”

“குட், குட்! பத்து வயது மாணவன் லட்சியத்தோடு இருப்பதே பாராட்டுக்குரிய விஷயம். அதிலும் நீ வித்தியாசமான துறையை அல்லவா தேர்ந்தெடுத்துள்ளாய்!”

ஆர்க்கியாலஜிஸ்ட்ன்னா என்ன .. ? புதுசா இருக்கே .. ? ஜோதிட படிப்போ?

குழம்பிக் கொண்டிருந்தார் அம்மா.

“ஆர்க்கியாலஜிஸ்ட்டோட கடமைகள் என்னென்ன, விஷால்?”

“பழங்கால பொருட்களை கண்டுபிடிப்பது, பாதுகாப்பது, அதன் வரலாற்றை அறிந்து கொள்வது ...”

“வெரிகுட்! நீ செலக்ட் ஆகி விட்டாய்!”

“தேங்க்யூ மேம்!”

அம்மா தான் ஆச்சர்யத்தில் இருந்தார். இந்த பெயரை நானே இப்போதுதான் கேள்விப் படுகிறேன். விச்சுவுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்துள்ளது. வெளியே வந்ததும் அவனிடமே கேட்டார்.

“கார்ட்டூன் பார்ப்பதில் உபயோகமே இல்லைன்னு இனி சொல்லாதிங்கம்மா ... ஏன்னா இது ... ஜாக்கிசானின் சாகசங்கள்மா!”

“அடப்பாவி!”

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை**

விச்சுவின் டைரி


முதல் பக்கம்

என்னுடைய டைரியில் வில்லங்கத்தையோ, விறுவிறுப்பையோ, வித்தியாசமான கருத்தையோ எதிர்பார்ப்பவர்கள் மட்டுமன்றி, மற்ற அனைவருமே இதை வாசிக்காமல் மூடி விடுங்கள்!

ஏனென்றால் இது கதையல்ல! நிஜம்!!

 _ விச்சு ESSLC


Jan 1

”இவனுக்கெல்லாம் எதுக்கு டைரி? சோம்பேறியாய் இருப்பான். டைரியெல்லாம் எழுத மாட்டான்”னு அம்மா சொல்றாங்க. அதுக்காகவாவது தினமும் எழுத வேண்டும்.

டெய்லி காலை 6 மணிக்கே எழுந்து விட வேண்டும்னு New Year Resolution எடுத்துள்ளேன். Oh, God, நீ தான் என்னை எழுப்பி விட வேண்டும்!

Jan 3

ச்சே... 2ம் தேதியே எழுத மறந்து விட்டது. இனி ஒருநாளும் எழுதாமல் விடக் கூடாது. டேய் டைரி, நீயாவது என்னை ஞாபகப்படுத்தலாம்ல. செல்போன்களில் அலாரம் இருப்பது போல, டைரியிலும் அலாரம் இருந்தால் வசதியாக இருக்கும். நாமதான் அப்படி ஒரு டைரி கண்டு பிடிக்க வேண்டும்!


Jan 6

எழுந்திருக்கவே 7.30 ஆகிவிட்டது. குளிக்கவில்லை. Only facewash. சரியா சாப்பிடலை. ஸ்கூலுக்கு போய் விட்டேன். வீட்டுக்கு வந்ததும், அம்மாவிடம் ஒரே திட்டு. சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமாம்! என்ன செய்வது? எனக்கு காலையில் தானே நல்லா தூக்கம் வருது...

Jan 7

பால் கணக்கு

ஜன 1 - 3/4  + 1/2

ஜன 2 - 3/4  + 1/2

ஜன3 - 1/2  + 1/2

ஜன4 - 3/4  + 1/2

ஜன5 - 3/4  + 1/2

ஜன6 - 3/4  + 0


Jan 8

ஜன 7 - 3/4  + 1/2

ஜன 8 - 1/2  + 1/2

ஜன 9    - 3/4  + 3/4

ஜன 10   - 3/4  + 1/2

ஜன 11   - 3/4  + 1/2


Jan 12

அம்மா கூட இன்று சண்டை. நாலு நாள் டைரி எழுதல்லைன்ன உடன் பால் கணக்கு எழுத ஆரம்பித்து விட்டார்கள். பாலுக்கு வேறு நோட் போட்டு கொடுத்தேன்.

ஸ்கூலில் Pongal Celebration. டீச்சர்ஸ் பொங்கல் செய்து கொடுத்தார்கள். சகிக்கலை! Gum மாதிரி இருந்தது.

Jan 17

பொங்கல் லீவிற்கு friends எல்லாம் டூர் கிளம்பிவிட்டார்கள். நான் எங்கும் போகவில்லை. வீட்டிலேயே இருந்து கரும்பு, பனங்கிழங்குகளை காலி பண்ணினேன்! நல்லா தூங்கினேன். ஜாலியா இருந்தது. அம்மாதான் திட்டிட்டே இருந்தாங்க. ஆமாடா விச்சு, நானுந்தான் கேட்கிறேன், உன் சோம்பேறித்தனத்திற்கு காரணம் தான் என்ன? ஒருவேளை ... ஜீன்ஸ் தான் காரணமாக இருக்குமோ?

Jan 21

இன்னிக்கு classல் ரன்னிங் ரேஸ். 4th place தான் கிடைத்தது. கொஞ்சம் வேகமாக ஓடியிருந்தால் சுதாகரை முந்தியிருக்கலாம். 3rd ஆவது கிடைத்திருக்கும். நீ ஓடும் போதே தூங்கியிருப்பேடான்னு அம்மா கிண்டல் பண்றாங்க.

Jan 26

8.30 மணி ஸ்கூலுக்கு கிளம்பவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். இன்று என்னடான்னா “மார்ச் ஃபாஸ்ட்”ன்னு 7 மணிக்கே ஸ்கூல் வரச் சொல்லி விட்டார்கள். யாருப்பா இந்த குடியரசு தினத்தை கண்டுபிடிச்சது?

Feb 6

இன்று லீவு. கிரிக்கெட் விளையாடிய போது, கதிர் அடித்த பந்தால், மண்டையில் பட்டு ரத்த காயம்! எனக்கில்லை! பக்கத்து வீட்டு அங்கிளுக்கு! கதிர் ஓடி விட்டதால், அவர் என் வீட்டிற்கு வந்து திட்ட, அம்மாவும் சேர்ந்து என்னை காய்ச்சி எடுத்து விட்டார்கள். Don't worry விச்சு. ‘எதிர்கால சச்சின்’ வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்டா!

Feb 17

அம்மா B'day. Greetings ரெடி பண்ணி கொடுத்தேன். ஹப்பா ... இன்று தான் அம்மா என்னை திட்டாமல் இருந்தார்கள்! இதுக்காகவாவது அம்மாவிற்கு தினமும் B'day வர வேண்டும்!

Mar 7

நாளைக்காவது 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

Mar 14

வருஷத்தில் ஏதாவது problem இருக்குமோ? ராசியில்லாத வருஷமா இருக்கே! என்னுடைய New Year resolution படி, ஒருநாள் கூட, எழுந்திருக்க முடியவில்லையே?

நாளை Exam ஆரம்பிக்குது. Exam Timeல்லாவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்டா விச்சு.

Apr 5

ஹையா! லீவு started! டேய் டைரி, லீவு முடியும் வரை உன்னை தொட மாட்டேன். அண்ணன் பிஸி!

இந்த வருடத்தில் இன்று தான் முதன்முதலாக 6 மணிக்கே எழுந்து விட்டேன்! கிரிக்கெட், டிவீ, வீடியோ கேம்ஸ்ன்னு ஜாலியா enjoy பண்ணினேன்.

“லீவுல இருக்கிற சுறுசுறுப்பு, ஸ்கூல் டேஸ்ல எங்கடா மாயமா போயிடுது”ன்னு அம்மா தான் திட்டிட்டே இருக்காங்க ... இப்ப தெரியுதாம்மா! என் சோம்பேறித்தனத்திற்கு காரணமே ஸ்கூல் தான்னு ...!


[ விச்சுவின் டைரியில் அதற்கப்புறம் எழுதப்படவில்லை ]

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை**

Monday, September 09, 2013

பொன்னியின் ‘செல்’வன்


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


தேவி,

நந்தினியின் மிரட்டலை மீறி, ஆ.கரிகாலர் அருகிலேயே இருந்து அவரை பாதுகாத்து வருகிறேன். இருப்பினும் இங்கு நடைபெறும் பேச்சு வார்த்தைகளும், சம்பவங்களும் சற்று காரசாரமாகவே உள்ளன. 'என்ன நடக்குமோ?' என்று பயமாக உள்ளது.

பி.கு. :-

சக்ரவர்த்தி, பொன்னியின் செல்வர் இருவருக்குமே ஆபத்து இருப்பது போல உள்ளது.  அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும்.

x-----x



Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Date :- 30-09-0969


சோழ நாட்டின் பெருந் தனாதிகாரி அவர்களே,

வந்தியத் தேவன் இங்கு வந்து, இளவரசரிடம் ஏதோ சொல்லியுள்ளான். அதிலிருந்து, அவர், மட்டு மரியாதை இல்லாமல், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறார். என் வீட்டில் ஏடாகூடம் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Date :- 30-09-0969


சம்புவரையரே,

சோழ நாட்டை, இரண்டாக பிரிக்கும் யோசனைக்கு, கரிகாலன் ஒத்துக் கொண்டு, நாம் விரும்பியபடி காரியம் நடந்தால் நல்லது. இல்லையேல் மோசம் ஒன்றுமில்லை. Don't worry.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- குந்தவை 9900022244
Date :- 30-09-0969


ஐயோ, இளவரசி,

சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டதற்காக, என் அரண்மணையில், என் முதுகிற்கு பின்னே, எவ்வளவு பெரிய சதி இடம்பெற அனுமதித்துள்ளேன். நூற்றாண்டுகால பழுவூர் - சோழ உறவிற்கு களங்கம் எற்படுத்தி விட்டேனே. ஐயகோ! பாண்டியன் ஆபத்துதவிகள், ஒரே நாளில் அரசர் மற்றும் 2 இளவரசர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர். ஒரு நாசகாரியை, நல்லவள் என்று நம்பி, மனையாளாக்கியதன் வினை இது. அம்மணி, அரசரையும், அருள்மொழியையும் காப்பது உன் பொறுப்பு. கரிகாலனை காப்பாற்ற நானே கடம்பூர் செல்கிறேன்.

x-----x


Sender :- கடம்பூர் சம்புவரையர் 9900050001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 03-10-0969


சோழ சக்ரவர்த்திக்கு,

கடம்பூர் அரசர் சம்புவரையர் வருத்தத்துடன் அனுப்பும் செய்தி. சேவூர் போர்க்களத்தில் பாண்டிய படைகளை சூறையாடிய இளவரசர் ஆதித்த கரிகாலர், இன்று எதிரிகளின் சூழ்ச்சியால் அகால மரணமடைந்தார். தங்கள் மகனை கொன்ற எதிரி வந்தியத்தேவனை சிறைப் பிடித்து வைத்துள்ளேன்.

x-----x


Sender :- வந்தியத்தேவன் 9900077007
Receiver :- குந்தவை 9900022244
Date :- 03-10-0969


Sorry இளவரசி. ஆ.கரிகாலரை காப்பாற்ற இயலவில்லை. என்னை மயக்கமடைய வைத்து, கரிகாலரை கொலை செய்து உள்ளார்கள். But, பழியை என் மீது போடுகிறார்கள். என்னை காப்பாற்றுங்கள்.

பி.கு.:-

பெ.பழுவேட்டையர் மனது வைத்தால் என்னை நிச்சயம் காப்பாற்றலாம்.


x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 06-10-0969


தம்பி,

கடவுள் அருளால், நீயும், தந்தையும் உயிர் தப்பி விட்டீர்கள். எனினும், கரிகாலனை கொலை செய்ததாக பழி சுமத்தப்பட்டு வந்தியத்தேவர் சிறைபட்டிருக்கிறார். அவருக்கு நீ உதவ வேண்டும்.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 06-10-0969


அக்கா,

அண்ணனை கொலை செய்ய வந்தியத்தேவரை, நான்தான் ஏவியுள்ளேன் என்று கடம்பூர்காரர்கள் வதந்தி பரப்பியுள்ளனர். சிறை நிர்வாகத்தை வேறு, சி.பழுவேட்டையரிடமிருந்து வலுக்கட்டாயமாக பெரிய வேளார், பூதி விக்கிரமகேசரி பறித்துள்ளார். வந்தியத்தேவர் நிரபராதி என்பதை நன்கு அறிந்தும், என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 07-10-0969


தம்பி,

மக்கள் அனைவரும் அடுத்த அரசராக உன்னையே ஆக்க வேண்டும் என்கின்றனர். பெரிய வேளாளரிடம் பேசினேன். அவரும் அதையே வலியுறுத்துகிறார். நீ அரசராகி, வ.தேவரை விடுதலை செய்ய கட்டளையிட்டால், அதை விருப்பத்துடன் obey பண்ணுவதாய் கூறுகிறார். what to do? I'm also in confusion.

x-----x


Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- குந்தவை 9900022244
Date :- 07-10-0969


அக்கா,

நீ confuse ஆவதில் அர்த்தமே இல்லை. பெரிய வேளாளர் நிர்பந்தித்தாலும், நீயே வலியுறுத்தினாலும், மக்கள் போராட்டமே நடத்தினாலும், நான் அரசராக விரும்பவில்லை. அனாவசியமாய் என் மீது, சிறு சந்தேகம் எற்படுவதையும் விரும்பவில்லை. வந்தியத்தேவரை கடவுள் காப்பாற்றுவார்.

x-----x


Sender :- குந்தவை 9900022244
Receiver :- அருள்மொழி வர்மர் 9900033333
Date :- 08-10-0969


தம்பி,

கரிகாலன் கொலையுண்ட சமயத்தில், நடந்த விஷயத்தை அறிந்த ஒரே நபர் பெ.பழுவேட்டையர்தான். அவர் உண்மையைக் கூறினால், வ.தேவர் தப்பிப்பார். எனினும், அவரை கேள்வி கேட்க, தந்தையே விரும்ப மாட்டாரே? அவராக உண்மையை கூறினால்தான் உண்டு.

x-----x


Sender :- பெரிய பழுவேட்டையர் 9900040001
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 10-10-0969


மகாராஜா,

இளவரசரை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னிக்கவும். இளவரசரை கொன்றது என் மனைவி நந்தினியே. எனக்குத் தெரியாமலேயே, என் முதுகிற்கு பின்னே, இந்த சதியை நடத்தி முடித்து தப்பி ஓடி விட்டாள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று என்னை நானே மாய்த்துக் கொள்கிறேன். வந்தியத்தேவன் நிரபராதி. மேலும், சோழநாட்டு மகுடத்திற்கு மதுராந்தகனை விட பொன்னியின் செல்வரே தகுதியானவர். மக்களும் அவரையே விரும்புகின்றனர். அவரையே அடுத்து அரசராக்கவும். வாழ்க சோழநாடு.

x-----x

Sender :- அருள்மொழி வர்மர் 9900033333
Receiver :- சுந்தரச் சோழர் 9900011111
Date :- 12-10-0969


அப்பா,

அண்ணன் கொலையுண்ட சிறிது நாட்களில் தம்பி அரியணை ஏறினால், என் மீதுதான் தவறான சந்தேகம் வரும். என் சிற்றப்பா மதுராந்தகர், என்னை விட வயதில் மூத்தவர். சிவபக்தர். அரசராக எல்லா தகுதியும் உடையவர். அவரையே, அரசராக நியமிக்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் அவரின் கீழ் சாதாரண வீரனாய் பணிபுரியவே நான் விரும்புகிறேன்!

x-----x


Sender :- CHOLACEL Service centre 9900099000
Receiver :- All CHOLACELLERS 99000xxxxx
Date :- 20-10-0969

அன்பு குடிமக்களே,

என் தம்பியும், கண்டராதித்தரின் புதல்வனும், சிறந்த சிவநேசனுமாகிய மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனை இன்று முதல் அரசனாக மகுடம் சூட்டுகிறேன். அவர் ஆட்சியில் சோழர் குலம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன். அடுத்தவாரம், என் செல்வ புதல்வி குந்தவைக்கும், வாணர் குல வீரர் வந்தியத் தேவனுக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து குடிமக்களும் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தும்படி அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த சந்தோஷ நிகழ்வுகளுக்கு பரிசாக, அனைத்து குடிமக்களும், Lifetime free incoming வசதியுடன் கூடிய Simcardம், "Cholokia" செல்ஃபோன் ஒன்றையும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்! வாழ்க சோழநாடு!!

- சுந்தரச் சோழர்.

x-----x

கதை வாசித்த சில இணைய நண்பர்கள், பல characters பற்றி கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக,

1. ஆழ்வார்கடியான், அநிருத்தரின் messages CRIPT ஆகி உள்ளதால் அதனை decode பண்ணும் வேலை நடைபெறுகிறது.
2.பூங்குழலி cellஐ bay of bengalல் தவற விட்டு விட்டாள்.
3. வானதி cellஐ கொடும்பாளுரில் மறந்து வைத்து விட்டாள்.
4. ரவிதாஸன் ரோமிங்கில் இருப்பதால் cellஐ use பண்ணவே இல்லை.
5. ஊமை ராணிக்கு பலவித ringtones கேட்டதால்தான் பைத்தியம் பிடித்துள்ளது.
6.மணிமேகலை games ஆட மட்டுமே cellphone உபயோகித்துள்ளாள்.
-ஸ்ரீதேவி

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**