Friday, January 14, 2005

சாக்ராஸ் - முதல் பகுதி

தேதி 01.04.2032. நேரம் இரவு 8 மணி 23 நிமிடம் 32 நொடிகள் 234 மைக்ரோ செகண்ட்ஸ்.

கேத்தி அந்த பெரிய லேபினுள் நுழைந்தாள். லேபின் முக்கால்வாசி இடத்தை அந்த இயந்திரம் அடைத்துக் கொண்டிருந்தது. இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் விஷ்வா ஒரு சர்க்யூட்டை வடிவமைத்துக் கொண்டிருந்தான். அவன் அவளை கவனிக்கவில்லை. அவளும் அவனைக் கூப்பிடவில்லை. அவனுக்கு அது பிடிக்காது.

சர்க்யூட்டை இயந்திரத்தில் பொருத்தும்போது பயோமீட்டர் இரண்டு எனக் காட்டியதை கவனித்ததால் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

''என்ன?''

''சாக்ராஸ் சக்ஸஸ் ஆகுமா சார்?''

கண்டிப்பாக! மேஜர் சர்க்யூட்டின் லாஜிக்கை கண்டுபிடித்து விட்டேன். எப்படியும் இன்னும் ஓரிரு நாட்கள் அதிகபட்சம் ஒரு வாரத்தில் சாக்ராஸ் ரெடி'' என்றான் வெற்றி பெருமிதத்தோடு.

அவள் பிரமிப்பாக, ''இது சாத்தியமா சார்?''

''ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இக்கேள்வி அநாவசியம். இறந்த காலத்தை நினைத்து ஏங்குவதோ, எதிர்காலத்திற்காக காத்திருப்பதோ இனி தேவை இல்லை. எந்த காலத்திற்கும் செல்லக்கூடிய டைம் மிஷின் இன்னும் ஏழே நாட்களில் நம் கையில்.''

''அப்படின்னா ஒரு வாரத்திற்கு நான் இங்கேயே தங்கிடட்டுமா சார்?''

''வேண்டாம், நீ கிளம்பு! இன்னும் இரண்டு நாளைக்கு என்னை டிஸ்டர்ப் செய்யாதே. திங்கட்கிழமை காலை நீ வந்தால் போதும்.''
''சரி சார். அப்ப நான் போகிறேன்'' என்ற கேத்தி லேபினில் இருந்து வெளியேறினாள்.

விஷ்வா மறுபடியும் சாக்ராஸில் மூழ்கிவிட்டான்.

சாக்ராஸ். அது அவன் உருவாக்கிவரும் டைம் மிஷினின் பெயர். மிஷின் என்று பெயர்தானே தவிர காயலான் கடையில் நிற்கும் பஸ்ஸை போலிருந்தது. பல சர்க்யூட் போர்டுகள், பயோ மீட்டர், லைஃப் மீட்டர், கண்ட்ரோல் ப்ராஸஸர் போன்ற சாதனங்கள் உள்ளே ஒரு ஒழுங்கில்லாமல் பொருத்தப்பட்டிருந்தன. பயோ மீட்டர் என்பது 10 மீட்டர் சுற்றளவில் எத்தனை மனித உயிர்கள் உள்ளன என்பதை அளக்கும் கருவி. லைப் மீட்டர் என்பது உலகத்தில் எத்தனை மனித உயிர்கள் உள்ளது என்பதை அளக்கும் கருவி. கண்ட்ரோல் ப்ராஸஸர் என்பதுதான் மிஷினின் இதயம். அத்தனை சர்க்யூட்களையும் ஒருங்கிணைப்பது. ப்ராஸஸருக்கு ஒரு அடிக்கு மேலே 'சாக்ராஸ்' என்று கொட்டை எழுத்தில் என்கிரேவ் செய்யப்பட்டிருந்தது.

மறுநாள் மாலை 5 மணி 12 நிமிடங்கள் 42 நொடிகள் 894 மைக்ரோ செகண்ட்ஸ்.

விஷ்வா போய் சேரவேண்டிய காலத்தை குறிப்பிடும் டிஸ்பிளே யூனிட்டை சாக்ராஸில் பொருத்தி ப்ராஸஸருடனும், அதன் கீழிருந்த நம்பர் பேடுடனும் இணைப்புக் கொடுத்தான்.

முடிந்ததும் அடுத்ததாக ''என்ன வேலை பாக்கி இருக்கிறது? என்று யோசித்தவன் ஒரு விநாடி சிலிர்த்தான். எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. துள்ளிக் குதித்தான்.

மெஷினை டெஸ்ட் செய்யவேண்டும். சாக்ராஸ் சக்ஸஸ் ஆகுமா? ஆகவேண்டும். மனம் முழுவதும் தன்னம்பிக்கை நிறைந்திருந்தாலும், ஒரு ஓரத்தில் பயமும் டென்ஷனும் கலந்திருந்தது.

மணி பார்த்தான். 6 மணி ஆக 36 நொடிகள் 720 மைக்ரோ செகண்ட்ஸ் பாக்கி இருந்தது.

நம்பர் பேடில் தேதியை டைப் செய்தான்.

01:01...

''எந்த வருடத்திற்கு போகலாம்? 2100 AD, 2500, 3000,..... 8000.

8032 என வருடத்தை டைப் செய்தான். விநாடி தாமதிக்காமல் அருகில் இருந்த GO பட்டனைத் தட்டினான்.

விஷ்ஷுயுக்க்...க்


No comments: