Saturday, December 17, 2005

ர்யுத்த

இரவு 9.05க்கு அந்த வானவியல் ஆய்வுக் கூடம் அல்லோல கல்லோலபட்டது.

“ஸார், 327 டிகிரி, 26த் மினிட், 39த் செகண்ட் 894த் மைக்ரோசெகண்ட்ல 230 கோடி ஒளி வருஷ தூரத்துல புதுசா ஒரு நட்சத்ரம் தெரியுது.”

“நல்லா செக் பண்ணீங்களா? புதுசுதானா? ஏதாவது N256, J874ன்னு இருக்க போவுது!” என்று சிரித்தார்.

“இல்ல ஸார், இது புதுசுதான். வேற யாரும் இத கண்டுபிடிச்சதா டிக்ளேர் பண்றதுக்கு முந்தி, நாம பண்ணிடனும்.”

“என்ன பேர் வைக்கப் போறீங்க?”

“ர்யுத்த”

“நல்லாருக்கு, நான் இப்ப சென்டருக்கு வர்றேன். அங்க வந்து பேசிக்கலாம்” என்று தொடர்பைத் துண்டித்தார்.

அந்த பெரிய டெலெஸ்கோப்பின் வழியே ர்யுத்த என்று பெயர்சூட்டப்பட்ட சூரியன் ஒளிர்ந்துகோண்டிருந்தது.

Wednesday, June 22, 2005

வரம்

ஒரு ஊரில் ஒரு மீனவன். மிகவும் ஏழை, ஆனால் அறிவாளி. ஒரு நாள் அவன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அவன் வலையில் ஒரு ஜாடி அகப்பட்டது. அதை திறந்ததும் ஒரு பெரிய பூதம் வந்தது.

வெளியே வந்த பூதம்,"என்னை விடுதலை செய்த உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்." என்றது.

மீனவன் சிறிது யோசித்துவிட்டு "எனக்கு நூறு கோடி ரூபாய் வேண்டும். இதுதான் முதல் வரம்."

பூதம், "சரி. இரண்டாவது வரம்?"

மீனவன், "இன்னும் இரண்டு வரம் வேண்டும்."

Tuesday, March 22, 2005

இது கதையல்ல

அதே சமயத்தில் இது என்னன்னு எனக்கே தெரியலை. சின்ன வயசில எழுதினது. திடீர்ன்னு நம்ம வலை துணுக்கில் போட்டா என்னன்னு தோனுச்சு. அதான் இப்படி!?!? சின்ன வயசுல எழுதினதால வார்த்தை பிழைகள், இலக்கண பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.




Don’t Hurt Me.

Don’t give me lot of ENJOYMENT. I am a heart patient.

The Doctor says there is no heart in my heart. He searches my whole body and gave this report. For this test he operated my chest, brain, lungs. intestine(both small & large), kidney, liver, even my eyes etc.,. Finally he felt tired and fell down before reporting. A team of doctors examined the doctor and reported that he had a severe heart attack. But he was saved with God’s grace. Then only he reported me that ‘I had no Heart’. When he was reporting this to me he had a mild attack again. Then I gave him tablets and water.

Poor Man! Because of having a Heart only he was attacked again and again by Heart attacks. But I have none of these Problems, because I have no Heart.

Heart! I Hate!

After this incident, I’m eager to search my heart. I can’t operate anything or anyone. So I tried to remember when and where I had lost my Heart?

My Mind Pointer stops between LKG & Second Standard. Then that time only I must lost my Heart. Then WHERE?

I again run the Mind Pointer. It rounded again and again among my First Standard classmates. Then I shift the pointer to Third standard and again run the pointer. It again rotate among the pupil and stands at that thiefee(female gender for thief).

Aah! I found that who had stolen my heart. It’s a girl. Her NAMEEE….?!?!

I tried to run the pointer among the names in my Mind List. But it doesn’t move from starting. I was confused. The starting name must be mine only. Then how could it be? I check my Mind List with a doubt. There my name was second in my Mind List. Then, First? OH! Its YOU *****!!!!!!!!.

Thursday, March 03, 2005

கண்ணுக்கு தெரியாத கபோதி

'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் சரவணன் ஸ்டேசனில் இருந்து வெளியே வந்த பொழுது,"ஹல்ல்ல்ல்லோ சரவணா!!!", குரல் கேட்ட திசையில் குறுந்தாடியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"நீஈஈ..! அருண் இல்லே! டேய்ய்ய்ய்! எப்படி இருக்கே? பெரிய ஆளாய்ட்ட போலருக்கு. அடிக்கடி பேப்பர்ல பார்க்கிறேன் உன்னை."

"என்ன போட்டிருக்கு?"

"கலாமுக்கு அடுத்து இவர்தான்னு."

அருண் லேசாய் சிரித்துக் கொண்டான்.

"வீட்டுக்கு வாயேன். எதிர்தாப்லேதான் வீடு." - அருண்.

"சரி வர்றேன். ஆனால் காபி கொடுக்கனும். அப்பதான் நான் விஞ்ஞானி அருண் வீட்ல காபி குடிச்சிருக்கேன்னு சொல்லிக்க முடியும்."

"கண்டிப்பா."

அருண் வீடு பெரிதாய் இருந்தது. வலது பக்கத்து கதவு
'LAB'
'Not Allowed'
என்றது. அதன் உள்ளே சென்றார்கள். விதவிதமான அளவுகளில் கூண்டுகள். அதில் எலிகள், முயல்கள், குரங்குகள், etc.,. ஒரு பெரிய கூண்டு காலியாய் இருந்தது.

"அருண்! நீ என்ன ஆராய்ச்சி பண்றே? நீ ராக்கெட் அனுப்பிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன். இங்கே ஒரே எலியும், முயலுமா இருக்கு? நீ பிஸிக்ஸ் தானே?"

"நான் ஒரு பயோ பிஸிக்கல் விஞ்ஞானி. அதுனாலதான் இதெல்லாம்."

"இப்ப நீ என்ன ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கே?"

"நீ Hollow Man படம் பார்தியா?"

"பார்த்தேன். ஏன் நீயும் அதே மாதிரி மனுஷனை மாயமா மறைய வைக்கப் போறியா?"

"ஆமாம்."

"எப்படி? சிவப்பு கலர் மருந்தை இன்ஞெச்ட் பண்ணா மறையற மாதிரியா!?!"

"இல்ல. இது கதிர்களின் வேலை. அதோ இருக்கு பார்த்தியா? அந்த மெஷினுக்குள்ள ஒரு மனுஷனையோ, இல்ல வேற ஏதாவது உயிரையோ வைச்சுட்டு, ஒரு பட்டனை அமுக்கினா, அவங்க கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடுவாங்க."

"நிஜமாவா!!! இது எப்படி சாத்தியம்?!?"

"சாத்தியம். நீ H.G.Wells எழுதின Invisible Man படிச்சிருக்கியா?"

"படம் பார்த்திருக்கேன்."

"இதுவும் அதே கான்சப்ட்தான். ஒரு பொருள் ஏன் உன் கண்ணுக்கு தெரியுது தெரியுமா? அந்த பொருளின் மேல் படுகிற ஒளி அலைகள் ஒளி பிரதிபலிப்பும், ஒளி விலகலும் செய்யப்பட்டு, சுற்றிலுமுள்ள ஒளி அலைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உன் கண்களை அடைகிறது. நீ பார்ப்பது அந்த ஒளி வித்தியாசங்களைத்தான். இந்த வித்தியாசங்கள் இல்லாமல் செய்து விட்டால், அந்த பொருள் உன் கண்ணுக்குத் தெரியாது. இந்த வித்தியாசங்களை ஒளி விலகு விகிதம் என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு, தண்ணீரின் ஒளி விலகு விகிதமும், கண்ணாடியின் ஒளி விலகு விகிதமும் ஏறக்குறைய சமம். அதனால் கண்ணாடியை தண்ணீரில் வைத்தால், அது கண்ணுக்கு தெரியாது."

"இப்ப நீ என்ன சொல்ல வர்ரே?"

"எப்படி கண்ணாடி தண்ணீரில் தெரியாதோ, அதே மாதிரி மனித உடல் காற்றில் தெரியாமல் செய்யனும். அதுக்கு மனித உடலின் ஒளி விலகு விகிதத்தை, காற்றின் ஒளி விலகு விகிதத்துக்கு மாத்தனும். அப்ப மனித உடல் ஒளி ஊடுருவக் கூடியதா மாறிடும். கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடும்!!"

"சரியா புரியலை. இருந்தாலும் நல்லாருக்கு. உன் வேலை எவ்வளவு முடிஞ்சிருக்கு?"

"முடிஞ்சிருச்சி, ஆனா,"
"சார், பால்ல்ல்..."

"கொஞ்சம் இரு, பால் வாங்கிட்டு வந்துர்றேன்."- அருண்.

சரவணன் அந்த மெஷினை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு டெலிபோன் பூத் போலத்தான் இருந்தது. சிறிய வாசல். மூன்றுக்கு மூன்று அறை. அதன் உள்ளே போய், அதன் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக பொருத்தியிருந்த பைப் முனைகளைத் தொட்டுப்பார்த்தான்.

'இதிலிருந்துதான் கதிர்கள் வெளிப்படும் போல!!!'

அதிலிருந்து வெளியேற அதன் வாசல் வெளிச்சுவரில் கை வைத்தான். அப்பொழுது அங்கேயிருந்த சிவப்பு பட்டனில் தவறுதலாய் கைப்பட்டு அழுத்தி விட, அடுத்த வினாடி அவன் மண்டைக்குள் வெடி வெடித்தாற்போல இருந்தது.

. . . . . . .

கொஞ்ச நேரம், ஒன்றும் புரியவில்லை! ஒன்றும் தெரியவில்லை! தெரிந்ததெல்லாம் வெள்ளை. வெள்ளையை தவிர வேறோன்றும், வெள்ளைதான் தெரிந்தது.

"சரவணா! சரவணாணா!" அருண் குரல் மட்டும் கேட்டது.

"அருண்! அருண்ண்ண்!!!!"

"எங்கே இருக்கிறாய்?"

"இங்கே! இங்கே மெஷினுக்குள் இருக்கிறேன்."

"என்ன செய்தாய்?" சொன்னான். "ஓ! காட்!!!"

"ஏன் ஒரே வெள்ளையாய் இருக்கிறது? ஒன்றுமே தெரியவில்லையே!"

"ஸாரி மை பிரெண்ட். நீ கண்ணுக்கு தெரியாதவனாகிவிட்டாய்! அதே நேரத்தில் கண்ணும்!!"

சரவணன் மனதில் கலவரம் மூண்டது.

"ஏ..ன்? மெஷினில் தப்பா?"

"இல்லை. சரவணா, கொஞ்சம் பொறுமையாய் நான் சொல்வதைக் கேள். Physicsபடி உன் கண்களில் உள்ள லென்ஸ் ஒளியை உன் ரெட்டினாவில் குவிக்கிறதுனாலதான் உனக்கு கண் தெரியுது. இப்ப ஒளி உன் உடலில் பட்டு விலகாததால், அதாவது ஒளியை உன் கண்ணில் உள்ள லென்ஸ் குவிக்காததால், ஒளி உன் ரெட்டினாவில் குவியவில்லை. மேலும் உன் ரெட்டினாவினால் ஒளி தடுக்கப்பட்டால்தான் உன் மூளை அந்த பிம்பத்தை புரிந்து கொள்ளும். இப்போ ஒளி உன் ரெட்டினா வழியா ஊடுருவி போயிடறதுனால, உன்னால பார்க்க முடியாது."

"எவ்வளவு நேரத்துக்கு?"

"இனிமே எப்பவும்."

"அடப்பாவி! போச்சே!! என்ன செய்வேன்? நீயும் உன் ஆராய்ச்சியும் நாசமாய் போக!!!"

சரவணன் கத்த ஆரம்பிக்க...

"சரவணா! அவசரப்படாதே. இப்ப நீ இருக்கிற நிலைமைல உனக்கு இன்னொருத்தரோட உதவி தேவை. உன்னை நான் பார்த்துக்கிறேன். நீ பதற்றபடாமல் இரு. இப்ப இதுக்கு மாற்று கண்டுபிடிக்க உன்னைத்தான் உபயோகப்படுத்தியாகனும். நீ என் கூட கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணனும். சரவணா இப்ப எங்கே இருக்கே?"

சரவணனுக்கு ஏனோ குரங்கு கூண்டுக்கு பக்கத்தில் பார்த்த காலிக்கூண்டு ஞாபகம் வந்தது.

"உன்னை நம்ப..." அவன் ஆரம்பிப்பதற்க்குள், அருண் அவனை இரும்புப்பிடியாய் பிடித்தான்.

ரிப்ளெக்ஸ் ஆக்ஸனில் சரவணன் உத்தேசமாய் குறி வைத்துக் குத்த, அருண் மூக்கில் விழுந்தது. அருண் பிடி தளர... உத்தேசமாய் வாசலை நோக்கி ஒட ஆரம்பித்து, தட்டு தடுமாறி வாசலை கண்டுபிடித்தபொழுது பின்னால்"சரவணா! ஓடாதே! சொன்னாக் கேளு."

ஸ்டேசன் வலது பக்கம். ஸ்டேசனை குறிவைத்து குருட்டுத்தனமாய் ஓடினான். வழியில் ஒரு கல்லை எத்தி, நாயை மிதித்து, தாத்தாவை இடித்து...

'எவ்வளவு இரைச்சல்! மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேனோ?!?...'

கேள்வி அவன் மனதில் எழுந்தபொழுது, எதிரே வந்த அரசு பேருந்து அவனை அடித்து ஸ்டேசன் வாசலில் வீழ்த்தியது.

'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் முரளி ஸ்டேசனில் இருந்து வெளியே வந்தான்.

மூன்றாவது கதை

அடுத்தப் பதிவில் நான் பிரசுரிக்கப்போவது நான் எழுதிய மூன்றாவது கதை. இதுவும் 'அம்பலம்.காம்'இல் சென்ற வருடம் வெளியானது.

Monday, February 28, 2005

நிலவரம் என்ன?

மரத்தடி.காமும் திண்ணையும் இணைந்து நடத்துவதாக அறிவித்த அறிவியல் புனைக்கதைப் போட்டி நிலவரம் என்னவென்று யாருக்காவது தெரியுமா? அறிவிப்பு பக்கத்தையும் காணவில்லை! போட்டி முடிவுகளும்
தெரியவில்லை!! விவரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நலம்.

Friday, January 14, 2005

சாக்ராஸ் தொடர்ச்சி

ப்ராஸஸருக்கு அருகிலிருந்த பச்சை LED எரிந்து சக்ஸஸ் என்றது.

வாவ்! சக்ஸஸ்! சாக்ராஸ் சக்ஸஸ்!! விஷ்வா மனம் பூராவும் சந்தோஷத்தில் துள்ளியது. அவன் இப்போது கி.பி.8032ம் வருடத்தில் அல்லவா இருக்கிறான். ஆனால் இந்த சந்தோஷம் சில நொடிகள்தான்.

மீட்டர்களை கவனித்த விஷ்வா மிகவும் குழம்பிவிட்டான். பயோ மீட்டர் 1 என்று காட்டிக் கொண்டிருந்தது.

லைஃப் மீட்டர் இரண்டு என காட்டியது.

'மனிதர்கள் அனைவரும் எங்கே போயினர்?' தனக்குள்ளே கேட்டுக் கொண்டே விஷ்வா வாகனத்திலிருந்து வெளியே வந்தான். ஒருபக்கம் அடர்ந்த மரங்களடங்கிய காடு. மறுபக்கம் மணல்வெளி. மணல்வெளியின் முடிவில் ஒரு ஆறு. இரண்டுக்கும் நடுவே சாக்ராஸ் நின்று கொண்டிருந்தது.
இங்கே எப்படி ஆறு வந்தது?

ஆறாயிரம் வருடங்களில் அவனது லேப் இருந்த இடம் இப்படி மாறிவிடும் என அவனது விஞ்ஞான மூளை உணர்த்தினாலும், அவனது மனதால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

பைனாக்குலரை கண்களில் வைத்து மணல் வெளியை பார்த்துக் கொண்டே நடந்தான். தூரத்திலிருந்து ஒரு புள்ளி தன்னை நோக்கி வேகமாக முன்னேறுவதை கவனித்தான்.

'வேகம் மணிக்கு நூறு மைல் இருக்கும்' மனதிற்குள் கணக்கு போட்டவன் சிறிது நேரத்தில் அது என்னவென்று கண்டுபிடித்து விட்டான்.

அது ஒரு மிருகம். உயரம் 25 அடி இருந்தது. அதன் முகம் கறுப்பாக நாயைப் போல் இருந்தது. உடல் ஒட்டகச் சிவிங்கி போல இருந்தாலும், பானை போல குண்டாக இருந்தது. வால் முதலையின் வால் போல் பத்தடி இருந்தது. அதன் வாயோரம் தெரிந்த பற்களில் மாமிச பட்சிணி என எழுதி ஒட்டியிருந்தது.
அது தன்னை நோக்கி வருவதை கண்டவுடன், மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற வெறியில் காட்டுக்குள் ஓட ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்த அந்த மிருகத்தின் வேகம் மரங்களின் அடர்த்தியால் வெகுவாக குறைந்துவிட்டது. அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய புதருக்குள் ஒளிந்துகொண்டான்.

இரவு வரை புதரில் ஒளிந்திருந்தவன், நடுநிசியில் தட்டுத் தடுமாறி காட்டை விட்டு வெளியேறினான்.

''சீக்கிரமாய் சாக்ராஸை கிளப்பி நமது காலத்திற்கு சென்றுவிட வேண்டும்'' யோசித்துக் கொண்டே சாக்ராஸை அடைந்து உள்ளே நுழைந்தவன் திடுக்கிட்டான்.

சர்க்யூட்ஸ் எல்லாம் சிதறியிருந்தன. பயோமீட்டரின் கண்ணாடி நொறுங்கியிருந்தது. ப்ராஸஸர் இரண்டு துண்டாகியிருந்தது. தன்னை பிடிக்க முடியாததால், அந்த மிருகம் சாக்ராஸின் உள்ளே அட்டகாசம் செய்திருக்கிறது.

''எப்படியும் திரும்பி போய்விடவேண்டும்'' மனதினுள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, சர்க்யூட்டுகளை மீண்டும் பொருத்த ஆரம்பித்தான். அனைத்து சர்க்யூட்டுகளையும் மீண்டும் அசெம்பிள் செய்ததும், ப்ராஸஸரை என்ன செய்வது என்று தெரியவில்லை.

ப்ராஸஸர் ஸ்பேர் கூட இல்லை. அதனை கையாலும் சரிபார்க்க முடியாதே. அது இல்லாமல் ஒன்றுமே இயங்காதே. இருந்தாலும் உடைந்த துண்டுகளைக் கொண்டு ஏதேனும் செய்ய முடியுமா என்று ஒரு மணிநேரம் ஆராய்ந்தான்.
வேஸ்ட்! அட்டர் வேஸ்ட்!! ப்ராஸஸர் இனி காயலான் கடைச் சமாச்சாரம்தான்!

''இனி நம் காலத்திற்குத் திரும்பி செல்லவே முடியாது!''

உண்மை பயங்கரமாய் மனதினுள் இறங்க இடிந்து போய் உட்கார்ந்தவன், வாழ்வில் முதன்முதலாய் வாய்விட்டு அழுதான்.

''சே! டெஸ்டிங்கிற்கு ஏன் ஆறாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி வந்தேன். எவ்வளவு பெரிய மடத்தனம்!

அழுகையினூடே புலம்பிக் கொண்டிருந்தவன், அப்படியே உறங்கிவிட்டான்.

காலையில் கண் விழித்ததும் மணி பார்த்தான். மணி பத்தை தாண்டியிருந்தது. அடுத்து என்ன செய்வது? பசி வேறு வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.
எழுந்து வெளியே வந்தான். ஆற்றில் முகம் கழுவ எண்ணி ஆற்றை நோக்கி நடந்தான். களைப்பும், பசியும் ஒருசேர உடலை இமயமாய் அழுத்த, ஆற்றை நோக்கி தட்டு தடுமாறி முன்னேறினான்.

மெள்ள ஆற்றை அடைந்து, ஆற்றின் நீரால் முகத்தை அலம்பியவன், வாய் நிறைய நீரை அள்ளி அள்ளி குடித்தான். அப்படியே ஆற்றின் கரையிலேயே விஷ்வா சற்றுநேரம் அமர்ந்திருந்தான்.

தன்னருகே யாரோ வருவது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. திரும்பி பார்த்தான். அவன் அருகில் ஒரு அழகிய பெண் வந்து கொண்டிருந்தாள்.
''யாரிவள்? ஆளில்லாத இவ்வுலகத்திலும் மனித உயிரா?'' வியப்போடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் அவனருகே வந்தாள். பசியின் கிறக்கத்தில் விஷ்வா இருப்பதை அறிந்தவள், தன்னிடம் உள்ள இரண்டு பழங்களை நீட்டி..

''முதல் சாப்பிடு'' என்றாள்.

''தமிழ்தான் பேசுகிறாளா? இல்லை வேறு மொழியா?'' யோசித்துக் கொண்டே பழத்தை வாங்கியவன், உடனே விழுங்கியும் விட்டான்.

''வேற என்ன வேன்ம்?'' அவள் பேசியது தமிழ் தெரியாதவள் தமிழ் பேசியது போல் இருந்தது.

''போதும்'' என்றான் விஷ்வா.

இப்போதுதான் அவளை முழுதாக கவனித்தான். அவள் உடை வித்தியாசமாக அமைந்திருந்தது. பேண்ட் போல் ஒன்றை காலில் அணிந்திருந்தாலும் அது என்ன துணி என அவனால் கணிக்க முடியவில்லை. மேலே வழுவழுப்பான பொருளில் ஜிப்பா போன்ற ஒன்றை அணிந்திருந்தாள். மணிக்கட்டில் வெள்ளி போன்ற ஒரு உலோகத்தில் காப்பு போல் ஒன்றை அணிந்திருந்தாள்.

விஷ்வாவிடம் அவள் அவனைப் பற்றி விசாரித்தாள்.

அவனும் தான் டைம் மிஷின் கண்டுபிடித்தது, அதில் 8032ம் வருடத்திற்கு வந்தது, மிருகம் துரத்தியது, அவனது டைம் மிஷின் உடைந்தது எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினான்.

அவன் கூறி முடித்ததும் அவள் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.

''ஏன் சிரிக்கிறாய்?''

''உன்க்கும் என்க்கும் எவ்ளோ ஒற்றுமை. நான்ம் உன் போல்வே ஓர் டைம் மிஷினில் இந்த வருடத்திற்கு வந்து மாட் கொண்ட்ன். நீ 6000ம் வருசம் முன்னடி வந்திற்கே. நான் 3000ம் வர்சம் பின்னாடி வந்திர்கேன்.'' என்று சொல்லி மீண்டும் மீண்டும் சிரித்தாள்.

''என்ன சொல்கிறாய்? விவரமாகச் சொல்'' என்று கேட்டான் விஷ்வா.

அவள் கூறியதின் சாராம்சம் இதுதான்.

''என் பெயர் சிமி. நான் 11032 ஆண்டை சேர்ந்தவள். எங்களுக்கு ஒரு டைம் மிஷின் மிகவும் சேதமான நிலையில் கிடைத்தது. அதனை சரிசெய்து, நானும் உன்னைப் போல ஆர்வக் கோளாறால் 3000ம் வருடம் பின்னோக்கி வந்துவிட்டேன். நான் இங்கு வந்ததும் என்னுடைய டைம் மிஷினையும் ஒரு மிருகம் உடைத்துவிட்டது. நான் அந்த மிருகத்திற்கு சோர்ஸ் என பெயரிட்டுள்ளேன்.'' சொல்லி முடித்தவள் மறுபடியும் சிரித்தாள்.

''என்ன அழகாக சிரிக்கிறாள்?''

இப்போது அவனும் அவள் சிரிப்பில் கலந்து கொண்டான். சிரித்தவாறே அவள் கையைப் பிடித்தான். அவள் ஒன்றும் கூறவில்லை.

அவள் கையை தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டு எதேச்சையாகக் கேட்டான்.

''ஆமாம் நீ வந்த டைம் மிஷினின் பெயர் என்ன சிமி?''

சிமி அவன் கண்களுக்குள் பார்த்துவிட்டு அழுத்தமாய் சொன்னாள்.

''சாக்ராஸ்.''

சாக்ராஸ் - முதல் பகுதி

தேதி 01.04.2032. நேரம் இரவு 8 மணி 23 நிமிடம் 32 நொடிகள் 234 மைக்ரோ செகண்ட்ஸ்.

கேத்தி அந்த பெரிய லேபினுள் நுழைந்தாள். லேபின் முக்கால்வாசி இடத்தை அந்த இயந்திரம் அடைத்துக் கொண்டிருந்தது. இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் விஷ்வா ஒரு சர்க்யூட்டை வடிவமைத்துக் கொண்டிருந்தான். அவன் அவளை கவனிக்கவில்லை. அவளும் அவனைக் கூப்பிடவில்லை. அவனுக்கு அது பிடிக்காது.

சர்க்யூட்டை இயந்திரத்தில் பொருத்தும்போது பயோமீட்டர் இரண்டு எனக் காட்டியதை கவனித்ததால் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

''என்ன?''

''சாக்ராஸ் சக்ஸஸ் ஆகுமா சார்?''

கண்டிப்பாக! மேஜர் சர்க்யூட்டின் லாஜிக்கை கண்டுபிடித்து விட்டேன். எப்படியும் இன்னும் ஓரிரு நாட்கள் அதிகபட்சம் ஒரு வாரத்தில் சாக்ராஸ் ரெடி'' என்றான் வெற்றி பெருமிதத்தோடு.

அவள் பிரமிப்பாக, ''இது சாத்தியமா சார்?''

''ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இக்கேள்வி அநாவசியம். இறந்த காலத்தை நினைத்து ஏங்குவதோ, எதிர்காலத்திற்காக காத்திருப்பதோ இனி தேவை இல்லை. எந்த காலத்திற்கும் செல்லக்கூடிய டைம் மிஷின் இன்னும் ஏழே நாட்களில் நம் கையில்.''

''அப்படின்னா ஒரு வாரத்திற்கு நான் இங்கேயே தங்கிடட்டுமா சார்?''

''வேண்டாம், நீ கிளம்பு! இன்னும் இரண்டு நாளைக்கு என்னை டிஸ்டர்ப் செய்யாதே. திங்கட்கிழமை காலை நீ வந்தால் போதும்.''
''சரி சார். அப்ப நான் போகிறேன்'' என்ற கேத்தி லேபினில் இருந்து வெளியேறினாள்.

விஷ்வா மறுபடியும் சாக்ராஸில் மூழ்கிவிட்டான்.

சாக்ராஸ். அது அவன் உருவாக்கிவரும் டைம் மிஷினின் பெயர். மிஷின் என்று பெயர்தானே தவிர காயலான் கடையில் நிற்கும் பஸ்ஸை போலிருந்தது. பல சர்க்யூட் போர்டுகள், பயோ மீட்டர், லைஃப் மீட்டர், கண்ட்ரோல் ப்ராஸஸர் போன்ற சாதனங்கள் உள்ளே ஒரு ஒழுங்கில்லாமல் பொருத்தப்பட்டிருந்தன. பயோ மீட்டர் என்பது 10 மீட்டர் சுற்றளவில் எத்தனை மனித உயிர்கள் உள்ளன என்பதை அளக்கும் கருவி. லைப் மீட்டர் என்பது உலகத்தில் எத்தனை மனித உயிர்கள் உள்ளது என்பதை அளக்கும் கருவி. கண்ட்ரோல் ப்ராஸஸர் என்பதுதான் மிஷினின் இதயம். அத்தனை சர்க்யூட்களையும் ஒருங்கிணைப்பது. ப்ராஸஸருக்கு ஒரு அடிக்கு மேலே 'சாக்ராஸ்' என்று கொட்டை எழுத்தில் என்கிரேவ் செய்யப்பட்டிருந்தது.

மறுநாள் மாலை 5 மணி 12 நிமிடங்கள் 42 நொடிகள் 894 மைக்ரோ செகண்ட்ஸ்.

விஷ்வா போய் சேரவேண்டிய காலத்தை குறிப்பிடும் டிஸ்பிளே யூனிட்டை சாக்ராஸில் பொருத்தி ப்ராஸஸருடனும், அதன் கீழிருந்த நம்பர் பேடுடனும் இணைப்புக் கொடுத்தான்.

முடிந்ததும் அடுத்ததாக ''என்ன வேலை பாக்கி இருக்கிறது? என்று யோசித்தவன் ஒரு விநாடி சிலிர்த்தான். எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. துள்ளிக் குதித்தான்.

மெஷினை டெஸ்ட் செய்யவேண்டும். சாக்ராஸ் சக்ஸஸ் ஆகுமா? ஆகவேண்டும். மனம் முழுவதும் தன்னம்பிக்கை நிறைந்திருந்தாலும், ஒரு ஓரத்தில் பயமும் டென்ஷனும் கலந்திருந்தது.

மணி பார்த்தான். 6 மணி ஆக 36 நொடிகள் 720 மைக்ரோ செகண்ட்ஸ் பாக்கி இருந்தது.

நம்பர் பேடில் தேதியை டைப் செய்தான்.

01:01...

''எந்த வருடத்திற்கு போகலாம்? 2100 AD, 2500, 3000,..... 8000.

8032 என வருடத்தை டைப் செய்தான். விநாடி தாமதிக்காமல் அருகில் இருந்த GO பட்டனைத் தட்டினான்.

விஷ்ஷுயுக்க்...க்


முதல் கதை

அடுத்தப் பதிவில் எனது முதல் கதையை பிரசுரித்துள்ளேன். இது 'அம்பலம்.காம்'இல் சென்ற வருடம் வெளியானது. அனால் இந்த கதையை எழுதி மூன்று வருடங்கள் ஆகி விட்டன.

கதை எழுதுகிறேன்

இந்த வலைத்துணுக்கிற்கு என்னப் பெயர் வைப்பது என்று யோசித்தபொழுது, சிலாக்கியமாக ஒன்றும் தோன்றாததால் 'கதை எழுதுகிறேன்' என்றே பெயர் வைத்துவிட்டேன். இதில் வரும் கதைகளை எல்லாம் நீங்கள் கதைகள் என்று ஒப்புக்கொள்வீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் இவையனைத்தும் எனது சொந்தக் கற்பனைகள் என்பதை இங்கே உறுதி கூறுகிறேன். இவற்றை யாராவது மறுபதிப்பிற்க்கோ, அல்லது வேறு எதற்காவது உபயோகப்படுத்த வேண்டும் என்றாலோ என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்(என்ன இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!!).