Friday, February 27, 2009

யுதிஷ்ட்ரா

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது. சந்தோஷ் கண் விழித்தான். கண்களின் முன்னால் பல நிறங்களில் திரவங்கள் நடனமாடின. ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் இருந்து மெதுவாக தலையை மட்டும் வெளியே நீட்டினான். சந்தோஷ் மூச்சுக்குழாய்களில் உடனடியாக கடுமையான இறுக்கத்தை உணர்ந்தான். மீண்டும் தொட்டிக்குள் மூழ்கினான்.

'வெளியே ஏன் இன்னும் காற்று நிரப்பப்படவில்லை? இதற்குள் இருந்தவாறே கணிணியை கேட்கவும் முடியாது.’ ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் உறங்க வைக்கப்படுமுன் பார்த்த காட்சிகளும், ட்ரெய்னிங்கின் பொழுது படித்த பாடமும் நினைவுக்கு வந்தன.

'சுவாச முகமூடிகள் இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் ஆக்ஸிஜன் பெட்டிகள், தொட்டிகளுக்கு அருகில் இருக்கும். ஒரு வேளை ஸஸ்பெண்டட் அனிமேஷன் நிலையிலிருந்து விழித்தெழுந்ததும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், முகமூடிகளை உடனே அணிந்து கொள்ளவும்'


'ஆக்ஸிஜன் பெட்டி உறங்கும் முன் அருகில்தான் இருந்தது. ஆம். ஞாபகம் இருக்கிறது. வலது புறம். வேகமாக சென்று அணிந்து கொள்ள வேண்டும்.'

ஒரு வினாடி நிதானித்து, சரேலென்று தொட்டியில் இருந்து வலதுபுறமாக வெளியே குதித்தான். முகமூடியை அதன் லாக்கிலிருந்து விடுவித்து, உடனடியாக மூக்கை மூடிக் கொண்டான். மூச்சு விட முடிந்தது. 'அப்பாடா!'.

நிதானமாக முகமூடியை தலையோடு இணைத்துக் கொண்டான். தனக்கான பெட்டியிலிருந்து, உடையை எடுத்து அணிந்து கொண்டான். 'ஏன் இன்னும் மற்றவர்களெல்லாம் விழிக்கவில்லை?'

கணிணியை தொடர்பு கொண்டான். "யுதிஷ்ட்ரா"

கலத்தின் கணிணி யுதிஷ்ட்ரா, "சந்தோஷ். விழித்து விட்டீர்களா?"

"ஆம். விழித்து விட்டேன். ஏன் இன்னும் கலத்தில் காற்று நிரப்பப்படவில்லை?"

"இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அதனால் நிரப்பவில்லை."

"நேரம் வரவில்லையா? காற்று நிரப்பப்பட்ட பின்தானே எங்களை விழிப்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்? அதற்கு முன் ஏன் என்னை விழிக்க வைத்தாய்?"

"நான் விழிக்க வைக்கவில்லை. நீங்களாக விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"நானாகவா? அது எப்படி முடியும்?"

"பத்து செகண்ட் பொறுங்கள்..........நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பதாம் எண் தொட்டியின் வெப்பம் கடைசி ஆறு மணி நேரமாக கணிசமாக உயர்ந்து வந்திருக்கிறது. வெப்பம் 6 டிகிரி அடைந்ததும், இயல்பாக எஸ்.ஏ தொட்டி அனுப்ப வேண்டிய எச்சரிக்கையை, எனக்கு அனுப்பவில்லை. எஸ்.ஏ தொட்டி ஒன்பதின் சென்ஸார்களில் பிரச்சனை. அதுதான் விழித்துக் கொண்டுவிட்டீர்கள்."

"யூ மீன், செயல் திட்டத்தை விட, நான் சீக்கிரமாகவே விழித்தெழுந்து விட்டேனா?"

"ஆமாம்."

"பயண காலம் எவ்வளவு தூரம் முடிந்திருக்கிறது?"

"பூமியிலிருந்து நூற்றிப் பதினாறு வருடங்கள், 206 நாட்கள், நான்கு மணி நேரம், முப்பத்தி ஏழு நிமிடங்கள், ஐம்பத்தி இரண்டு விநாடிகள்."

"வாட்? கிட்டத்தட்ட பாதி தூரம்தான் வந்திருக்கிறோமா?"

"நாற்பத்தி எட்டுப் புள்ளி அறுபத்தி ஏழு சதவிகித தூரம் வந்திருக்கிறோம்."

"யுதிஷ்ட்ரா! நிலைமை சிக்கலானது. எனது எஸ்.ஏ. தொட்டியில் என்ன பிரச்சனை, வெப்பம் ஏன் உயர்ந்தது என்று கண்டுபிடி. சீக்கிரம் சரி செய்"

"சரி சந்தோஷ். இன்னும் ஐந்து நிமிடத்தில் எஸ்.ஏ. தொட்டிப் பிரச்சனை குறித்து ரிப்போர்ட் செய்கிறேன்." அமைதியானது.

சந்தோஷ், பூர்ணா, ....., விஷ்வா ஆகிய ஒன்பது பேரும், அருகிலிருக்கும் எஃப்ஸிலான் எரிடனி சூரியனைச் சுற்றும், பூமியை ஒத்த கோளுக்கு, 'உயிர் வாழ இடம் தேடி' திட்டத்துக்காக, பூமியிலிருந்து பொறுக்கியெடுத்து அனுப்பப்பட்ட விஞ்ஞானிகள். பயண காலம் 239 வருடம் 284 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவ்வளவு காலம் பயணிகள் உயிரோடு இருந்தாக வேண்டும். தலைமுறை பயணிகளாக திட்டம் அமைத்தால், உணவு, காற்று, கழிவு என்று பல சிக்கல்கள். அதற்குப் பதிலாக பயணிகளை ஸஸ்பெண்டட் அனிமேஷனில் மூழ்கவைத்து தூங்க வைத்தால், அவர்களது இதயத் துடிப்பை வெகுவாக குறைத்து, ரத்த ஓட்டத்தைக் குறைத்து, திரவ சுவாசம் கொடுப்பதால், அவர்களது வாழ்நாளை நீட்டிக்கலாம். உடல் முதிர்வடையாமல் உயிரையும் பாதுகாக்கலாம். செலவும் தலைமுறைத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் வெகு குறைவு. பயணம் முடியும் கடைசி மணி நேரங்களில் பயணிகளை எழுப்பினால் போதுமானது. இடைப்பட்டப் பயணத்தைக் கலத்தின் கணிணி யுதிஷ்ட்ராவே கவனித்துக் கொள்ளும்.

'இன்னும் நூறு வருடங்களுக்கு மேல் பாக்கி இருக்கின்றன.' இந்த எண்ணமே சந்தோஷின் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது.

'எஸ்.ஏ.தொட்டியில் ஏன் திடீரென்று பிரச்சனை வந்தது? நூறு வருடங்கள் கலத்தினுள் கழிக்க முடியாது. அப்படி கழிக்க நேர்ந்தால் முப்பது, நாற்பது வருடங்களுக்குள் வயதாகி இறந்து விடுவேன். எஸ்.ஏ.தொட்டிதான் பாதுகாப்பு.'

"சந்தோஷ்" யுதிஷ்ட்ரா.

"என்ன. சரியாகிவிட்டதா?"

"இல்லை சரி செய்ய முடியவில்லை."

"என்ன பிரச்சனை?"

"தேவையான அளவுக்கு ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியாகவில்லை. தேவையற்ற ஆர்கான் ரஸாயனத் திரவம் தொட்டியில் 19.6 சதவீதம் காணப்படுகிறது. ரஸாயன மாற்றங்கள் திட்டமிட்டபடி ஏற்படவில்லை."

"இப்பொழுது என்ன செய்வது?"

"கேள்வி நேரடியாக இருப்பது நல்லது. பொதுப்படையானக் கேள்விகளுக்கான பதில்கள் ஏராளம்."

"சரி, இப்பொழுது எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?"

"ஆர்கான் திரவத்தை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியை சிறிது கூட்ட வேண்டும்."

"அப்படியென்றால் ஆர்கான் திரவத்தை தனியாகப் பிரித்து வெளியேற்று."

"ஆர்கான் திரவத்தை தனியாக பிரிக்க முடியவில்லை."

"இப்பொழுது சரி செய்ய முடியுமா? முடியாதா?"

"முடியலாம். அதற்குத் தேவையான பொருட்களும், ப்ரொசீஜர்களும் என்னிடம் இல்லை."

சந்தோஷிற்கு இப்பொழுது தெளிவாகத் தெரிந்து விட்டது. 'இனி எஸ்.ஏ. தொட்டிப் பயனில்லை.'

"யுதிஷ்ட்ரா, எஸ்.ஏ தொட்டிப் பிரச்சனையை உன்னால் சரி செய்ய முடியாது. தொட்டிக்கு வெளியே நானும் அதிக காலம் வாழ முடியாது. இந்த நிலையில் மாற்றுத் திட்டம் ஏதாவது, பூமி விஞ்ஞானிகள் உனக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்களா?"

"சந்தோஷ், இந்தப் பிரச்சனை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படவில்லை. அதனால் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. மாற்றுத் திட்டம் இருந்தால் உங்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டிருக்கும்."

"அது எனக்குத் தெரியும். இருந்தாலும் உன்னிடம் ஏதாவது ரகசியத் திட்டம் இருக்கிறதா என்பதற்காகக் கேட்டேன்."

"ரகசிய மாற்றுத் திட்டம் ஏதுமில்லை."

"யுதிஷ்ட்ரா, இப்பொழுது நான் என்ன செய்யலாம்?"

"சந்தோஷ். தயவுசெய்து நேரடியான கேள்வி கேட்கவும்."

"மறுபடி நான் எஸ்.ஏ. தொட்டியில் உறங்க முடியாது என்ற நிலையில், நான் என்னவெல்லாம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது?"

"இரண்டு சாத்தியக்கூறுகள், இந்தக் கேள்விக்கு, எனது ஹியூரிஸ்டிக் ப்ரோக்ராமில் தோன்றுகிறது."

"அவை என்னென்ன?"

"முதலாவது, என்னிடம், நீங்கள் அதிக காலம் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் இல்லை; உணவு மாத்திரைகள் இல்லை; இவையெல்லாம் ஒன்பது பேருக்கு, இரண்டு வருடம் தேவையான அளவுக்கு திட்டப்படி உள்ளது. அவையனைத்தையும் உபயோகித்து, சிறிது காலம் இந்தக் கலத்தில் நீங்கள் உயிர் வாழலாம். இந்த சாத்தியக்கூறில், உங்களுக்கு செய்வதற்கு வேலையோ, பொழுதுபோக்கிற்கோ எதுவும் கிடையாது. அதனால் இறப்பதற்கு வெகு காலம் முன்பே மூளை பழுதடைந்து பைத்தியம் பிடித்து விடும்."

’பைத்தியம் பிடிப்பதை விட அபாயமான பிரச்சனை ஒன்றிருப்பதை இந்த இயந்திர மூளை உணரவில்லை. ஒன்பது பேருக்குரிய உணவையும், காற்றையும் நானே உபயோகித்து விட்டால், மற்றவர்கள் விழித்தெழும்பொழுது அவர்களுக்கு உணவோ ஆக்ஸிஜனோ இருக்காது. அல்லது பற்றாக்குறை ஏற்படும். மிஷன் முழுவதுமாக தோல்வியடைவதுடன், மற்ற எட்டு பேரும் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து போவார்கள். எட்டு பேர் - என்னால்.’

“இரண்டாவது சாத்தியக்கூறு?”

“நீங்கள் உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ தற்கொலை செய்து கொள்ளலாம்.” அதன் குரலில் துளியும் வருத்தமில்லை.

“இரண்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.”

“சரி யுதிஷ்ட்ரா. நான் சிறிது சிந்திக்க வேண்டும். முடிந்தவரை எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய முயன்று கொண்டே இரு. முன்னேற்றம் தெரிந்தால் எனக்குத் தகவல் கொடு.”

“சரி சந்தோஷ்.”

சந்தோஷ் யோசித்தான். ’யுதிஷ்ட்ரா சொல்வது சரிதான். நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டால்கூட வேலையோ, பொழுதுபோக்கோ இல்லாமல் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். பொழுதுபோக்க ஏதாவது வழி இருக்கிறதா? பென்சில். பென்சில்கள் இருக்கின்றன. எழுதக் காகிதம் இல்லாவிட்டாலும் இந்தக் கலத்தின் பெரும்பகுதி பொருட்கள் பென்சிலால் எழுதப்படக்கூடிய பொருட்களாலேயே செய்யப்பட்டிருக்கிறது. பென்சில்களால் அவற்றில் ஏதாவது எழுதிக் கொண்டு, கிறுக்கிக் கொண்டு பொழுதைப்போக்கலாம். ஆனாலும் இது மட்டும் அதிக உதவி செய்து விட முடியாது. சேமிக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனைக் கொண்டு, எவ்வளவு மெதுவாக மூச்சு விட்டாலும், இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இடையில் பைத்தியம் வேறு பிடித்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இருபத்தி ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து பின் ஆக்ஸிஜன் போதாமல் இறக்க நேர்ந்தாலும், மற்றவர்களுக்கும் அதே கதி, அவர்கள் விழித்தெழுந்ததும் நேரும். எட்டுபேரின் உயிரும் என் ஒருவனால் போய் விடும். 1=8டா?. மிக அநியாயம். அதுவும் அந்த 1க்கு வாழ அர்த்தமேயில்லாதபொழுது. ம்ம்.’

சந்தோஷ் சிறிது நேரம் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். பின் ஒரு முடிவோடு எவாக்வேஷன் எக்ஸிட்டை நோக்கி சென்றான்.

“யுதிஷ்ட்ரா. நான் வெளியேற வேண்டும். எவாக்வேஷன் எக்ஸிட்டை திற. நான் வெளியேறியதும் மூடிவிடு.”

“சரி சந்தோஷ்.”

கதவு திறந்தது. வெளியே குதிக்குமுன், ‘எனக்கு எதற்கு இந்த ஆக்ஸிஜன் பெட்டி?! உயிரோடிருக்கும் எட்டு பேரில் ஒருவருக்காவது முப்பது நாட்கள் உபயோகப்படுமே!!’, நினைத்ததும் பெட்டியைத் தனியே கழற்றி, வாசலுக்கு அருகே வைத்தான். மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டு, முகமூடியைக் கழற்றிவிட்டு வாசல் சுவற்றில் காலை நன்றாக ஊன்றி பலமாக சுவற்றை உதைத்து,...

கதவு மூடிக்கொண்டது.

யுதிஷ்ட்ரா தனது டேட்டாபேஸை அப்டேட் செய்தது. “கலத்திலிருக்கும் மொத்த உயிர்கள் = 0”.

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது.

௨௲௧௧

எனது காலப்பேசி ஒரு முறை கதறி ஓய்ந்தது. எடுத்துப் பார்த்தேன். பூர்ணாதான் தகவல் அனுப்பியிருந்தாள்.

"95BEB2AACDAAC79ABFAFBFB2CD 85B4C895CD95BEA4C7 B59AAEBE95 AEBE9FCD9FBF95CD 95CAA3CD9FC1 B5BF9FCD9FC7A9CD B0BE AA9FCD AAC09FCD 9ABEB2C895CDE7C1 E8F2E7E7 EA E8F0 95BEB2C8 EF E9F095CD95C1 B5BE"

’என்ன இது. ஒன்றுமே புரியவில்லை!? என்ன அனுப்பியிருக்கிறாள்?’ அவள் வீஃபோனுக்கு அழைத்தேன். பூர்ணாவின் டிஜிட்டல் உருவம் திரையில் தோன்றி, "நான் தற்பொழுது இந்த நொடியில் இல்லை. காலப்பயணம் முடிந்து திரும்பியதும் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்." என்று திரும்பத் திரும்பக் கூற ஆரம்பித்தாள்.

’காலப் பயணம் போயிருக்கிறாளா? என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. எப்பொழுது இயந்திரத்தை வாங்கினாள்? அல்லது வாடகை இயந்திரத்தில் போயிருக்கிறாளா? அவள் காலப்பேசிக்கு அழைக்கலாமா?’

காலப்பேசியை எடுத்து அவள் பெயரைத் தேடி அழுத்.. ’அந்தத் தகவல்?! அது ஏன் அப்படியிருந்தது? ஒரு வேளை ஏதாவது செய்தியை மறைத்து அனுப்பியிருக்கிறாளா? அப்படியானால் இப்பொழுது அவளை அழைப்பது சரியாக இருக்காது’ என்று தோன்றியது.

அவள் அனுப்பியிருந்த தகவல் என்னைக் குழப்பியது. அதைப் புரிந்து கொள்ள முயன்றேன். ’என்னவாக இருக்கும்? எப்படி டீக்ரிப்ட் பண்ணுவது?’

அந்த செய்தியை எனது கணிணியில் கொடுத்து, தெரிந்த எல்லா முறைகளிலும் அதை உடைக்க முயன்றேன்.

‘ஹெக்ஸா டெசிமல் போல் இருக்கிறது. ஆஸ்கி கோடாக இருக்குமோ?! EA, EF.. E8F0. இரண்டு எண்கள் சேர்த்து ஒரு எண். EA...EF. ஆஸ்கியில் EA என்ன?’ கணிணியில் பார்த்தேன். EA -> ê, EF -> ï. ’இல்லை ஆஸ்கி இல்லை. வேறு ஏதோ..’

ஒரு மணி நேரமானது. ம்ஹூம்! முடியவில்லை. கணிணியில் ஆட்டோ டீக்ரிப்ட் வசதியைத் தொடங்கி விட்டேன். ஆயிற்று மேலும் பதினைந்து நிமிடங்கள். கணிணி பதில் ஒன்றும் சொல்வதாயில்லை. களைப்பாயிருந்தது. அப்படியே மேசையில் தலை வைத்து கண்களை மூடினேன்.

பூர்ணா - இரண்டு வருடங்களாக என் வீட்டில் என்னுடன்தான் இருக்கிறாள். பூர்ணா = அழகு. ஆனால் அவசரக்காரி. அவளைக் காதலிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். டாக்டரேட்டுக்காக பழந்தமிழாராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். நான் அவ்வப்போது உதவுவேன் - தமிழாராய்ச்சியில் மட்டும்தான்.

’தமிழாராய்ச்சி.... ஆங். அப்படியிருக்குமோ?!. 0BEA, 0BEF இரண்டும் ஆதிகால கணிணி யூனிக்கோடில் பழந்தமிழ் எண்களின் குறியீடுகள்.’ oBEA -> ௪ - நான்கு. 0BEF -> ௯ - ஒன்பது. பூர்ணா ஒரு முறை பழந்தமிழ் எண்களின் பழைய யூனிக்கோடுகள் என்னவென்று தேடிக் கொண்டிருந்தபொழுது, நான் தான் கண்டுபிடித்துச் சொன்னேன். ’புரிகிறது. எல்லா எண்களின் முன்பும் 0B சேர்த்து, அதற்கானப் பழைய யூனிக்கோடு குறியீடைப் பார்த்தால் தகவல் என்னவென்று புரிந்துவிடும்.’

பூர்ணாவின் கணிணிப் பகுதியில் மேய்ந்து பழைய யூனிக்கொடு அட்டவணையை திறந்து வைத்துக் கொண்டேன்.

’oB95. க. oBBE. துணையெழுத்து. oBB2. ல. oBAA. ப. oBCD. ஒற்றெழுத்து ரொம்ப முக்கியம் இப்ப!!’

”காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௯ ௩௰க்கு வா”

’௨௲௧௧ என்றால் ..’ அவளது எண்கள் பற்றிய குறிப்புகளை கிளறினேன்.

‘2011 4 20 காலை 9 30க்கு. மை காட். 2011க்கு போயிருக்கிறாள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னோ பின்னோ காலப்பயணம் செய்வது சட்டவிரோதம் ஆயிற்றே! எதற்கு அங்கே போனாள்?’. காரில் பறக்கும்பொழுது, செயற்கை டிசி இல்லாத சிக்னல்களில் கூட நின்று பறக்கும் பயந்த குடிமகன் நான். ’விதிமுறைகளை மீறி 2011க்கு போவதா?’

ஆனாலும் பூர்ணாவின் மீது எனக்கு ஒரு கவர்ச்சி இருந்திருக்கிறது. அது என்னைக் கால இயந்திரங்கள் வாடகைக்கு விடும் ஏஜென்சி ஒன்றின் வரவேற்பறைக்கு விரட்டியது.

“மிஸ்டர் பிரவீன். விதிமுறைகளெல்லாம் தெரியுமில்லையா? ஆயிரம் வருடங்களுக்கு முன்னேயோ பின்னேயோ போகக் கூடாது. அடுத்த எழுபது வருடங்களுக்கு போகக் கூடாது. உங்க வயசு என்ன?”

“இருபத்தி ஏழு.”

“ம்ம். முந்தைய இருபத்தியெட்டு வருடங்களுக்குப் போகக் கூடாது. இயந்திரத்தை சேதமில்லாமல் ஒப்படைக்கனும். சின்ன சேதமானாலும், இயந்திரத்தின் முழு விலையையும் செலுத்தனும். இங்கே உங்கள் ஒப்புதலை சொல்லுங்க.” சொன்னேன்.

இயந்திரத்தை அணுகினேன். அது தரையில் ஓடும் ஒரு பழைய மாடல் கார் மாதிரிதான் இருந்தது. ஸ்டீயரிங், கியர், பிரேக் போன்ற பழைய வஸ்துக்களுடன், கண்ட்ரோல் பேனல், ஹோலோகிராஃபிக் டிஸ்பிளேக்கள் போன்ற புதிய சாமாச்சாரங்களும் இணைந்திருந்தன.

உள்ளே ஏறி முதலில் ரா பட்டுக்கு செலுத்தினேன். மனதில் ஒரு பயம். ’நான் எங்கே போகிறேன் என்பதையெல்லாம் கண்காணிப்பார்களா?’. ராஜீவ்; அவனைக் கேட்கலாம். அவன் கால இயந்திரங்கள் ஷோ ரூமில்தான் வேலை செய்கிறான். அவனை வீஃபோனில் அழைத்தேன். குழப்பமான ஒளிக்கோர்வைக்குப் பின் சிக்னல் வீக் என்று சொல்லியது.

யோசித்துக் கொண்டே இயந்திரத்தை செலுத்திக் கொண்டிருந்தேன், ‘பூர்ணா ஏற்கனவே 2011க்கு சென்றிருக்கிறாள். தடை செய்யப்பட்ட வருடம். இதுவரை அவளைப் பற்றி ஏதும் கேள்வியில்லை. ஸோ, கண்டிப்பாக கண்காணிக்கப்படவில்லை.’

ரா பட், பீட் ரோட் வந்து விட்டது. ஒரு ஓரமாக ஒதுக்கி நிறுத்தினேன்.

டெஸ்டினேஷன் பேடில்,’2011-ஏப்ரல்-20 9.30 AM' என்று அமைத்தேன். ’Travel' பட்டனை அழுத்த...
சிலீலீலீங்...
டொம்ம்ம்
க்ளீளீளீஈச்
எனது இயந்திரத்தின் முன்,பின் கண்ணாடி கூரை எல்லாம் திடீரென்று நொறுங்கியது. என்ன நடக்கிறது என்று புரிவத “டாய் ங்...தா எறங்குடா” என்று கத்தியவாறு ஒரு முரட்டு உருவம் என்னை நோக்கி ஓடி வந்தது. கையில் அது என்ன? வாள் மாதிரி பின் பக்கம் வளைந்து கொண்டு?! ஏதோ ஓர் உந்துதலில் இயந்திரத்தின் கதவைத் திறந்து வெளியே குதித்தேன். நிறைய பேர் அதே போல் கும்பல் கும்பலாக அந்த வாள், தீப்பந்தம், கட்டை முதலியவற்றுடன் எல்லாப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தனர். “198, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை” என்று எழுதியிருந்த போர்ட் ஒன்று என் அருகே விழுந்து உடைந்தது. எரிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்றில்
“வாழும் தெய்வமே....
வெற்றிக் கனி....
காணிக்கையாக்குகி...”
சர சர சர சர
எனது இயந்திரத்தின் முன்புறம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வைத்தவன் என்னை நோக்கி ஒரு கட்டையை விட்டெறிந்தான். அது என் மூக்கைத் தொடுமுன் ஒரு பெண் என் மேலே விழுந்து என்னைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். “சீக்கிரம் ஓடு பிரவீன்.”

“பூர்ணா!? என்ன நடக்குது இங்க?”

“அப்புறம் சொல்றேன். முதல்ல ஓடு.” ஓடினோம். ஒரு குறுகலான கட்டிடத்துக்குள் புகுந்து கொண்ட பின் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

”பூர்ணா, வாட் த ஹெல் ஆர் தீஸ்? நீ எதுக்கு இங்கே வந்தே? என்ன நடக்குது இங்கே?”

”காம். காம். ஒன்னொன்னாக் கேளு.”

“நீ எதுக்கு இந்த தடை செய்யப்பட்ட 2011க்கு வந்தே?”

“ஆராய்ச்சிக்குத்தான். இந்த வருடம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழின் உலகப்பொது மொழி முன்னேற்றத்துக்குக் காரணமான பல முக்கிய முடிவுகள் எடுத்தாங்கன்னு ஒரு தகவல் தெரிஞ்சது. ஆனா என்னென்ன முடிவுகள்னு தெரியலை. அதான், நேர்லயே வந்து பார்க்கலாம்னு வந்தேன்.”

“இங்கே மாநாடு எதுவும் நடக்கிற மாதிரித் தெரியலையே?”

“தேதி சரியாத் தெரியலை. ஒரு உத்தேசமா வந்தேன். தேர்தல் கலவரமாம். கலவரம்னெல்லாம் ஹிஸ்ட்ரீலதானே படிச்சிருக்கோம். இப்பத்தான் நேர்ல பாக்குறோம். த்ரில்லிங்கா இல்லை. நம்ம முன்னோர்கள் எவ்வளவு வீரமா சண்டை போடறாங்க பார்த்தியா?” பூர்ணா சில சமயம் இப்படித்தான்.

“வீரமா சண்டையா? காட்டுமிராண்டித்தனமா இருக்கு.”

“நான் கொண்டு வந்த இயந்திரத்தையும் எரிச்சுட்டாங்க. அதான் என்னைக் கூட்டிப்போக உன்னை இங்கே வரச் சொன்னேன். டைரக்டா காலப்பேசியில் கூப்பிட்டாலோ, நேரடியா தகவல் அனுப்பிச்சாலோ, நம்ம காலத்துக் குற்றத்தடுப்புப் பிரிவு அதை ட்ரேஸ் செய்துருவாங்க. அதான் க்ரிப்ட் பண்ணித் தகவல் அனுப்பினேன். ஆனா, இப்ப உன்னோடதையும் எரிச்சுட்டாங்க.”

“அறிவிருக்கா? கலவரம் நடக்குதுன்னு தெரியுதில்ல. அப்புறம் எதுக்கு இங்கே வரச் சொன்னே. வேற ஏதாவது கொஞ்சம் அமைதியான இடத்துக்கு வரச் சொல்லியிருக்கலாம்ல?”

“நான் தகவல் அனுப்பும்போது இந்த இடத்துல கலவரம் ஏதும் இல்லையே. அதான் அப்படி அனுப்பினேன். இப்ப என்ன செய்றது?”

“தெரியலை. எத்தனை நாள் கலவரம் நடக்கும்? எப்படியும் ரெண்டொரு நாள்ல அடங்கிறாதா? அடங்குனப்புறம் யாரையாவது நண்பர்களை அழைக்கலாம்.”

“விளையாடறியா? நாம இங்க ஒரு நாள்கூடத் தங்க முடியாது. இந்தக் காலத்துப் பணம் நம்மகிட்ட இல்லை. ஒன்னும் பண்ண முடியாது. அதனால சீக்கிரம் நாம போயாகனும்.”

வெளியே சத்தம் குறைந்து கொண்டே போனது. இருபது நிமிடங்களுக்குப்பிறகு சத்தமேயில்லை. பூர்ணாவை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் வெளியே வந்து பார்த்தேன்.

ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் தாறுமாறாக சிதறியிருந்தன. ஆனால் தெருவில் ஆள் நடமாட்டமேயில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் ஓடிக் கொண்டிருந்த கும்பல் எதையும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக் காணவில்லை. நான் இன்னமும் பீட்டர்ஸ் சாலையில்தான் இருக்கிறேன் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பூர்ணாவை அவசரமாக அழைத்தேன். ”உன் காலப்பேசியைக் கொடு.”

அவள் எனக்கு அனுப்பிய மெஸேஜை எடுத்து திருத்த ஆரம்பித்தேன். “யாருக்குத் தகவல் அனுப்புகிறாய்?”.

“ராஜீவிற்கு.”, ’இப்பொழுது மணி என்ன?’, ”பத்து பதினைந்துக்கு கோட் என்ன?”

“F0 E7 EB. ஏய்? என்ன செய்கிறாய்? மடையா!”

“கவலைப்படாதே! நீ அனுப்பிய முறையில் என்க்ரிப்ட் பண்ணிதான் அனுப்பினேன்.”

“எனக்கு அறிவிருக்கான்னு அப்பக் கேட்டே? இப்ப உனக்கு அறிவிருக்கா?”

“ஏன்? என்ன?”

“இந்த யூனிக்கோட் முறை உனக்கும் எனக்கும்தானே தெரியும். ராஜீவிற்கு எப்படித் தெரியும்? இது பழைய யூனிகோடு. நமது காலத்தில் புழக்கத்திலேயே கிடையாது. இதை ராஜீவ் எப்படி டிக்ரிப்ட் செய்து, இங்கே வந்து, நம்மைக் காப்பாற்றி... ஏய்! அங்கப் பார்”

அங்கே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்தது.... ராஜீவ். ’வந்துவிட்டான். கில்லாடிடா’. கார் வேகமாக எங்கள் அருகே வந்து நின்றது. “சீக்கிரம் ஏறுங்கள்”. தாவிக் கொண்டோம். டெஸ்டினேஷன் பேடில் நிகழ்காலத்தை அமைத்து “டிராவல்”ஐ அழுத்த...

‘அப்பாடா. தப்பித்து விட்டோம்.’

எங்களை வீட்டில் இறக்கிவிட்டு ராஜீவ், “ஸீ யூ படீஸ். கேட்ச் யூ ஸூன்” என்று கிளம்ப எத்தனிக்க, நான் “ராஜீவ்! ஒரு நிமிஷம்டா. நான் வாடகைக்கு எடுத்துட்டுப் போன இயந்திரத்தைத் திரும்பக் கொண்டு வரலையே. இந்த வருடத்துக்குத்தான் போனேன்னு குற்றத்தடுப்புப் பிரிவு டிராக் பண்ணுவாங்களா?”

ராஜீவ் கண்ணடித்தான். “அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. கால இயந்திரத்தை டிராக் செய்யவெல்லாம் நாம் இன்னும் டெக்னிக்கலாக வளரவில்லை. எல்லாம் ஒரு பயமுறுத்தல்தான். நானே பலமுறை அந்த மாதிரிப் போயிருக்கேன்.”

“சரி. வாடகைக் கம்பெனிக்காரன் ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்பானா? இயந்திரம் காணோம்னா எந்த வருடத்துக்குப் போனீங்கன்னு கேள்வி வராதா?”

“கவலைப்படாதே. தப்பித்தவறி அந்தக் கம்பெனிக்காரன் உன்னை காண்டாக்ட் பண்ணினா, தொலைஞ்சு போன இயந்திரம் எங்கேன்னெல்லாம் கேக்க மாட்டான். வேற இயந்திரம் வாடகைக்கு வேணுமான்னு வேணாக் கேட்பான். ஏன்னா, இயந்திரத்தோட விலையை ஏற்கனவே உன்கிட்ட வாடகையா வசூலிச்சிருப்பான். இது ரொம்ப ரிஸ்கான பிஸ்னஸ். வாடகைக்கு எடுத்துட்டுப் போறவனெல்லாம் திரும்ப வருவான்னு நிச்சயமேயில்லாத பிஸ்னஸ். அதுனால முதல்லேயே ஃபுல் அமவுண்டையும் கஸ்டமர்ட்டக் கறந்துடுவாங்க. உன்ன மாதிரி திரும்பக் கொண்டு போய் இயந்திரத்தைக் கொடுக்கிற கேஸ்கள் ரொம்பக் கம்மி. ஸோ. டோண்ட் வொரி. பை”, போய் விட்டான்.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக பூர்ணா, ”சரியான பயந்தாங்கொள்ளிடா நீ. உன்னோட ஸேஃப்டிக்கு இதெல்லாம் அவன்கிட்டே கேட்டியே! ஒரு தாங்ஸ் சொன்னியா?”

’அட, ஆமாம் மறந்தே விட்டேன்.’ “சொல்லிட்டாப் போச்சு.” வீஃபோனில் ராஜீவை அழைத்தேன். ராஜீவைப் போன்ற உருவம் தோன்றி, “ஹாய் ஃபிரண்ட்! நான் அலுவலக நிமித்தம் விண்வெளி நகரத்துக்கு சென்றிருக்கிறேன். அவசர செய்தியென்றால் எனது விண்வெளி நகர எண்ணுக்கு அழையுங்கள். எனது விண்வெளி நகர எண் ஆறு ஒன்று எட்டு எட்டு ....”

“அதுக்குள்ள அடுத்த பிரயாணமா? கலக்குடா! அவசரம் ஒன்னுமில்லை. திரும்பி வந்ததும் தெரியப்படுத்து. ஒரு பார்ட்டி வச்சுக்கலாம்” என்று பதிந்து விட்டுத் துண்டித்தேன்.


ஒரு மாதம் கழித்து, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில், காற்றில் மிதந்து கொண்டிருந்த மேஜையைச் சுற்றி, நான், பூர்ணா, ராஜீவ் மூவரும் நாற்காலிகளில் மிதந்து கொண்டிருந்தோம்.

“என்னடா திடீர்னு பார்ட்டி? ஏதாவது...?” குறும்பாக சிரித்தான்.

“எல்லாம் ஒரு தாங்ஸ் கிவ்விங்தான்.”

“ராஜீவ், அந்த மெஸேஜை எப்படி நீ டிக்ரிப்ட் பண்ணினே?! அதான் ஆச்சர்யமா இருக்கு” பூர்ணா.

“எந்த மெஸேஜ்?”

“என்னடா, தெரியாத மாதிரிக் கேட்கிறே? உன்னோட காலப்பேசிக்கு அனுப்பினோமே அந்த மெஸேஜ்.”

“ஆமாம் அந்த மெஸேஜைப் பார்த்தேன். ஒன்றும் புரியலை.”

”அப்புறம் எப்படிடா கரெக்டா அன்றைக்கு ரா பட்டுக்கு வந்தே?”

“ரா பட்டுக்கா? என்றைக்கு? எதுக்கு?”

”என்னடா விண்வெளிப் பிரயாணத்துல எல்லாம் மறந்துட்டியா? ஒரு மாதம் முந்தி என்னையும் பூர்ணாவையும் 2011லிருந்து காப்பாற்ற ரா பட் வந்தியே. அதைச் சொல்றேன். அதுக்குதான் இந்த தாங்ஸ் கிவ்விங் பார்ட்டி!”

“அன்னைக்கு என்ன நடந்தது விளக்கமா சொல்லு.”

“ஆமாம். அதை உன்கிட்டே சொல்லவேயில்லேல்ல. அன்றைக்கு எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது பூர்ணாவிடமிருந்து. அதை டீக்ரிப்ட் செய்து..........அழைத்தேன். அதற்குள் நீ விண்வெளி நகரம் போய்ட்டே.”

“வெய்ட் எ மினிட்.” ராஜீவ் அவனது காலப்பேசியை எடுத்தான். நான் அவனுக்கு அனுப்பிய மெஸேஜை என் முன் நீட்டி, “இதற்கு அர்த்தம் சொல்லு.”

“காலப்பேசி்யில் அழைக்காதே வசமாக மாட்டிக் கொண்டு விட்டேன் ரா பட் பீட் சாலைக்கு ௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு வா”

“௨௲௧௧ ௪ ௨௰ காலை ௰ ௧௫க்கு அப்படின்னா?”

”2011 4 20 காலை 10 15க்கு”

“எக்ஸ்கியூஸ்மீ படீஸ். நீங்க சாப்பிட்டுக்கிட்டிருங்க. நான் சீக்கிரம் திரும்பி வந்துடறேன். ஒரு அவசர வேலையிருக்கு.”

“டேய். டேய். பார்ட்டிக்கு வந்துட்டு எங்கடா அவசரமா போற?”

“2011 4 20 காலை 10 15க்கு. உங்க ரெண்டு பேரையும் காப்பாற்ற.”

திரும்பத் திரும்ப

மிஸ்டர் சிவநேசனை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சென்னைக்கு அருகே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் சரியாக ஐம்பத்தெட்டு வயது வரை வேலை செய்து, ரிடையரானவர். அவரது இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தது, அவரது மனைவி சென்ற ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரி காலத்தில் இடம் பிடித்தது, அமெரிக்க மாப்பிளைகளுக்கு டிமாண்ட் இருந்த நேரத்திலேயே வளைத்துப் போட்டு, இரு பெண்களையும் அமெரிக்கா அனுப்பியது, போன்ற கதைக்குத் தேவையில்லாத விஷயங்களுக்குள் போய் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஞாபகம் இருக்கட்டும், நேரம் மிகவும் முக்கியம்.

இப்படியாக வாழ்ந்து வந்த மிஸ்டர் சிவநேசனின் வாழ்க்கையில், அவருக்கு மட்டுமே தெரிந்த அதிமுக்கியமான/மில்லாத பிரச்சனை ஒன்றிருந்தது. சில விஷயங்கள் நடந்து முடிந்த பின், அவருக்கு அந்த நிகழ்ச்சி ஏற்கனவே முன்பு நடந்திருப்பதாக ஒரு தேசலான ஞாபகம் வரும். நிகழ்ச்சி என்றில்லை. சில சமயம் சில முகங்கள், சில பாதைகள், சில பயணங்கள், இவற்றை வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்தாலும், 'முன்னாடி பார்த்த மாதிரி இருக்கே!?' என்ற எண்ணம் எழும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால், சிவநேசனின் முதல் பேத்தி பிறந்த பொழுது, குழந்தையை கையில் வாங்கியதும், 'இதே மாதிரி குழந்தை இதுக்கு முந்தி யாருக்கோ பிறந்ததே?! எப்போ...? எங்கே..?' என்று ஒரு நாள் பூராவும் மண்டையை உடைத்துக் கொண்டார். கல்யாணமாகி ஹனிமூனுக்கு கொடைக்கானல் சென்றபொழுது, மனைவியுடன் ஏரியை சுற்றும்பொழுது, தான் ஏற்கனவே இதே முறையில் அந்த ஏரியை சுற்றியிருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் அதற்குமுன் கொடைகானல் சென்றதேயில்லை. அவர் இந்தக் கதையை படிக்க நேர்ந்தால் கூட, இதை இதற்கு முன் எப்பொழுதோ படித்ததாக அவருக்கு நினைவிருக்கக் கூடும்.ஆனால் இந்த ஞாபகங்கள் எல்லாமே, அந்தக் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த பிறகோ, அல்லது அந்த முகங்களைப் பார்த்த பிறகோதான் அவருக்குத் தோன்றும். அதற்கு முன்பே இப்படி பார்க்கப் போகிறோம், நடக்கப் போகிறது என்ற ஈ.எஸ்.பி.யெல்லாம் கிடையாது.

அவர் தனது இந்த நினைவுகள் குறித்து பல முறை யோசித்திருக்கிறார். சிறு வயதில், இவையெல்லாம் முன் ஜென்ம ஞாபகங்கள் என்று கூட கொஞ்ச நாள் நம்பிக் கொண்டிருந்தார். கொஞ்சம் அறிவியல் தெரிந்தவுடன், ஸ்கீஸோஃப்ரீனியாவின்(Schizophrenia, சரியாக உச்சரித்துவிட்டால் உங்கள் முதுகில் நீங்களே ஒரு முறை தட்டிக் கொடுத்துக் கொள்ளவும்) அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. ஆனால் இந்த நினைவுகளால் அவரது வாழ்க்கை இதுவரை ஒரு முறைகூட பாதிக்கப்பட்டதில்லை என்பதால், அதிகம் கவலைப்படுவதில்லை.

இதுவரை பாதிக்கப்பட்டதில்லை, அதாவது இந்த அறுபத்தி இரண்டு வயது வரை. இந்த வருடப் பிறந்த நாளுக்கு அவரது நண்பர்(பெயர் ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள்) வடநாட்டு யாத்திரைக்கான பேக்கேஜை பரிசளித்தார். மிஸ்டர் சிவநேசனுக்கும் வெகுநாட்களாக வட இந்திய கோயில்களை தரிசிக்கும் ஆசை இருந்ததால், உடனே கிளம்பி விட்டார். பதினாறாவது நாள் காசிக்கும் வந்து இறங்கிவிட்டார்.

விஸ்வநாதர் தரிசனம் முடித்து, கோயிலை சுற்றி வரும்பொழுது, அந்த நினைவு - "இந்தக் கோயிலுக்கு இதற்கு முன் எப்பொழுது வந்திருக்கிறோம்? எப்பொழுதோ பார்த்த மாதிரி இருக்கே?!'. யோசித்தவாறே வாசல் வழியாக வெளியேறப் போனார். அபொழுதுதான் அந்தப் பெண் குறுக்கே வந்தாள்.(கோயிலுக்குள் கெட்டெண்ணமெல்லாம் கூடாது. அதனால் வயது, இன்ன பிற விவரங்கள் தர முடியாது).

"யஹ் ராஸ்தே மே(ங்) நஹீ(ன்) ஜாயியே. உதர் மே(ங்) ஜாஓ."

மிஸ்டர் சிவநேசனுக்கு ஹிந்தி தெரியாதென்றாலும், ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இந்த வழியாகப் போகாதீர்கள் என்கிறாள். மற்ற எல்லோரும் போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்?'. அவள் காட்டிய வழியை பார்த்தார். அந்த வாசல் வழியாகவும் பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த வாசல் வழியாகத்தானே இவரோடு டூர் வந்தவர்கள் எல்லோரும் வெளியேறினார்கள். 'அவர்களோடு சேர்ந்து கொள்வதே உத்தமம்'. என்று முடிவெடுத்து, மறுபடி அந்த வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"ஸார் ப்ளீஸ் யூஸ் தட் வே." அந்தப் பெண் இப்பொழுது பாஷை மாறினாள்.

சிவநேசனுக்கு கோபம் வந்தது. ஏனென்றால் அவர் போக நினைத்த வாசல் வழியே நிறைய பேர் வெளியேறினார்கள். ஆனால் அந்தப் பெண் தன்னை மட்டும் வேறு வழியாகப் போகச் சொல்வானேன்?

"வொய் கேன்ட் ஐ யூஸ் திஸ் வே?"

அந்தப் பெண் இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. "யூ கேன் ஸார். பட் ப்ளீஸ் யூஸ் தட் ஒன்." என்றாள் மறுபடி.

அவளை ஒரு முறை கோபமாக முறைத்துவிட்டு, அவர் போக நினைத்த வாசலை நோக்கி வேகமாக நெருங்கினார். 'இந்தப் பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?!' நினைத்தபடி படியில் கால் வைக்... "மிஸ்டர் சிவநேசன், ஒரு நிமிஷம்" அதே பெண்ணின் குரல்தான். திரும்பினார்.

"உனக்கு என் பேர் எப்படித் தெரியும்?" என்றார் ஆச்சர்யமாக.

"அது.., வாங்க பேசிக்கிட்டே போலாம்." என்றவாறு அவள் காட்டிய வாசலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

"அட நில்லும்மா. எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு. ஏன் என்னை அந்த வாசல் வழியா அனுப்புறதில இவ்வளவு குறியாக இருக்கே?"

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். முகத்தில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். பிறகு ஒரு முடிவிற்கு வந்து, "அந்த வழியாப் போனீங்கன்னா நீங்க இறந்து போயிருவீங்க. அதனால்தான் இந்த வழியாப் போகச் சொல்றேன்."

சிவநேசன் அவளை நம்பிக்கையில்லாமல் பார்த்தார். 'இந்த ஊரில் இந்த மாதிரி நிறைய கேஸ் திரியுது'. "என்னம்மா ஜோஷ்யமா? எனக்கு நம்பிக்கையில்லை. வேற யார்கிட்டேயாவது போய்ச் சொல்லு." என்றவாறு திரும்பப் போனார், "மிஸ்டர் சிவநேசன், இது ஜோஷ்யம் இல்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க." மறுபடி நின்றார், "சரி சொல்லு."

அந்தப் பெண் சிறிது நேரம் சிந்திப்பது தெரிந்தது. பின்னர், "மிஸ்டர் சிவநேசன். என்னோட பெயர் பூர்ணா. இது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி. நீங்க அதில ஒரு என்டிட்டி. அதான் சொல்றேன், அந்த வாசல் வழியாப் போங்க."

"என்னம்மா சொல்றே? விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நான் எதுக்கு அந்த வாசல் வழியாப் போகனும். யாரைக் கேட்டு என்னை என்டிட்டி ஆக்கினே?"

"மிஸ்டர் சிவநேசன். நாங்க யாரையும் கேக்க வேண்டியதில்லை. நான் இப்போ சொல்றது உங்களுக்கு நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா அதுதான் உண்மை. எங்களோட விஞ்ஞான ஆராய்ச்சி, இந்த பூமிதான். இது எங்களால் உருவாக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட ஒவ்வொரு மாறுதலும் ஒரு விஞ்ஞான விதிக்குட்பட்டது. உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி சொல்லனும்னா, இந்த பூமி ஒரு சிமுலேஷன் ப்ரோக்ராம் மாதிரின்னு வச்சுக்கங்களேன். இதில் ஆரம்ப நிலைகளை நாங்கள் உண்டாக்கினோம். இந்த பூமிக்கான விஞ்ஞான விதிகளை ஏற்படுத்தினோம். அந்த விதிகளுக்கேற்ப, இந்த பூமி மாறுதலடைந்து வருகிறது. இந்த மாறுதல்களின் மூலம் எங்களுக்குப் பல கேள்விகளுக்கான விடைகள் கிடைத்திருக்கின்றன. இந்த மாறுதல்களின் முக்கிய தூண்டுகோல்களாக சிலர்/சிலது இருக்கும். அப்படிப்பட்ட சிலதில் நீங்களும் ஒருவர். ஆனால் நீங்கள் இந்த சிமுலேஷன் ப்ரோக்ராமில் ஒவ்வொரு முறையும், இந்த இடம் வந்த பின், இந்த வாசலையே தேர்ந்தெடுக்கிறீர்கள். அடுத்தப் பத்தாவது நிமிடம் இறந்தும் போகிறீர்கள். இந்த முறையும் நீங்கள் அதே வாசல் வழியே வெளியேறினால் அதே முடிவே வரும். சோதனையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு தீர்மானங்கள் செய்தால்தான் முடிவுகள் வேறு மாதிரி எங்களுக்குக் கிட்டும். உங்கள் வாழ்க்கையில் இந்தத் தீர்மானங்களை மாற்றி எடுக்கும் வாய்ப்புகள் பல அமைந்திருந்தன. ஆனால் நீங்களோ ஒவ்வொரு முறையும் எப்பொழுதும் எடுக்கும் தீர்மானங்களையே எடுத்தீர்கள். இது உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இதிலும் நீங்கள் பழைய தீர்மானத்தை எடுப்பதானால், எங்களுக்கு மேலும் அறுபத்தி இரண்டு வருடங்கள் வீண். அதனால்தான் உங்களைத் தடுத்து, கடைசித் தீர்மானத்தை மாற்றி அமைக்க, நான் இந்த உருவில் வந்திருக்கிறேன்."

மிஸ்டர் சிவநேசன் அவளைக் கிராக்தனமாக, லூஸ்தனமாக, பைத்தியக்காரத்தனமாக, இன்னபிறத்தனமாகப் பார்த்தார், "நீ சொல்றது எதுவும் நம்புற மாதிரி இல்லியேம்மா? அப்ப இதுக்கு முந்தின தடவை நடந்ததெல்லாம் என்னோட முன் ஜென்மமா?"

"முன் ஜென்மமுமில்லை, பின் ஜென்மமுமில்லை. ஒவ்வொன்றும் ஒரு இட்டரேஷன்; சுற்று. அவ்வளவுதான்."

"சரி. நீ சொல்றது உண்மைன்னே வச்சுக்குவோம். உங்களோட இந்த ஒவ்வொரு சுற்றிலேயும், பூமி விஞ்ஞானரீதியா பல முன்னேற்றங்கள் அடைஞ்சிருக்கு. இந்த சுற்றில இருக்கிற விஞ்ஞான வசதிகள் போன சுற்றில் கிடையாது. அப்படியிருக்க போன சுற்றும், இந்த சுற்றும் எப்படி ஒரே மாதிரி இருக்கும்?"

"மிஸ்டர் சிவநேசன், இந்த விஞ்ஞான வளர்ச்சிகள் எல்லாமே சிமுலேஷனில் ஒரு பகுதிதான். வேறு வேறு என்டிட்டிகள் எடுத்த வேறு வேறு தீர்மானங்களால் நிகழ்ந்தவை. அவை உங்களுடைய சுற்றுகளை வேறுபடுத்திக் காட்டினாலும், அவை உங்களது தீர்மானங்களைப் பாதிக்கவில்லை. அதனால் உங்களது சுற்று எப்பொழுதும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிந்து கொண்டிருக்கிறது. இந்த முறையாவது அதை மாற்றியாக வேண்டும். மிஸ்டர் சிவநேசன். நேரம் அதிகமில்லை. பேசிக் கொண்டே இருக்க முடியாது. நீங்கள் சீக்கிரம் தீர்மானித்தாக வேண்டும். அந்த வாசல் வழியாக வெளியேறுங்கள்."

மிஸ்டர் சிவநேசனுக்கு சரியாக எதுவும் புரியவில்லை. எதையும் தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரம் யோசித்தார்.

அந்தப் பெண்ணை இப்பொழுது காணவில்லை. மிஸ்டர் சிவநேசன் சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். மெதுவாக நடந்து வாசலைக் கடந்து வெளியேறினார்.

பொங்கலோ பொங்கல்

'பண்டிகை நெருங்குகிறது. இந்த முறை பூர்ணா, விஷ்வா, வர்ஷா எல்லோரும் விரும்பும்படி ஏதாவது வாங்க வேண்டும்.' என்று நினைத்தவுடனேயே அதுதான் நினைவிற்கு வந்தது. சின்ன வயதில் இருந்தே அதன் மீது ஆசை.

'என் அப்பாவால்தான் அதை எனக்கு வாங்கிக் கொடுக்க முடியவில்லை. நானாவது என் பிள்ளைகளுக்கு அதை வாங்கிக் கொடுப்பேன். ஆம். நல்ல ஐடியா. கையில் இப்பொழுது ஓரளவு பணமும் இருக்கிறது. இந்த முறை வாங்கிவிடலாம். ஸ்பேஸ் ஷட்டில். இந்த முறை விடுமுறைக்கு பூர்ணாவையும், குழந்தைகளையும், அதில் அழைத்துக் கொண்டு எங்காவது கோள் சுற்றி வரலாம்.', இந்த எண்ணம் வந்ததுமே, எனக்கு மூளை பரபரத்தது.

உடனடியாக எனது பாங்க் பாலன்ஸை செக் செய்தேன். மார்கெட்டில் ஷட்டில் விற்கும் கம்பெனிகளின் தளங்களை வருவித்து சிறிது நேரம் அனலைஸ் செய்தேன். சாக்ராஸ் கம்பெனிதான் சிறந்ததாகத் தெரிகிறது.

சாக்ராஸ் கம்பெனியின் தளத்தில் "விற்பனைப் பிரதிநிதி உதவி" என்றதைத் தொட்டேன்.

ஸிந்தசைஸ் செய்த அழகான குரல் "ஆண் வேண்டுமா? பெண் வேண்டுமா?" என்றது.

"ஆண்" என்றேன்.

அடுத்த நொடி, எனக்கு எதிரில் மேஜையும் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அந்த மனிதனும், ஹை டெஃபினிஷன் ஹோலோகிராஃபிக் ப்ரொஜக்ஷன் பிம்பமாக உருவாயினர்.

"ஹலோ ஸர், நான் சாக்ராஸ் ஸ்பேஸ் விங் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி ராஜீவ். உங்களுக்கு உதவுவதற்காக தயாராயிருக்கிறேன்."

"நான் ஒரு ஸ்பேஸ் ஷட்டில் வாங்கலாம் என்றிருக்கிறேன்.உங்கள் கம்பெனியின் ஷட்டில்கள் பற்றிய விவரங்களை சொல்ல முடியுமா?"

"எக்ஸெலண்ட் ஐடியா ஸர். சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். முதலில் உங்கள் விருப்பங்களை கூறுங்கள். அதற்கேற்ற மாடல்கள் பற்றி விளக்குகிறேன்."

"ஃபைவ் ஸீட்டர் அல்லது சிக்ஸ் சீட்டராக இருக்க வேண்டும். கண்ட்ரோல் செய்வது எளிதாக இருக்க வேண்டும். ஐந்து பேருக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இடம் இருக்க வேண்டும். காம்பாக்டாகவும் இருக்க வேண்டும்."

"சாலிட் ஃப்யூல் எஞ்ஜின் வேண்டுமா? லிக்விட் ஃப்யூவல் எஞ்ஜின் வேண்டுமா?"

"எதுவாகயிருந்தாலும் ஓகே. இரண்டு எரிபொருளுமே மார்கெட்டில் கிடைக்குமல்லவா?"

"ம்ம். உங்களது தேவைகளுக்கு ஏற்றார் போல எங்களிடம் மூன்று மாடல்கள் இருக்கின்றன. இது முதல் மாடல்" என்று அவன் கை நீட்டிய திசையில் அந்த மாடலின் ஹோலோகிராஃபிக் பிம்பம் உருவானது.

"பெயர் சாக்கி. ஐந்து பேர் அமரலாம். பே லோட் 3 டன். மிகவும் சிறியது. ஃபுயூவல் சேம்பரில், 8 மணி நேரம் தொடர்ந்து எரிப்பதற்குத் தேவையான எரிபொருளை நிரப்ப முடியும். 2 ராக்கெட் பூஸ்டர்கள், சாலிட் ஃப்யூவல் எஞ்ஜின். விலை 5,134,999.

அடுத்து இந்த மாடலின் பெயர் ராஸ். ஆறு பேர் அமரலாம், பே லோட் 4 டன். ஃப்யூவல் சேம்பர் கெபாசிட்டி 10 மணி நேர எரிபொருள். 3 ராக்கெட் பூஸ்டர்கள், சாலிட், லிக்விட் இருவகை ஃப்யூவல் எஞ்ஜின்களும் உண்டு. விலை 6,245,999. இது மார்கெட்டில் இப்பொழுது அதிகமாக விற்பனையாகும் மாடல். இந்தத் திருவிழா காலத்தை முன்னிட்டு, இரண்டு ஸ்பேஸ் ஷூட்டுக்கள், இந்த மாடலுடன் இலவசம்.

அடுத்த மாடல் கிரா. ப்யூர்லி லிக்விட் ஃப்யூவல் எஞ்ஜின். ஆறு பேர் அமரலாம். இரண்டு ராக்கெட் பூஸ்டர்கள். 9 மணி நேர எரிபொருள் கெபாசிட்டி. பே லோட் 3.5 டன். விலை 5,869,999. ஒரு ஸ்பேஸ் ஷூட் இலவசம்.

என்னைக் கேட்டால் நீங்கள் ராஸ் மாடலை எடுத்துக் கொள்வது சிறந்தது என்பேன். இதில் உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கின்றன. இரண்டு ஃப்யூவல்களையுமே உபயோகப்படுத்தமுடியும் என்பது இதன் சிறப்பு. மேலும் அதிகக் கெபாசிட்டி ஃப்யூவல் சேம்பர். மேலும்....."

"பாதுகாப்புக் குறைபாடுகள் ஏதும் உண்டா? பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?"

"சாக்ராஸ் ஸ்பேஸ் விங்கின் ஷட்டில்கள் இதுவரை ஒரு முறை கூட விபத்தில் சிக்கியதில்லை. இதுவரை வாங்கியவர்கள் யாரும் ஒரு முறை கூட பழுதானதாக ரிப்போர்ட் செய்ததில்லை. விசாரித்துப் பாருங்கள். எங்கள் கம்பெனியின் பாதுகாப்பு விதிமுறைகள் அப்படிப்பட்டவை."

"தெரியும். டிஸ்கவுண்ட் உண்டா?"

"ஓ! சாக்கி, கிரா, இரு மாடல்களுக்கும் 12 சதவிகிதம் டிஸ்கவுண்ட் இருக்கிறது. ராஸ் மாடலுக்கு டிஸ்கவுண்ட் கிடையாது. அதற்குப் பதிலாகத்தான் ஸ்பேஸ் ஷூட்டுக்கள்."

"எனக்கு நீங்கள் அதே 12 பர்சன்டேஜ் டிஸ்கவுண்ட் கொடுப்பதாயிருந்தால், நான் ராஸை வாங்கிக் கொள்கிறேன். இல்லையென்றால் நான் வேறு கம்பெனிகள் பார்க்க வேண்டும்."

"கொஞ்சம் இருங்கள்" என்றபடி, அவன் தன் முன் இருந்த திரையோடு ஏதேதோ பேசினான். பத்து நிமிடத்திற்குப் பின், "ஓகே ஸர். எங்கள் கம்பெனி உங்களுக்கு ஃப்ரீ கிப்டுடன் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் தர சம்மதித்து விட்டது. உங்களிடம் லைசன்ஸ் இருக்கிறதல்லவா?"

"இருக்கிறது."

"டெஸ்ட் ரைட் ஓட்டிப் பார்க்கிறீர்களா. எங்கள் கம்பெனி அஸ்ட்ரானிக் உதவுவார்."

"இல்லை தேவையில்லை. என்றைக்கு டெலிவரி செய்வீர்கள்?"

"பென்டிங் ஆர்டர்ஸ் நிறைய இருக்கிறது. 14ம் தேதி காலையில், நீங்கள் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்."

"லேட் ஆகாதே?"

"இல்லை ஆகாது. வீ காரண்டீ யூ. எந்த முறையில் பணம் கட்டப் போகிறீர்கள்?"

"ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்ய முடியுமா?"

"நிச்சயமாக. வீ.இ. மணி, ஈசிஈசிஈ பாங்க், என்.டி.எஃப்.சி பாங்க், ஆகிய கம்பெனிகளை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். ஏதாவது ஒன்றில் நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம்."

எனது பாங்க அக்கவுண்ட் ஈசிஈசிஈயில் இருக்கிறது. அதனால் அதிலேயே எடுத்தால், தவணை கட்டுவது எனக்கு வசதியாக இருக்கும்.

"நான் ஈசிஈசிஈ வங்கியில் கடன் பெற விரும்புகிறேன்."

"ஒரு நிமிடம். முதலில் இந்த பாரத்தை நிரப்புங்கள்."

நிரப்பினேன்.

"பெயர் எதாவது பொறிக்க வேண்டுமா?"

சில விநாடி யோசித்தேன். "P2V2 என்று ஆங்கிலத்தில் பொறித்து விடுங்கள்", எழுதிக் காட்டினேன்.

"சில நொடிகளில், வங்கிப் பிரதிநிதி உங்களை சந்திப்பார்." என்றவாறு காற்றில் ஓரிடத்தில் தொட்டான்.

இப்பொழுது ராஜீவ், அவனது மேஜை நாற்காலிகளோடு மறைந்து, அந்த இடத்தில் இன்னொருவன் தோன்றினான்.

"ஹல்லோ ஸர். நீங்கள்தான் பிரவீனா?"

"ஆம். நான்தான்."

"ராஸ் ஷட்டில் வாங்க விண்ணப்பமளித்திருக்கிறீர்கள் இல்லையா? நோ பிராப்ளம். வயது, சம்பளம் எல்லாம் பிரச்சனையில்லாமல் இருக்கிறது. உங்கள் தகுதிக்கு எங்கள் வங்கியால் ஷட்டில் விலையில் 80 பர்சன்ட் வரை கடன் தர முடியும்."

"95 பர்சன்ட் என்று விளம்பரப்படுத்துகிறீர்களே?"

"அதற்கு நீங்கள் கடன் தொகைக்கு குறைந்த பட்சம் பாதி மதிப்புள்ள சொத்து எதையாவது அடமானம் வைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு சொந்தமாக ஏதாவது கொஞ்சம் நிலம், வீடு ஏதாவது இருக்கிறதா?"

"இல்லை வேண்டாம் நான் வேறு இடங்களில் முயற்சி செய்கிறேன்."

"மிஸ்டர் பிரவீன், ஒரு நிமிடம். உங்களிடம் ஃப்ளையிங் கார் இருக்கிறதா?"

"இருக்கிறது."

"தென் யூ ஆர் எலிஜிபிள் ஃபார் 90%. சொல்லுங்கள் எத்தனை வருடங்கள் தவணைத் திட்டம் வேண்டும். எங்களிடம் 1 வருடம், ஒன்றரை வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் என்று நான்கு திட்டங்கள் இருக்கின்றன. குறைந்த வருடத் தவணை என்றால் வட்டி வீதம் அதிகமாக இருக்கும். இந்த தகவல்களைப் பாருங்கள். எது வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யுங்கள்."

"நான் ஒன்றரை வருடத் தவணைத் திட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.”

“ஷட்டில் பார்க்கிங்கிற்கு இடமிருக்கிறதா?"

“இருக்கிறது.”

"ஓகே. உங்கள் கணக்கில் இருந்து ஒவ்வொரு தவணையையும் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக் கொள்ள உங்கள் அனுமதி தேவை. அது போக டாகுமெண்ட், ப்ராஸஸிங் சார்ஜஸ் எல்லாம் 94,387 ஆகும். அதையும் உங்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ள உங்களது அனுமதி தேவை. அதனால் உங்களது இந்த அனுமதி ஹோலோப்பதிவாக பதியப்படுகிறது. அனுமதி அளியுங்கள்.”

ஹோலோப்பதிவு முடிந்தது. அவன் நன்றி சொல்லிவிட்டு மறைந்த அடுத்த விநாடி, அந்த ராஜீவ் மீண்டும் தோன்றினான். “கங்ராஜுலேஷன்ஸ் ஸர்! இனிஷியல் பேமண்டாக நீங்கள், 562,139.91 கட்ட வேண்டும்.”, என்றான்.

”பேங்க்!” என்றேன். அவன் காட்டிய இடத்தில் எனது எண்ணை எழுதிவிட்டு காத்திருந்தேன். நீலக் கதிர் கற்றைகள் என் இடது கண்ணை ஒரு முறை வருடிச் சென்றது.

“பணம் கிடைத்தது. நன்றி பிரவீன் ஸர். டெலிவரி 14ம் தேதி காலை. வந்து விடுங்கள்.”

“ஒரு நிமிடம். டெலிவரியின் போது ஃப்யூவல் ஃபில் பண்ணிக் கொடுப்பீர்களா, எப்படி?”

“டெலிவரியின் பொழுது 30 நிமிடத் தேவைக்கான ஃப்யூவல் மட்டுமே ஃபில் பண்ணித் தருவோம். வேண்டுமென்றால் நீங்கள் சேம்பரை டெலிவரி எடுக்கும் பொழுது எங்கள் இடத்திலேயே, தனியாகப் பணம் கட்டி நிரப்பிக் கொள்ளலாம். பிரச்சனையிருக்காது. வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?”

”நன்றி.”
காணாமல் போனான்.

'ஷட்டில். எனது ரொம்ப நாள் கனவு. விஷ்வாவிற்கும், வர்ஷாவிற்கும் இதில் பயணம் செய்வது கண்டிப்பாகப் பிடிக்கும். பூர்ணாவை இடுப்போடு அணைத்து அந்தத் தெளிவானக் கறுப்பு வானத்தை, அதில் வைரங்களை போல் மின்னும் நட்சத்திரங்களை, கோள்களின் இயக்கங்களை, காட்டும்பொழுது அவள் உணர்வுகளை ரசிக்க வேண்டும். அவர்கள் இதுவரை அந்தக் காட்சியைப் பார்த்ததில்லை. நான் லைசன்ஸ் சிமுலேஷனில் பார்த்திருக்கிறேன். குழந்தைகளுக்கு ஸ்பேஸ் ஷூட் வாங்க வேண்டும். வீஃபோனில் கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விடலாமா? வேண்டாம்.நேரிலேயே சொல்லலாம்.'

அலுவலகத்தை விட்டுக் கிளம்பினேன். எனது காரை எடுத்துக் கொண்டு ஏர்வேயில் விரைந்தேன். லேண்டிங் லாட்டில் காரை இறக்கி விட்டு, வீட்டுக்கு சென்றேன். கதவில் எனது கண்ணைக் காட்டித் திறந்த பொழுது, பூர்ணா உள்ளறையில் குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டிருந்தது கேட்டது.

“..னை நாள்டா லீவ்?”

”ஏழு நாள்மா” என்றான் விஷ்வா. ஏழு வயதாகிறது.

“என்னைக்குமா பொங்கல் வரும்?” ஆர்வமாகக் கேட்டாள் வர்ஷா. 4 வயது.

“14ம் தேதி.”

“இன்னும் த்ரீ டேஸ் இருக்கா?”

“வர்ஷா! உனக்குத் தெரியுமா? அப்பா நம்மை, இந்த லீவுக்கு டூர் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கார்.” என்றான் விஷ்வா.

“என்னைக்குமா டூர் போறோம்?”

“தெரியவில்லை. உங்கப்பாதான் சொல்ல வேண்டும். அநேகமாக பொங்கல் கொண்டாடிவிட்டுக் கிளம்புவோம் என்று நினைக்கிறேன்.”

“பொங்கல்ன்னா என்னம்மா? எதுக்கு கொண்டாடனும்?” வர்ஷா.

“அது, ஒரு காலத்தில் ஜனங்கள் எல்லாம் அரிசி, கோதுமை இந்த மாதிரி செடியில வளர்கிற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டார்கள். அதனால் அவற்றைக் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து உற்பத்தி செய்தார்கள். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன், அந்த தானியங்களை அறுவடை செய்வார்கள். அறுவடை செய்தபின் விற்பனைதான். அதன் மூலம் அவர்களுக்குப் பணம் கிடைக்கும். அறுவடைக்கு முன் கஷ்டம். அறுவடைக்குப் பின் அதன் பலன் என்றதால் அறுவடை காலத்தை திருவிழா காலமாக்கினார்கள். அதுதான் பொங்கல். எல்லோரும் அன்றைக்கு வீட்டில் பொங்கல் சமைப்பார்கள். கரும்பு, கிழங்கு போன்ற விளைகின்ற பொருட்களை சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.”

“கரும்பு எப்படிமா இருக்கும்?”

“கருப்பாக, இனிப்பாக இருக்கும் என்று படித்திருக்கிறேன்.”

“இப்ப கரும்பு எங்க கிடைக்கும்?”

“இப்ப எங்கேயும் கிடைக்காதுடி.”

“அப்ப நாம இந்தத் தடவை பொங்கலாவது வீட்டில் சமைப்போமா?”

“அது.. அது.. அம்மாவுக்கு அது எப்படி செய்றதுன்னு தெரியாதேடா.”

“போங்கம்மா. ரெசிபி ஏதாவது டேட்டாபேஸில் இருக்காதா? தேடிப்பாருங்கம்மா. நாம பொங்கள் சமைப்போம்” என்றான் விஷ்வா ஆர்வமாக.

“அதுக்கு அரிசி வேணும்டா. அது கிடைக்காதே. அவள்தான் ஏதோ சின்னப் பெண் கேட்கிறாள் என்றால் நீயும் ஆரம்பிக்காதே.”

இருவருக்கும் எனர்ஜி குறைந்து போன நேரத்தில் நான் உள்ளே நுழைந்தேன்.

“ஹாய் குட்டீஸ்! அப்பா உங்கள் எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன். என்னவென்று தெரியுமா?”

“என்னங்க? டூர் போறதா? எங்கே போகிறோம்?”

“டூர்தான். ஆனால் எதில் போகப் போகிறோம் தெரியுமா?”

“என்ன? ஸப்மெரின் எதிலாவது டிக்கட் எடுத்திருக்கிறீர்களா என்ன?”

“இல்லை. ஷட்டில். ஸ்பேஸ் ஷட்டில். வாங்கிவிட்டேன்!!!”

“வாவ்! நிஜமாவா?!”

“ஆமாம். பொங்கல் அன்றைக்கு டெலிவரி.”

“ஃபர்ஸ்ட் ட்ரிப் எங்கே போகலாம்?”

“அப்பா,அப்பா எங்கேயாவது கூல் கிளைமேட்டா போலாம்பா.”

“ரொம்ப தூரம் போக வேண்டாம். பக்கத்தில் எங்கேயாவது பிளான் பண்ணுங்க.” பூர்ணா.

“ம்ம்.. கூல் கிளைமேட்டா, பக்கத்திலே. ம்ம். ஓகே. பொங்கல் அன்றைக்கு மதியம் கிளம்புகிறோம். நான்கு நாள் டூர். பூர்ணா, அதற்கு ஏற்றார் போல் பாக் செய்து கொள்.”

“ம். சரி. எங்கே போகிறோம்?”

“ப்ளாக் ட்வார்ஃப்” என்று கண்ணை சிமிட்டினேன்.

அவள் சந்தோஷத்தில் என்னைக் கட்டிக் கொண்டாள் , “வாவ்!! சூரியனுக்கா?!”