Wednesday, July 04, 2007

யார் நான்

"யா....யா..ரு?" பிரவீன் கலவரமானான்.

"பூர்ர்ர்ர்ணா! இன்னும் தூங்கிகிட்டு இருக்கியா? ஏன்டா, என்னாச்சு உனக்கு? எவ்வளவு பெரிய பிரச்சனை? நான் கால் பண்ணா எடுக்கவே இல்லை. நீயும் திரும்ப கால் பண்ணலை? நம்ம பிராஜக்ட் இப்படி கவுந்து போச்சு. ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை."

பிரவீன் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவாக சென்று, தலையணைக்கடியில் செல்ஃபோனை ஒளித்து வைத்து பேசிக் கொண்டிருக்கிறாளோ என்று பார்த்தான். அப்படி ஒன்றும் தெரியவில்லை.

"..."

"ஹலோஓஓ! லைன்ல இருக்கியா தூங்கிட்டியா?"

பிரவீனின் குழப்பம் எகிறிக் கொண்டே போனது.

"இல்லை.. சொல்லு.."

"எத்தனை தடவைதான் கால் பண்றது. அதான் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு காலைலயே கிளம்பி உன் வீட்டுக்கு வந்துகிட்டிருக்கேன். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். வந்து பேசறேன்." லைன் கட்டாகிவிட்டது.

பிரவீன் சிறிது நேரம் செல்ஃபோனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 'பூர்ணாவின் நம்பர்தான்! ஆனால் எப்படி? பிராஜக்ட் கவுந்து போச்சுன்னு ஃபோன்ல சொன்னாளே!? அப்ப இது?!?'

"அப்பவே எழுந்திரிச்சிட்டியா? காஃபி போடட்டுமா?" சிந்தித்தவாறே நின்று கொண்டிருந்தவனின் காதில், பூர்ணாவின் இந்த திடீர் கொஞ்சல் குரல் ஒரு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. திரும்பி பார்த்தான். படுக்கை அறை வாசலில் சிருங்காரமாக சாய்ந்து கையை கட்டிகொண்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

பிரவீனின் மனதில் மறுபடி அந்த சந்தேகம் எழுந்தது, "ஏய்! இது என்ன காலைலேயே விளையாண்டுகிட்டு? ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன் தெரியுமா?"

"நான் எங்க விளையாண்டேன்? நீதான் நேத்து நைட்டு ஃபுல்லா விளையாண்ட", குறும்பாக அவனை பார்த்து சிரித்தாள்.

பிரவீனுக்கு இப்பொழுதுதான் தைரியம் வந்தது. "ஏஏய்ய்ய்! உன்ன்ன்னனன!" என்றவாறே அவளுருகில் நெருங்கினான்.

"ஐயோ! இப்ப வேணாம். இன்னைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு. இன்னைக்கே டிக்ளேர் பண்ணிரலாமா?" அவள் கேட்டதும் வாசல் மணி ஓலித்தது.

பிரவீனின் இதயம் மறுபடியும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் குழப்பத்துடன் நின்று கொண்டிருக்கும்போதே, பூர்ணா வாசலை நோக்கி சென்று கதவைத் திறந்தாள்.

"ஹாஆஆயியார் நீநீநீநீ?" வெளியிலிருந்து பூர்ணா உள்ளேயிருந்தவளைப் பார்த்து கத்தினாள்.

"ஆஆஆஆஆஆஆ" உள்ளேயிருந்த பூர்ணா வீறிட்டாள்.

வெளியிருந்தவள் பிரவீனை கலவரமுகத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். உள்ளேயிருந்தவளும் திரும்பி அவனை பார்த்தாள்.

பிரவீன் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு கலவரத்திலும் அவனுக்கு நேற்றிரவு கம்யூனிகேஷன் சேனல் ஒரு வினாடி சிகப்படித்தது நினைவில் ஓடியது.

வெளியிலிருந்தவளை பார்த்து, "பூ..பூர்ணா! நீ .. அப்ப இது? .." 'நேற்றிரவு டெலிபோர்டிங்கில் கடத்தும்பொழுது, இங்கே பூர்ணா உருவாகிய பிறகு அங்கே பூர்ணா அழியவில்லை!!!' இது மூளையில் உறைத்ததும், தலையில் கை வைத்து "ஓஓஓஓ..." என்று ஓலமிட ஆரம்பித்தான்.

"பிரவீன்! பிரவீன்! எனக்கு புரியலை. இங்கே என்ன நடக்குது. எப்படி?" வெளியே இருந்தவள் உள்ளே வந்து அவன் கைகளை இழுத்து உலுக்கினாள். அவளுக்கும் இப்பொழுது லேசாக புரிந்திருந்தது.

அவள் அவனை உலுக்கியதும் உடனே அவள் கைகளை உதறித் தள்ளிவிட்டான்.

"பூர்ணா! பூர்ணா நேத்து ஏதோ தப்பு நடந்திருக்கு. இங்கே உன்னோட பிரதி உருவாயிருச்சு. ஆனா ஸென்டிங் எண்டில் நீ அழிக்கப் படலை"

"ஆனா, ஆனா அது எப்படி நடந்தது?" வாசலில் நின்று கொண்டிருந்தவளும் அவன் அருகே வந்து விட்டாள்.

முகத்தை திருப்பி அவளைப் பார்த்தான், "தெரியலை. நேத்து நீ வரும்போது ஒரு செகண்ட், கம்யூனிகேஷன் கட்டாச்சு. ஒரு வேளை அதனால ஏதாவது..."

"இதுக்குத்தான் நேத்து உடனே கால் பண்ணினேன். நீ ஏன் அப்ப செல்லை எடுக்கலை?" பூர்ணா கோபமாகப் பார்த்தாள்.

"அது.. அது வந்து..." அவன் நேற்றிரவே வந்தவளைப் பார்த்தான்.

"ஏன் இப்படி இழுக்கிறே...? எதுக்கு அவளை பார்க்கிற...?", பூர்ணாவுக்கு நேற்றிரவு அவன் கடைசியாக ஃபோனில் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. "பிரவீன்! பிரவீன்!! நேத்து .... நைட்டு.... ஏதாவது.....?" அவளால் கேட்க முடியவில்லை. விம்மத் தொடங்கினாள். விம்மலுக்கிடையில் ஒரே ஒருமுறை "ஏமாத்திட்ட" என்றாள் உடைந்த குரலில்.

பிரவீன் அடிபட்ட பறவையாக குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தான்.

புதிதாய் உருவான பூர்ணா, அழுது கொண்டிருந்த பூர்ணாவின் தலையை மெதுவாக வருடினாள். 'பூர்ணா' என்று தன் பெயரையே கூப்பிட்டு அவளை அழைப்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

"பூர்.. பூர்ணா! ஆனா.. இதுல பிரவீனை குற்றவாளியாக்கறதுல நியாயமே இல்லைனு தோனுது. கொஞ்சம் யோசிச்சு பாரு. பிரவீனோட காதலி பூர்ணா. பிரவீன் நேத்து இருந்ததும் பூர்ணாவோடதான். ஆனா அது நீயில்லை. நான்! ஏன்னா நானும் பூர்ணாதான்."

"ஆனா பிரவீனை காதலிச்சது நான். நீயில்லை!" என்று உறுமினாள் அழுது கொண்டே.

"ஆனா நேத்து நைட் வரைக்கும், நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே நானும் வாழ்ந்ததுதான். ஏன்னா அப்ப நாம ரெண்டு பேர் கிடையாது. நீ ஒருத்தி.... இல்லை, நாம ஒருத்திதான். ஆனா இப்ப ரெண்டு பேர். இதுதான் இப்ப பிரச்சனை. பிரவீன்! எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. பூர்ணாங்கற நான் யாரு?!?!"

பிரவீனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது. இருவரையும் பார்த்து, "பூர்ணா! இப்ப யாரு 'நீ'?" அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து, "அதையேதான் நாங்களும் கேட்கிறோம்? யார் 'நான்' "?

- தொடரும்

1 comment:

நளாயினி said...

அவனவன் ஒரு பெண்டாட்டியோடையே காலம் தள்ளேலாது எண்டிறாங்கள். நீங்கள் 2 ஆ. ஓ.. தொடரும் வேறா. நல்ல முசுப்பதாத்தியாத்தான் போகுது.

ஓ இது காதலி தானே. சரி சரி.