Thursday, July 20, 2006

இறந்தால் வா

"ஹல்லோ சுரேஷ்!"

"ஹாய் மகேஷ்!"

"உனக்கு டிரான்ஸ்ஃபர் போடுறாங்க போல?!?!"

"ஆமடா! எனக்கு அங்க போகவே பிடிக்கலை"

"ஏன்?"

"ஓவர் வெயிலு, தண்ணி கஷ்டம் வேறயாம், சாப்பாடு கூட நல்ல சாப்பாடு
கிடைக்குமோ கிடைக்காதோ?! நினைச்சாலே எரிச்சலா வருது!!"

"அப்ப போக மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படி முடியும்? ஈ.டி.ஆர். ஆர்டர் போட்டா அந்த கடவுளே கூட மாத்த
முடியாதே!!"

"அது என்னவொ சரிதான். நம்ம சி.ஜி. உனக்கு நல்ல குளோஸ்தானே? அவர்ட்ட சொல்லி எதாவது பண்ண முடியுமான்னு பாக்க வேன்டியதுதானே."
"என்னதான் என்கூட நல்லா பழகுனாலும், இந்த விஷயத்துல அவர் ரொம்ப
ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்."

"அங்க நீ எத்தன வருஷம் இருக்கனுமாம்?"

"60.2"

"ஓ! ஸோ லாங்க் டைம்"

"ஆனாலும் பாவம் நீ. இங்கே சொர்க்க வாழ்க்கை வாழ்ந்துட்டு, அங்கே போய் நாய் பொழைப்பு பொழைக்க போறே"

"இதெல்லாம் கூட பரவாயில்லை. அங்கே போனபிறகு, இங்க இருக்குற
யாரையுமே காண்டாக்ட் பண்ண முடியாது. அதை நினைச்சா தான்
வருத்தமா இருக்கு"

"ஆனா அங்கே போய் உன் திறமைய கரெக்டா காட்னா, இங்கே திரும்பி
வந்ததும் பிரோமொஷன் கிடைக்கும். நிறைய பேர் அங்க போய்ட்டு வந்து எஸ்.பி. ஆயிருக்காங்க. நம்ம சுந்தர்! சிவாவுக்கு எவ்ளோ குளோஸ் அயீட்டாரு. அப்பர்தான் அங்கே கொஞ்சம் கஷ்டபட்டார். ஆனாலும் திரும்பி வந்ததும் இப்ப எப்படியிருக்கார் பார்த்தியா?"

"ஆனா, அங்க போய் PPV ஆனவஙதான் ஜாஸ்தி. அதோட கம்பேர் பண்ணா,
சுந்தர், அப்பர்ன்னு ரொம்ப கம்மியானவங்கதான் பதவிய வாங்கியிருக்காங்க! கடைசியா பிரமோஷன் கிடைச்சது யாருக்கு? கொஞ்சம் யோசிச்சு பாரு. நம்ம தெரசாதான் கடைசி. தெரசாவுக்கு முன்னாடி? அந்தளவுக்கு நம்மால செய்ய முடியுமா?!?!"

"கஷ்டம்தான்."
"எப்ப கிளம்பற?"

"நாளைக்கு காலைல 5:25:432க்கு"

"போறதுக்கு முன்னாடி இங்க இருக்கற ஹையர் அதாரிடீஸ் எல்லாரையும் ஒரு தடவை நேர்ல போய் பாத்துரு. அதான் நம்ம சிவன், எமதர்மராஜா, சித்திர குப்தன்..."

"கண்டிப்பா பாக்கணும்"

"பெஸ்ட் ஆஃப் லக்!!!"

"தேங்க்ஸ்டா"

ஆர்யா ஹாஸ்பிடல். டாக்டர் இந்துமதி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தாள். முகமூடி பாதி கழன்ற நிலையில் கழுத்தில் தொங்கிகொண்டிருந்தது.வாசலில் நின்று கொண்டிருந்த காவ்யாவின் அம்மாவிடம் சிரித்தபடி சென்று,

"ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. நர்ஸ் குழந்தைய குளிப்பாட்டிட்டு இப்ப கொண்டு வந்துருவாங்க! இன்னும் அரைமணினேரம் கழிச்சு உங்க பொண்ணை போய் பார்க்கலாம். மயக்கத்துல இருக்காங்க, டிஸ்டர்ப் பண்ணாதீங்க."

"டாக்டர்! குழந்தை பிறந்த நேரம்?..."

"ஓ! ஜாதகம் கணிக்கணும்ல? மறுந்துட்டேன். சரியா அஞ்சு இருபத்தி அஞ்சு, நாலு செகன்டுக்கு பொறந்ததும்மா."