Wednesday, October 10, 2007

இருபத்தி மூன்றாவது கதை

"கிடைச்சிருச்சி" ராஜேஷ் கத்தினான்.

"என்ன?"

"இருபத்தி மூன்றாவது கதை"

"ரியலி? எங்கே கிடைச்சுது?"

"இந்த பழைழழய ஹார்ட் டிஸ்க்கில்", அழுத்திப் பிடித்தால் உடைந்து விடக் கூடிய அந்த சின்ன தகடு பயங்கர அழுக்காய் இருந்தது.

"ஹார்ட் டிஸ்க்கா?"

"ஆமாம். அப்போவெல்லாம் இதைத்தானே கம்யூட்டர்ஸ்ல யூஸ் பண்ணாங்க!?"

"அதுக்கில்லை. அச்சுப் பிரதி, கையெழுத்துப் பிரதி ஏதும் கிடைக்கலியா?"

"இல்லை. எனக்குத் தெரிந்து அவர் கையெழுத்துப் பிரதியா ஏதும் எழுதினதா தெரியலை. எல்லாமே கம்ப்யூட்டர் ஃபைல்ஸ்தான்."

"பட், அட்லீஸ்ட் அச்சு?"

"ம்ம்ம். மே பி, இந்த கதை எதிலேயும் பிரசுரம் ஆகாமலிருந்திருக்கலாம்."

"அப்புறம் எப்படி இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு சொல்றே?"

"தலைப்பை பாரு", திரையில் விரிந்த கதையில் மேலிருந்த தலைப்பை ராஜேஷ் காட்டினான்.

"ஒரு வேளை ஒரு அட்ராக்ஷனுக்காக இப்படி தலைப்பு வச்சிருக்கலாம்ல. இதை மட்டும் வச்சுகிட்டு, இதுதான் இருபத்தி மூன்றாவது கதைன்னு எப்படி சொல்ல முடியும்."

"சரி, இன்னொரு தியரி சொல்றேன் சரியா இருக்கா பாரு. நாம இப்ப, அவரோட இருபத்தி நாலாவது கதை வரைக்கும் கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் முதல் இருபத்தி மூன்று கதைகள்தான் பாக்கி. ஸோ, இது இருபத்தி மூன்றுக்கு மேல இருக்க முடியாது. இருபத்தி நாலாவது கதை எழுதப்பட்ட தேதி 17, அக்டோபர் 2007. இந்த கதை எழுதப்பட்ட தேதியப் பாரு. 10, அக்டோபர் 2007. ஒரு வாரம்தான் வித்தியாசம். அதனால இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"ஆனா ஒரு விஷயம். சமயத்துல இந்த மாதிரி ஆளுங்க ஒரே நாள்ள பத்துக் கதை கூட எழுதுவாங்க."

"பத்தெல்லாம் ஓவர். இவர் ஒரு தடவை ஐந்து கதை, ஒரே நாள்ள எழுதினதா நானும் படிச்சிருக்கேன். ஆனாலும் அவையெல்லாம் ரொம்பவும் சின்ன சின்ன கதைகள்தான்னும் படிச்சிருக்கேன். ஆனா இதைப் பாரு ஒரு சிறுகதை அளவுக்கு இருக்கு."

"இது சிறுகதைதான். ஆனா, இதுக்கப்புறமா, அந்த ஒரு வார கேப்ல, ஏன் அந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன கதை எழுதியிருக்க கூடாது."

"நீ சொல்றது பாஸிபிள்தான். ஆனா, இருபத்தி நாலாவது கதை, இதுக்கடுத்த ஒரு வாரத்தில். அதே நேரம் இந்தக் கதையோட தலைப்பு, ரெண்டையும் சேர்த்து பார்த்தா, இதுதான் இருபத்தி மூன்றாவதா இருக்க முடியும்."

"இணைய குப்பைகளில் ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்த்தியா?"

"பார்த்தேன். ஆனா, இருநூறு வருடத்துக்கு மேற்பட்ட இணைய குப்பைகளைத்தான் அழித்து விடுகிறார்களே. அதனால், ஆதாரம் எதுவும் அதில் கிடைக்கலை."

"ம்ம். கதை எப்படியிருக்கு."

"இந்த கதை சுமாராதான் இருக்கு. அதனாலதான் எதிலேயும் பிரசுரமாகியிருக்காதுன்னு சொல்றேன்."

"ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே, கதை சுமாராயிருக்கிறதுக்கும் பிரசுரமாகிறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா? 'பத்திரிக்கை ஆசிரியர்கள் அறையில் இருக்கும் குப்பைத்தொட்டி மிக ஆழமானது. பல எழுத்தாளர்களின் எதிர்காலங்கள் அதில் மூழ்கடிக்கப்படுகின்றன'ன்னு ஒருத்தர் சொல்லியிருக்கார் தெரியுமா?"

"அப்படியா? யார் சொன்னது இது?"

"இப்படி திடீர்னு கேட்டா எப்படி? நானே சொன்னதுதான்னு வச்சுக்கோயேன்."

ராஜேஷ் அவனை முறைத்தான். "நீயும் உன் ஜோக்கும்!" சலித்துக் கொண்டான்.

"சரி, இதை எழுதினது கன்ஃபார்மா...??!"

"கன்ஃபார்ம்டா அவரேதான்!"

"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"

"இங்கே பாரு" காற்றில் விரிந்திருந்த அந்த மாயத் திரையில், கதையின் கடைசிக்கு சென்று, முடிவில் வலது ஓரத்தில் எழுதியிருந்ததை, ராஜேஷ் சுட்டிக் காட்டினான்.

'- எழுதியவர் யோசிப்பவர்'

2 comments:

காஞ்சனை said...

கதை நல்லாருக்குங்க. ஆனா மேலோட்டமா படிக்கிறவங்களுக்கு.......?

- ச‌காரா.

யோசிப்பவர் said...

சகாரா,
//ஆனா மேலோட்டமா படிக்கிறவங்களுக்கு.......?
//
புரியாதுதான். இது சும்மா ஜாலியாதன் எழுதினேன். அதான் நானே சுமாராதான் இருக்குன்னு சொல்றேன்!!!;-)