Tuesday, October 26, 2010

60+இன் புலம்பல்

2010ல்

ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்... ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1985ல்

மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது? பயல்களை கண்டிக்க முடிவதில்லை. ஓரம்போ!!என்று கத்துகிறான். என்னடா என்றால், அருமையான சினிமாப் பாட்டு என்கிறான். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இப்போல்லாம் சினிமாவா எடுக்கிறான்? படம் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுகிறான். ஒரே டைரக்டர் 2 படம் எடுக்கிறான். ஒரு படத்தில் கதாநாயகியை தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் போகும்படி செய்கிறான். இன்னொரு படத்தில், தாலியைக் கழற்றும் தைரியம் உனக்கு இருக்கிறதா? கணவன்தான் முக்கியம்; காதலன் அல்ல, என்று அட்வைஸ் செய்கிறான். ஒரே கூத்து! எங்கள் காலத்தில் இப்படியா? ஒரு பாசமலர் போதுமே. காலகாலத்துக்கு பதில் சொல்லுமே! எவ்வளவு அருமையான சினிமா! எவ்வளவு அருமையான பாட்டு. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1965ல்

முதலாளி எவ்வளவோ நல்லவர். மாதம் 150 சுளையாகத் தருகிறார். இருந்தும் என்ன பிரயோஜனம். மனைவிக்கும் சிக்கனத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்தப் பணம் போதவில்லையாம். அரிசி படி 2 ரூபாய் ஆகிவிட்டதாம். கிலோ 10 பைசா விற்ற காய்கறி எல்லாம் 60 பைசா, 70 பைசாவாக விற்கிறதாம். தங்கம் பவுண் ரூ.100 ஆகிவிட்டதாம். எப்படி கட்டுபடியாகும் என்கிறாள். பிள்ளைகளோ, MGR, சிவாஜி படம் என்று வாரம் தவறாமல் படம் பார்க்கிறார்கள். தலைக்கு 40 பைசா சினிமா செலவு எவ்வளவு ஆகிறது? கேட்டால் இலந்தப் பழம்என்கிறார்கள். சீசன் இல்லாத நேரத்தில் இலந்தப் பழம் ஏது என்று கேட்டால், அப்பா, அது சினிமாப் பாட்டு என்கிறான். எல்லாமே இரவல் பாட்டு. ஒருவன் வாயசைக்கிறான். ஒருவன் பாடுகிறான். கேட்டால் பின்னனிப் பாடல் என்கிறான். இந்தப் பயல் சொல்கிறான் என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். சகிக்கவில்லை. அண்ணன், தங்கை பாசமாம். தங்கைக்கு திருமணம் ஆனபின்னும் கணவன் வீட்டுக்கு அனுப்ப மாட்டானாம். வீட்டோடு மாப்பிள்ளையாம். சரி, அப்படி மாப்பிள்ளை மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒரு கும்பலே வருகிறது. பகை வருகிறது. கதாநாயகன் தங்கையை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினால், தன்னுடைய மானம் போய்விடும் என்று கூப்பாடு போடுகிறான். அவர்களோ, அப்படியானால் நீ வெளியே போ என்று சொல்கிறார்கள். சரி என்று உடனே வெளியே போய் விடுகிறான். இப்போது மட்டும் மானம் போகவில்லையா? கேட்டால் அவன் கதாநாயகன், தியாகி என்கிறார்கள். எங்கள் காலத்திலெல்லாம் இப்படியா? அந்த காலத்தில் கேட்ட பாகவதர் குரல் எவ்வளவு இனிமையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் நாட்டில் பாலும் தேனும் ஓடியது. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1945ல்

ம். என்ன செய்வது? இந்த பஞ்ச காலத்தில் இந்தப் பிள்ளைகள் பிறந்து இருக்கிறது. எங்கள் காலத்தில் 1ரூபாய்க்கு 16படி அரிசி விற்றது. ஆனால் இப்போது வெறும் இரண்டரைப் படி அரிசிதான். மாதத்தில் 10 நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் 25 பைசா மிச்சம் பிடிப்போம். இப்போது மாதம் 10 ரூபாய் கிடைத்தும் கஷ்டம்தான். தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூலி சும்மாவா கிடைக்கிறது; பவுண் 13 ரூபாய் சொல்கிறான். முன்பெல்லாம் 1 அணா கொடுத்து நாலு நாள் விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் பார்ப்போம். சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்து 4 நாள் விடிய விடிய நடக்கும். ராஜா வேடம் போடுபவர், ராஜ நடை போட்டு, வந்தேனேனன மகராஜன் வந்தேனேனன என்று எட்டுக் கட்டையில் பாடுவது எவ்வளவு கம்பீரம்! இப்போது 4 மணி நேரம் மட்டும் வெள்ளை வேட்டியில் நிழல் படம் காட்டி 2 அணா வசூல் செய்து ஊரை ஏமாத்துகிறார்கள். இதுவும் ஏமாறுதுகள்! என்ன கொடுமையப்பா?! ம்.. அந்தக் காலம் ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

2045ல்

TV, கம்ப்யூட்டர், சினிமா புரஜக்டர் எல்லாம் வீட்டில் இருந்தாலும், பிள்ளைகள் தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என அடம்பிக்கிறதுகள். குடும்பத்தோட 1 படம் பார்த்து வர 20000 ரூபாய் செலவாகிறது. ஒரு பாக்கெட் பாப்கார்ன் ரூ.500, ஒரு டீ ரூ.500 என்கிறான். பணத்தோட அருமை பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? சம்பளம் என்ன அள்ளியா கொடுக்கிறான்? பிச்சக்காசு அஞ்சு லட்சம் கொடுக்கிறான். இது எந்த மூலைக்குப் போதும்! அரிசி கிலோ 500, காய்கறி 800, தங்கம் 1 பவுண் ஒன்னரை லட்சமாக விற்கிறது. ஆசைக்கு ஒரு வீடு கட்டலாம் என்றால், ஒரு ப்ளாட் காலி இடம் 2 கோடி ரூபாய் சொல்றான். இது எல்லாம் பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவர்கள். 30 வருடத்துக்கு முன் என் அப்பா காலத்தில் விலைவாசியெல்லாம் கொள்ளை மலிவு. ம்.. அது எல்லாம் ஒரு பொற்காலம் சார்!!!

பின்குறிப்பு 1 :- இந்தக் க(ட்டுரை)தைக்கு ஆதாரம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் தத்துவமேதை சாக்ரடிஸ் சொன்ன வார்த்தைகள்தான்.

இந்தக் காலத்துப் பிள்ளைகள் பொறுப்பில்லாதவர்கள்; பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள்.

பிகு 2 :- 2045ம் ஆண்டு தவிர, மற்ற வருட விலைவாசிகள் முழு உண்மை. கற்பனை அல்ல.

பிகு 2a :- அது சரி. 2045ம் ஆண்டு விலைவாசி மட்டும் கற்பனை என்று யார் சொன்னது?

- எழுதியவர் G.ராமசாமி

(நவீன விருட்சம் 87-88 இதழில் பிரசுரமான படைப்பு)

Tuesday, October 19, 2010

நிரூபணம்

”நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?”

“ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்….”, வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை.

“நிஜமாவே நம்பமுடியலை. நாங்க இங்க என்ன செய்துகிட்டிருக்கோம்னு உங்களுக்குத் தெரியுமா?"

“தெரியும். பிளாக் ஹோலுக்கு ஒரு கலத்தை அனுப்பப் போறீங்க.”

”இது ஒரு டைம் மிஷின் ப்ராஜக்ட். அது தெரியுமா?”

எனக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது. ’இது கூடவாத் தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்? என்னை என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?’, பின்னால் நகர்ந்து நன்றாக சாய்ந்து கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டேன்.

“தெரியும். ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தியரியை செயல் படுத்தப் போறீங்க. ஆண்ட்ரோமீடா காலக்ஸியைத் தாண்டி இருக்கும், சமீபத்துல கண்டுபிடிச்ச பிளாக் ஹோலுக்கு ஒரு ஷிப்பை அனுப்பப் போறீங்க. அந்த ஷிப் பிளாக் ஹோலை நெருங்கி, அதற்குள் விழுந்து விடாமல், ஈவண்ட் ஹாரிஸனுக்கு முன்பே அந்த பிளாக் ஹோலை சுத்தி ஒரு வட்டப்பாதையின் டான்ஜண்டில் நுழையும். இது நமக்கு ஒரு ஃப்ரீ ரிட்டன் டிராஜக்டரியை அமைச்சிக் கொடுக்கும். ப்ளாக் ஹோல் தன்னோட அபரிமிதமான ஈர்ப்பு விசையால், நம்ம கலத்தை ஒரு அரை வட்டம் சுத்த வைச்சு, பூமியை நோக்கி திருப்பி விட்றும். ஆனா அந்த வேகம் ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம கலம் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தை அடைஞ்சுடும்.. இது வரைக்கும் சரியா?”

”சொல்லுங்க. நிறைய தப்பிருந்தாலும், மெய்ன் தியரி என்னவோ சரிதான்.”
“சரி. இப்ப இந்த வேகம்தான் காலப்பயணத்தை சாத்தியமாக்குது. இந்த வேகத்தில் பூமிக்குத் திரும்பி வரும்போது, ஐன்ஸ்டீன் தியரிப்படி, கலத்துக்கு உள்ளே ’நேரம்’ மெதுவா ஓடும். ஆனா கலத்துக்கு வெளியே நேரம் நார்மலான வேகத்தில் ஓடும். அதனால நம்மக் கலம் இந்த வேகத்தில் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணிட்டு திரும்பி வருதுன்னு வச்சுக்குவோம். இப்ப கலத்தோட நேரத்தவிட, பூமியோட நேரம் வேகமா இருக்கும். அதனால் கலம் வந்து சேரும் பொழுது பூமியில் பல வருடங்கள் முடிஞ்சிருக்கும். ஆனா கலம் பிரயாணம் பண்ணினதென்னவோ ஒரு வருஷம் தான். அதனால அந்தக் கலம் தரையிறங்கும்போது, பூமில பல வருஷம் முடிஞ்சு எதிர்காலத்துல எறங்குது. போதுமா?”
“சரிதான். இதுல முக்கியமான சில விஷயங்கள் இருக்கு. முதலாவதா, இது ஒரு ஒன்வே டைம் ட்ராவல் ட்ரிப். நீங்க திரும்ப நிகழ்காலத்துக்கு வரவே முடியாது. எதிர்காலத்திலேயே தங்கிட வேண்டியிருக்கும்.”

“தெரியும். எனக்கு இப்ப அம்பத்தி மூனு வயசாவுது. கல்யாணம் பண்ணிக்கலை. சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லை. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல செட்டிலாவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.”

“ரெண்டாவதா. ப்ளாக் ஹோல். இதுதான் ரியல் டேஞ்சர். நாங்க துல்லியமாத்தான் கால்குலேஷன்ஸ் எல்லாம் போட்டிருக்கோம். ஆனால் அந்த கால்குலேஷன்ஸ் கொஞ்சம் தப்பானாலும், 0.000000000001 சதவீதம் தப்பானாக்கூட, நீங்க பிளாக் ஹோலுக்குள்ள விழுந்துடுவீங்க.”

“இந்த ரிஸ்க் எடுக்கிறேன். எனக்கு நம்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேல நம்பிக்கையிருக்கு. அவங்கள நம்பி இதுவரைக்கும் மூனு தடவை விண்வெளிப் பிரயாணம் செஞ்சிருக்கேன். ஒரு உயிர் விஷயம்னு வரும்போது, அவங்க தப்பு பண்ண மாட்டாங்க.”

“தாங்க்ஸ். நீங்க எங்கேல்லாம் இதுவரைக்கும் ஸ்பேஸ் டிராவல் பண்ணீருக்கீங்க?
“ரெண்டு தடவை மார்ஸுக்கு. ஒரு தடவை டைட்டனுக்கு. அதுக்கப்புறம் ரிட்டைர்மெண்ட் வாங்கிட்டேன். அதுக்கப்புறம், இந்த தடவை ஃபூயூச்சருக்குப் போறேன்.” என்று சிரித்தேன்.

“குட். மூனாவது விஷயம் உங்க உடல்நிலை. இப்ப உங்களுக்கு வயசு அம்பத்தி மூனு. எங்க கணக்குப் படி இந்தப் பயணம் போய்த் திரும்ப பதினோரு வருஷம் ஆகும். அதாவது உங்க ஆரோக்கியம் அறுபத்தி நாலு வயசு வரைக்கும் விண்வெளிப் பிரயாணத்தை தாங்கக் கூடியதா இருக்கணும்.”

“சரி, டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு என்ன சந்தேகம்னா, என்னோட உடம்பு ப்ளாக் ஹோலை நெருங்கும்போது, அவ்வளவு ஈர்ப்பை தாங்குமாங்கறதுதான் டவுட்டா இருக்கு.”

“அது பிரச்சனையேயில்லை. பிளாக் ஹோலில் மாட்டிக் கொண்டால்தான் பிரச்சனை. அதில் மாட்டிக் கொள்ளாதவரை, உங்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விண்வெளிப் பிரயாணமாகத்தான் இருக்கும். நீங்க ஏதோ கேக்கனும் சொன்னீங்களே, என்னதது?”

“இப்பவாவது கேட்டீங்களே. எனக்கு நீங்க ஒரே ஒரு விஷயத்தை மட்டும் க்ளியர் பண்ணனும். இப்ப நான் ஃப்யூச்சர்ல போய் இறங்குவேன் இல்லையா? சரியா எந்த வருஷம் போய் இறங்குவேன்?”

“இது 2074. நீங்க திரும்பி வர்ரதுக்கு 99 வருஷம் ஆகும். அதாவது 2173ல் போய் இறங்குவீங்க.”

“சரி. இப்ப இந்த விஷயத்தை கவனிங்க. ஒருத்தன் எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு வர்ரான்னு வச்சுக்குங்க. ’அவன் எதிர்காலத்தில் இருந்து வந்தவன்’ அப்படிங்கறத, அவனால அந்த இறந்த காலத்தில் இருக்கிறவங்களுக்கு ஈஸியா நிரூபிச்சிற முடியும். ஏன்னா அவன் கிட்ட எதிர்காலத்துக்கு மட்டுமே சொந்தமான அதிநவீன கருவிகள், வஸ்துக்கள் இருக்கும்.

ஆனா நம்ம கேஸ்ல இது சாத்தியம் இல்லை. நான் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்குப் போறேன். அங்கேயுள்ளவங்களுக்கு, நான் இறந்த காலத்திலிருந்து காலப்பயணம் செஞ்சு 99 வருஷங்கள் கடந்து எதிர்காலத்துக்கு வந்திருக்கேன்னு ப்ரூவ் பண்ணியாகனும். நான் சொல்றதை அவங்க நம்பலைன்னா அங்கே என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. என்னை ஒரு ஃபிராடுன்னு சொல்லி கைது பண்ணிறலாம். இல்லை பைத்தியம்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் கட்டி வச்சிரலாம். அந்த மாதிரி வாழ எனக்கு ஆசையில்லை. அவங்களுக்கு நான் இறந்த காலத்திலிருந்து வந்திருக்கேன்னு எப்படி ப்ரூவ் பண்றதுங்கறதுக்கு மட்டும் வழி சொல்லுங்க. நான் இந்த பிரயாணத்துக்கு ஒத்துக்கறேன்.” கடைசியில் ஒரு வழியாக என் பயத்தை சொல்லிவிட்டேன்.

”ம்ம். நீங்க சொல்றதும் ஒரு வேலிட்டான பாயிண்ட்தான். இதப் பத்தி நம்ம விஞ்ஞானிகள் குழு ஆளுங்ககிட்ட கருத்துக் கேட்போம். இப்போதைக்கு எனக்கு எதுவும் தோனலைன்னாலும், வி மஸ்ட் கெட் அன் ஆன்ஸர் டூ திஸ். நிச்சயம் ஏதாவது விடை இருக்கும். பார்ப்போம். நான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணறேன். எப்படியும் ரெண்டு நாள் ஆய்டும். அதுக்குள்ள நீங்க மெடிக்கல் செக்கப்பெல்லாம் முடிச்சுருங்க. மீட்டிங் கன்ஃபார்ம் ஆனதும் நான் சொல்றேன்.”

“சரி”

X-X-X-X-X-X-X-X-X

அந்த அறை பெரிதாக ஓவல் வடிவத்தில் இருந்தது. அங்கே நானும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் தலைவர், டாக்டர் சிவநேசனும் மட்டுமே பெரிய முட்டை வடிவ மேஜையின் ஒரு முனையில் உட்கார்ந்திருந்தோம். சிவநேசன் கம்ப்யூட்டரில் குரல் ஆணை கொடுத்ததும், அங்கே ஒவ்வொருவராக ஹோலோகிராஃப் பிம்பங்களாக நாற்காலிகளோடு தோன்ற ஆரம்பித்தனர். அவர்களில் நிறைய பேரை எனக்கு யாரென்றே தெரியவில்லை.

“வெல் ஜெண்டில்மேன் அன் லேடீஸ். ராஜீவ் கேட்ட கேள்வியப் பத்தி உங்க எல்லாருக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஒரு காலப்பயணி வருங்காலத்துக்குப் பிரயாணம் செஞ்சா, அங்கே இருக்கறவங்களுக்கு அவர் எப்படித், தான் இறந்த காலத்தில் இருந்து காலப் பயணம் செய்து வந்தவர் என்பதை நிரூபிப்பது? உங்க யார்ட்டயாவது இதுக்கு பதில் இருக்கா?”

“ஒரு டைம் கேப்ஸ்யூல் அனுப்பலாமே?”

“வாட்?” என்றேன்.

“இந்த மாதிரி, இன்ன தேதியில், இன்ன இடத்தில் இருந்து நீங்க காலப்பயணம் கிளம்பியிருப்பதாக ஒரு டாக்குமெண்ட் தயாரித்து, அதை ஒரு பத்திரமான பெட்டியில் வைத்துப் பூட்டணும். அந்தப் பெட்டி அதிக காலம் மக்காத, துருப்பிடிக்காத, உறுதியான பொருளால செய்யப்பட்டிருக்கணும். அதைக் குறிப்பிட்ட இடத்துல நிலத்தில் ஆழமா புதைச்சு வச்சுருவோம். அந்தப் பெட்டியோட சாவிய நீங்க வச்சுக்கனும். நீங்க திரும்பி வந்து, எதிர் காலத்தில் இருக்கறவங்ககிட்ட, அந்தப் பெட்டியைத் தோண்டியெடுக்க சொல்லுங்க. இந்தப் பழைய டாக்குமெண்ட் அவங்ககிட்ட நீங்க இறந்த காலத்தில் இருந்து வந்தவர்ங்கறதை நிரூபிக்கும்.”

“ஆனா, அவங்ககிட்ட அப்படி ஒரு டைம் கேப்ஸ்யூல் பெட்டி இருக்கிறதை நான் தான் சொல்லனும். அதோட சாவியும் எங்கிட்டேயே இருக்குதுன்னா, நானே திடீர் புகழுக்கு ஆசைப்பட்டு அவங்க காலத்திலேயே ஒரு பெட்டியை புதைச்சு வச்சிருக்கலாம்னு அவங்க வாதாடலாமில்லையா?”

“பொருளோட வயசுன்னு ஒன்னு இருக்கே! ரேடியோ ஐஸோடோப் கார்பன் 14 முறை மூலமா அந்தக் கேப்ஸ்யூலோட வயதை கணிக்கச் சொல்லுங்க. அது போதுமே”

”இப்ப ஒருத்தனுக்கு இந்த மாதிரிப் புதைச்சு வச்ச பழைய பெட்டி ஒன்னு, புதையல் மாதிரி எதிர்பாராதவிதமா கிடைக்குதுன்னு வச்சுக்குங்க. அதோட பூட்டைத் திறந்து மூடவும் அவன் கத்துக்கிட்டான்னு வையுங்க. அவன் உங்ககிட்ட வந்து நான் இந்த மாதிரி பழைய சோழர்கள் காலத்திலேர்ந்து வந்திருக்கேன். பாருங்க ஆதாரம்னு அந்தப் பெட்டியக் காட்டினா, நீங்க நம்பிருவீங்களா.”

”ஆனா இதுக்கான லாக் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டது. அதுக்கான பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்?”

“சாவிக்கும் பாஸ்வேர்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திறந்து கிடந்த ஒரு பழைய பெட்டிக்கு நான் புது பாஸ்வேர்ட் செட் செய்து ஏமாற்றி இருக்க முடியாதா?"

இப்பொழுது குரலின் திசை மாறியது. பெண் குரல், “இப்ப என்ன பிரச்சினை? டைம் கேப்ஸ்யூல் இருப்பதை நீங்க சொன்னாதானே நம்ப மாட்டாங்க? கவர்மெண்டே சொன்னால்?”

“கவர்மெண்டே சொல்வதற்கு இன்னொரு டைம் கேப்ஸ்யூல் வைப்பீங்களா?” என்றேன்.

“இல்லை. ரொம்ப சிம்பிள். நீங்கள் காலப்பயணம் சென்ற செய்தியை, அதிகாரப் பூர்வ அரசாங்க ஆவணங்களா சேமிப்போம். அந்த ஆவணங்கள் அரசாங்கங்கள் மாறினா கூட பத்திரமாக அடுத்த தலைமுறைக்கும் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்க திரும்பி வந்ததும், அரசாங்க ரெக்கார்டுங்களை தேடிப் பார்க்க சொன்னாலே போதுமே?”

“அரசாங்கங்கள் மாறினால் கவலை இல்லை. அரசியல் அமைப்பே மாறிப்போச்சுன்னா?”

“என்ன சொல்றீங்க?” என்று சிவநேசன் கொஞ்சம் பதட்டமாகிவிட்டார்.

“ஒருப்பேச்சுக்கு சொல்றேன். இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சிமுறை, திடீர்னு ராணுவ ஆட்சியாவோ, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியாவோ மாறிடுச்சுன்னு வைங்க. இல்லை ஏதாவது உலகப்போர் வந்து வேற ஒரு நாடு, நம்ம நாட்டோட ஆட்சியை கைப்பற்றிடலாம். அப்படியாச்சுன்னா இந்த கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அவங்க பத்திரமா வச்சிருப்பாங்களா? ஒருவேளை ஏதாவது காரணத்துக்குக்காக அவங்களே கூட கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அழிச்சிடலாம். அப்ப என் கதி?”

“இது அதீத கற்பனை இல்லையா? நடக்காத்தை எல்லாம் ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க?”

“இல்லை. நான் தோல்வி அடையறதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தவிர்க்க விரும்பறேன்.”

”ஒரு ஐடியா” இப்பொழுது குரல் கொடுத்த விஞ்ஞானிக்கு முப்பது வயதுக்கு மேலிருக்காது என்று நினைத்தேன்.

”உங்களுக்கு ஒரு ஐடிக் கார்ட் கொடுத்து விடுகிறோம்.”

“அதை கொண்டு போய் அங்கே காட்டினால் நம்புவார்கள் என்கிறீர்களா?”

“இது சாதாரண ஐடிக் கார்ட் இல்லை. இப்போதைய நமது ஐடிக் கார்ட்கள் எப்படி இருக்கு? கார்டை அதற்கான ரீடரில் காட்டினால், நம்மோட ஒரு சின்ன ஹோலோகிராஃபிக் பிம்பம், ரீடரிலிருந்து உருவாகி, நம்மை அடையாளம் சொல்லுது. ஆனால் உங்களுக்கு தரப்படும் விஷேச கார்டை நீங்கள் ரீடரில் காட்டத்தேவையில்லை. உங்க கருவிழிக்கு பக்கத்துல அஞ்சு செண்டிமீட்டர் இடைவெளிக்குள்ள காட்டினால், உங்களோட ஹோலோ கிராஃபிக் பிம்பம் ஆட்டோ மேட்டிக்காய் உங்க கார்டிலிருந்தே உருவாகும். அதோடு உங்க பிறந்த தேதி, இந்தப் பயணம் புறப்பட்ட விவரங்கள், மாதிரியான விஷயங்களும் அதில் தெரியும்படியா நாம் அந்தக் கார்டை உருவாக்குவோம். அந்த மாதிரி ஐடிக் கார்டை நீங்கள் காட்டினா அவங்க நம்பமாட்டாங்களா?”

”நம்மாள இப்பவே இந்த மாதிரி ஒரு கார்டை உருவாக்க முடியும்னா, எதிர்காலத்துல இது சர்வ சாதாரணம் ஆயிடாதா? அப்ப கொண்டு போய் இந்தக் கார்டை காட்டினா சிரிக்க மாட்டாங்களா?” ரொம்பவும் காட்டமாக சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அந்த விஞ்ஞானியின் முகம் சிறுத்து விட்டது.

“ஓகே. இப்படிப் பண்ணலாம். இப்ப நம்ம காலத்தில பிரபலமா இருக்கிற சில பேரோட நீங்க சேர்ந்து இருக்கிற மாதிரி ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் எடுத்து, அதை, முதல்ல சொன்ன டைம் காப்ஸ்யூலில் வச்சிடலாம். இது நீங்களும் அந்த பிரபலங்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர்தான்னு ப்ரூவ் பண்ணுமே.”

“நல்ல ஐடியாதான். ஆனால் எல்லாமே டிஜிட்டலாகி விட்ட இந்த யுகத்தில் எந்த மாதிரியான பிம்பத்தையும் கம்ப்யூட்டர் மூலமா உருவாக்க முடியுமே! இது எதிர் காலத்துக்கும் பொருந்துமே!”

“நான் ஒரு ஐடியா சொல்றேன். சரியா வருமா பாருங்க. நம்மகிட்ட இப்ப இருக்கிற பாலிகிராஃப் லை டிடக்டர் அறுபது சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தது. எதிர்காலத்தில் இந்த பொய் சொன்னால் கண்டுபிடிக்கிற கருவி, நிச்சயம் இன்னும் ஃபைன் ட்யூன் செய்யப்பட்டிருக்கும். அது இல்லாட்டி கூட ட்ரூத் ஸீரம் இருக்குது, ஸோடியம் தையோபெண்டால், மரிஜுவானா இந்த மாதிரி. இதில் அந்த நேரத்தில் அவங்க எந்த ட்ரூத் டெஸ்டை ஒத்துக்குவாங்களோ, அந்த டெஸ்டை உங்க கிட்ட செய்யச் சொல்லுங்க. அதில் நீங்க பொய் சொல்லலைன்னு ப்ரூவ் ஆயிருமே!”

“ம்ம். சரியானத் தியரிதான். ஆனால் நீங்க சொல்ற ட்ரூத் ஸீரம் டெஸ்ட் இப்பல்லாம் எண்பது எண்பத்தைந்து சதவீதம்தான் எதிர்பார்த்த முறையில் வேலை செய்யுது. அதனால இதையெல்லாம் நாமே விஞ்ஞான பூர்வமா ஒத்துக்கறதில்ல. இதே நிலைமை நீடிச்சுதுன்னு வைங்க. எதிர்காலத்தில் இருக்கிறவங்க கிட்டேயும் பொய்யை கண்டுபிடிக்க உருப்படியான சாதனம் இருக்காது. அந்த நிலைமைல இந்த யோசனை அடிவாங்கிருது.”, நான் எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டே வருவது அவர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை கிளப்பியிருப்பதை உணர்ந்தேன்.

“கரன்சி நோட் முறை?”

“அப்படின்னா?”

“ஒவ்வொரு நாட்டோட கரன்சி நோட்டும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப் படுது. இது அத்தனையிலும் ஒரு சாம்பிள் நீங்க போகும்போது எடுத்துட்டுப் போங்க. கவுண்டர் ஃபீட் கரன்சியை நாமளே ஈஸியா கண்டுபிடிச்சுடுவோம். அப்படியிருக்கும் போது எதிர் காலத்தில இருக்கிறவங்க நீங்க கொண்டு போற நோட்டெல்லாம் கவுண்டர் ஃபீட் நோட் கிடையாதுன்னு உறுதிப்படுத்திட்டா, நீங்க இறந்த காலத்திலிருந்து வந்திருக்கிறது நிஜம்னு ஆயிரும்.”

“ஒரு கரன்சி கலெக்ஷன் செய்பவரிடம் கூட எல்லா நாட்டினுடைய பழைய நூற்றாண்டு நோட்டுக்கள் இருக்குமே?”

”ஆனா, நீங்க வச்சிருக்கிற கரன்சி நோட்டோட வயது! அதை கார்பன் 14 ஐஸோடோப் டெஸ்ட் பண்ணினா, அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள் அச்சடிக்கப்பட்ட நோட் என்பது தெளிவாயிருமே.”

“ம்ம். இது கொஞ்சம் வொர்க் அவுட் ஆகும் போல் தான் தெரிகிறது. ஆனா உங்க வாதப்படியே அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள்ள அச்சடிக்கப்பட்டதுன்னா, அதனாலேயே, அதை அவங்க கவுண்டர் ஃபீட்னு நினைக்கலாமே?”

இப்பொழுது சிவநேசன் பேசினார், “மிஸ்டர் ராஜீவ். நீங்க இந்தப் பயணத்த தவிர்க்கிறதுக்காக, பேசற மாதிரித் தெரியுது. இதுல ஏதாவது ஒரு முறைல நிச்சயமா, அவங்க நீங்க சொல்றதை ஒத்துக்குவாங்க. ஆனா, இப்ப நீங்க நிஜமாவே இந்த பிரயாணம் மேற்கொள்ள விரும்பறீங்களா? இல்லையா?”

“நிச்சயமா. நிச்சயமா நான் போறேன். ஆனா அதே நேரத்தில் என் பத்திரத்தைப் பத்தியும் நான் கவலைப்படுறது தப்பில்லையே.”

”ஓகே இப்படி செய்யலாம். ஏதாவது ஒரு யோசனைங்கிறத மாத்தி, இந்த எல்லா யோசனைகளையும் செயல்படுத்தலாம். அரசாங்க ரெக்கார்ட்ஸ் மெய்ண்டைன் பண்ணுவோம். அதோட ஒரு காப்பியையும் டைம் கேப்ஸ்யூலில் வைப்போம். பிரபலமான தலைவர்கள், சினிமா ஸ்டார்ஸ் இவங்களோட நீங்க இருக்கிற ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் தயார் பண்ணி, க்ரிஸ்டல் டிஸ்கில் சேமித்து, அதில் ஒரு காப்பியை நீங்களும், இன்னொரு காப்பியை டைம் கேப்ஸ்யூலிலும் வைப்போம். ஹோலோ பிம்பத்தை ஆட்டோமேட்டிக்காக உருவாக்கும் ஸ்பெஷலான ஒரு ஐடிக் கார்டை உருவாக்கித் தர்றோம். அதையும் எடுத்துட்டுப் போங்க. எதிர்காலத்தில் அவங்க ட்ரூத் ஸீரம், பாலிகிராஃபி மாதிரி எந்த டெஸ்ட் எடுக்க சொன்னாலும், மறுக்காம ஒத்துக்குங்க. அதே மாதிரி எல்லா நாட்டு கரன்சியும் ஒரு சாம்பிள் எடுத்துட்டுப் போங்க. கார்பன் டேட்டிங், அது இல்லைன்னா அந்த நேரத்தில் அதை விட சிறப்பான முறை ஏதாவது இருந்தா, டைம் கேஸ்யூலோட வயதையும், கரன்சிகளோட வயதையும் கணிக்க சொல்லுங்க. பூமிக்குத் திரும்பும் போது இந்தியப் பெருங்கடல்ல இறங்குங்க. அதுதான் வசதி, எங்க கரையொதுங்குவீங்கன்னு இப்பவே சொல்ல முடியாது. அதனால, இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கிற கடலோரப் பகுதிகள் எல்லாத்திலேயும், பகுதிக்கு ஒன்னா ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைச்சு வச்சுருவோம். எந்தெந்த இடத்தில் எல்லாம் டைம் கேப்ஸ்யூல் புதைக்கப் பட்டிருக்குங்கறதுக்கான மேப்பும் நீங்க வச்சுக்குங்க. பல சாட்சிகள் இருக்கிறதால அவங்க கண்டிப்பா நம்புவாங்க. இந்த யோசனை ஓகேவா மிஸ்டர் ராஜீவ்?” சிவநேசன் முடித்தார்.

“ஓகே” என்றேன்.

X-X-X-X-X-X-X-X-X

பிரபலங்கள் பலருடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு, புகைப்படம், வீடீயோ, ஹோலோகிராம் என்று டிஜிட்டல் உருவாமாக்கி, கிரிஸ்டல் டிஸ்குகளில் அடைத்தார்கள். அத்தனை டைம் கேப்ஸ்யூல் பெட்டிகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒரு பாஸ்வர்ட் செட் செய்யச் சொன்னார்கள். மொத்தம் நூற்றி எண்பத்தாறு பெட்டிகள். ஒரு முறை மூடிவிட்டால், பாஸ்வேர்ட் இல்லாமல் மீண்டும் திறக்க முடியாத பெட்டிகள். கரன்சிகள் கொடுத்தார்கள், இருபது வருடத்துக்குப் போதுமான உணவு மாத்திரைகள் கொடுத்தார்கள். கை குலுக்கினார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். விலகிக் கொண்டார்கள். கலம் மூடப்பட்டு மிக மிக மெதுவான ஆரம்ப வேகத்திலேயே கிளம்பியது. பூமியை ஒரு முறை சுற்றியது. ஒரு புள்ளியில் பிளாக் ஹோல், ஐந்து வருடங்கள் கழித்து எங்கே இருக்குமோ, அதை நோக்கி கலம் சீறிப்பாய்ந்தது. பூமியிலிருந்து ஒரு வருடம் வரை ரேடியோவில் தொடர்ந்தார்கள். அப்புறம் ….. விட்டு விட்டார்கள்.

X-X-X-X-X-X-X-X-X

பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நம்பவே முடியவில்லை. ப்ளாக் ஹோலைத் தாண்டி சுற்றிக் கொண்டு திரும்பி வருவேன் என்று பூமியில் யாராவது நம்பிக்கை வைத்திருப்பார்களா? பூமியில் இது எந்த வருஷமாயிருக்கும்? நிஜமாகவே 2173ஆ?

“ஹலோ ரோஜர்! ரோஜர்! சாக்ராஸ் கலத்திலிருந்து பேசுகிறேன். ரோஜர்! ரோஜர்!” ம்ஹூம் இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. ஃப்ரீக்குவென்சிகள் மாற்றிப் பார்த்தேன். “ரோஜர்! ரோஜர்! திஸ் இஸ் சாக்ராஸ்! ரோஜர்”” “………” மௌனம்தான். ஒரு வேளை எதிர்காலத்தில் கம்யூனிக்கேஷன் முறைகளையே மாற்றியிருப்பார்களோ?! இதற்குள் எனது கலம் பூமியில் இறங்குவதற்கு அதைச் சுற்ற ஆரம்பித்திருந்தது. அவர்களுக்கு சிக்னல் கிடைத்து கடலில் இருந்து என்னை மீட்க வந்தால் நல்லது. இல்லையென்றாலும், பதினோரு வருடங்களாக என் வீடாக இருந்த இந்த சாக்ராஸ் கலம், கடலையும் கடந்து விடும் என்றாலும், கொஞ்சம் நேரமாகும்.

“ரோஜர்! நான் பிளாக் ஹோலை சுற்றி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.” கலம் காற்று மண்டலத்தில் நுழைந்து விட்டது. ”இந்தியப் பெருங்கடலில் இறங்கப் போகிறேன்.”. கடல் தெரிய ஆரம்பித்து விட்டது. “என்னையும் கலத்தையும் கடலிலிருந்து மீட்க உதவி..” கலம் கருநீலக் கடலுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. மறுபடி மறுபடித் தொடர்புக்கு முயன்று பார்த்தேன். ம்ஹூம். பதில் கிடைக்கவில்லை. வேறு வழியில்லை நேரமாகிக் கொண்டிருக்கிறது. கலத்தின் படகு அமைப்பை மட்டும் விடுவித்தேன். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். காம்பஸ் உதவியுடன் வடக்கை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தேன்.

கரை வந்தது, நான்கு மணி நேரத்திற்குப் பின். கடற்கரை அமைதியாக இருந்தது. ஆளில்லாத தீவு ஏதாவதில் கரையொதுங்கி விட்டோமா? இல்லை அதோ ஒரு கோயில். அந்தக் கோயில். ஆம் அதை நான் இதற்கு முன் பார்த்திருக்கிறேன். எங்கே? ஞாபகம் வந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைப்பதற்காக வந்தோம். நன்றாக ஞாபகம் இருக்கிறது. இது எந்த ஊர்? ஆனால் புதைக்க வந்தபொழுது கடல் இந்தக் கோயிலுக்கு இவ்வளவு பக்கத்தில் இல்லையே. குறைந்தது ஐந்து கிலோமீட்டராவது தூரம் இருந்திருக்குமே!

அப்பொழுது என் காலை வாரி விடப்பார்த்த அந்தப் பொருளை எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. டைம் கேப்ஸ்யூல். ஆனால் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த இது எப்படி இவ்வளவு மேலே வந்தது?

’ஆ15கஸ்1947ட்’ என்ற பாஸ்வேர்டை அமைத்து அந்த டைம் கேப்ஸ்யூலின் உள்ளிருந்தவற்றுக்கு சுதந்திரம் கொடுத்தேன். உள்ளே சகல விதமான ஆவணங்களும் பத்திரமாக இருந்தன. இது…, இது என்ன.. புதிதாய்? இது வரை நான் பார்க்காத அரசாங்கக் காகிதம்? அதில் இவ்வாறு எழுதியிருந்தது.

15, ஆகஸ்ட் 2097

ஹலோ ராஜீவ். நலமாகத் திரும்பி வந்து விட்டீர்களா? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன். அதனால் இந்த எக்ஸ்ட்ரா கடிதம். விஷயம் இதுதான். இன்னும் பதினைந்து நாளில் (செப்டம்பர் 1க்குள் எதிர்பார்க்கிறேன்) இந்த உலகம் அழிந்து விடும். ஏன்? எதற்கு? எப்படியென்றெல்லாம் இந்தச் சிறிய கடிதத்தில் விளக்க முடியாது. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் கலம் நல்ல நிலையில் இருந்தால், இந்தப் பெட்டியில் இருக்கும் கிரிஸ்டல் டிஸ்க்கை கலத்தில் உள்ள கம்ப்யூட்டரில் கொடுத்துப் பார்க்கவும். அப்புறம் இன்னொரு விஷயம். நீங்கள் இறந்த காலத்திலிருந்து வந்தவர் என்பதை யாருக்கும் நிரூபிக்கத் தேவையிருக்காது என்று நம்புகிறேன்.
- சிவநேசன்”
பெயருக்குக் கீழே ஒரு சிரிக்கும் முகத்தை வரைந்து முடித்திருந்தார்.


X---------------------------------------------X






-2010 செப்டம்பர் மாத தென்றல் இதழில் “இறந்த காலத்திலிருந்து வந்தவர்” என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை.

Thursday, May 13, 2010

கவிதை உறவு போட்டியில் பரிசு

நண்பர்களே,

கவிதை உறவு இலக்கிய இதழ் நடத்திய போட்டியில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பிரிவில், எனது புத்தகம் ”௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” மூன்றாவது பரிசு வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

போட்டியில் வென்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Monday, May 10, 2010

ஒரே ஒரு ஆதாம்

“எனக்கு ப்ரவீனை பிடிக்கலைப்பா”

பூர்ணா அப்படி சொன்னதும் மிகவும் அதிர்ந்து போனேன்.

“என்னம்மா சொல்றே?”

“ஆமாம். சின்ன வயசில் இருந்து அவன் என் ஃபிரெண்டு தான். அதுக்காக கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது.”

”வேற வழியில்லையேம்மா! நீ அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்.”

ஆமாம். அவனைத் தவிர வேறு வழியில்லை. பூமியிலிருந்து கிளம்பி முப்பது வருடப் பிரயாணம் முடிந்து விட்டது. இந்தத் தலைமுறைக் கப்பலின் மூதாதையர்களாக நானும் என் மனைவி வர்ஷிதாவும், ராஜீவும், அவன் மனைவி சிமியும் நியமிக்கப்பட்டிருக்கிறோம். இதுவரைக்கும் எங்கள் கடமைகளை சரியாக 80 சதவீதம் முடித்து விட்டோம். அடுத்த தலைமுறை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தும் ஆகி விட்டது. எனக்கு ஒரு பெண், ஒரு பையன். ராஜீவிற்கு ஒரு பையன், ஒரு பெண். கலத்தின் கணிணியால் திட்டமிடப்பட்டு பெறப்பட்ட குழந்தைகள்.

என்னுடைய பெண் பூர்ணா. ராஜிவின் பையன் ப்ரவீன். என்னுடைய பையனும், ராஜிவின் பெண்ணும் இன்னும் இணை சேரும் வயதுக்கு வரவில்லை. இவர்கள்தான் அடுத்த தலைமுறை பெற்றோர்கள். அவர்களின் சந்ததியும் கணிணியில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியே 17 தலைமுறைகளை இந்த பெரிய கலத்துக்குள்ளேயே கடத்தியாக வேண்டும்.

476 வருடப் பிரயாணகாலத்துக்குப் பின், சூரிய மண்டலத்து அண்டை நட்சத்திரங்களில் ஒன்றான ”டாவ் சேடி” நட்சத்தித்திரத்தை சுற்றி வரும் பூமியை ஒத்த கோளான “சேடஸ்”இல் தரையிறங்கி, அந்தக் கிரகத்தில் மெதுவாக உயிர்களைப் பரவச் செய்வதே எங்களுக்கு விதிக்கப்பட்ட மிஷன். இப்பொழுது முதல் தலைமுறையிலேயே இப்படி ஒரு பிரச்சனை.

“நிச்சயமா முடியாது.”

“ஏன்? ப்ரவீன் அழகாதானே இருக்கான். இந்தக் கலத்தின் செயல்பாடு முழுக்க அவனுக்கு அத்துபடி. கேலக்ஸிகளின் மேப்களை கரைத்துக் குடித்திருக்கிறான். அவன் அப்பா மாதிரி ஜெனிடிக் விஞ்ஞானத்திலும் கெட்டிக்காரனாய் இருக்கிறான். ஏன் உனக்கு அவனைப் பிடிக்கலை?”

பூர்ணா என்னை அடிபட்டாற்போல் பார்த்தாள்.

“அப்பா. அழகுங்கறதுக்கு டெஃபினஷன் ஒருத்தருக்கொருத்தர் மாறுபடுது. இங்கே, நம்மோட கலத்திலிருக்கும் எல்லாரும் வெள்ளையா இருக்கோம். எல்லாருக்கும் வெள்ளைத் தோல். நான் டிஜிட்டல் லைப்ரரியில்தான் கருப்புத் தோல் மனிதர்களைப் பார்த்தேன். தே வேர் ஸோ அமேஸிங்! உங்களுக்குத் தலையில் அதிகம் முடி வச்சிக்கிறது அழகாத் தெரியலாம். எனக்கு லைப்ரரி படங்கள்ல பார்த்த மொட்டைத் தலைகள்தான் கவர்ச்சிகரமாகத் தெரியுது. யெஸ் டாடி. நான் காதலித்து குழந்தை பெத்துக்கறதுன்னா ஒரு நீக்ரோ ஆணைத்தான் விரும்புவேன். ப்ரவீனோடு முடியவே முடியாது.”

”ஸோ. இப்போ அழகுதான் பிரச்சனையா? ஆனாலும் காலம் பூரா வாழ்றதுக்கு மனசு முக்கியமில்லையா? யாரோ முன்னப்பின்னத் தெரியாத கற்பனையான ஒரு நீக்ரோவ ஒத்துக்கறே. இவ்வளவு நாளாப் பழகின ப்ரவீன் நல்லவனாத் தெரியலையா?”

“அப்பா! இந்த 90000 கனசதுர அடி கலத்துக்குள்ளே நல்லவன் என்ன? கெட்டவன் என்ன? ப்ரவீன் திறமைசாலின்னு வேணா ஒத்துக்கலாம். ஆனா, இதுவரைக்கும் ’நல்லது’ அப்படின்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணியிருக்கான்?”

“சரி. ஆனா ’கெட்டது’னு சொல்ற அளவுக்கும் அவன் ஏதும் பண்ணியதில்லையே?”

“தட்ஸ் இட். இந்த சின்ன, தக்கனூண்டு கப்பல்லே நாம செய்யற செயல்கள்ல நல்லதோ, கெட்டதோ இல்லை. இயந்திரத்தனமும், செயல்திறமும் மட்டும்தான் இருக்கு. விஷயம் இப்படி இருக்கறப்போ, நல்லவன், மனசு அப்படிங்கறதெல்லாம் உங்களுக்கே பைத்தியக்காரத்தனமா தோணலையா?”

பூர்ணா சொன்னதின் அர்த்தத்தை முழுதும் புரிந்து கொள்ள எனக்கு சிறிது நேரமானது.

“ஓகே பூர்ணா. ஐ அக்ரி. ஆனா இப்ப கலத்தின் ஆரோக்கியத்துக்கு வேறு வழியில்லை. பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், நீயும் அவனும் இணைஞ்சுதான் ஆகனும். அடுத்த தலைமுறை பிரயாணிகள் தீர்மானிக்கப்பட்டபடி கப்பலுக்குத் தேவை.”

“யார் தீர்மானிச்சது?”

“பூமி விஞ்ஞானிகள்.”

“எப்போ தீர்மானிச்சாங்க?”

“முப்பது வருசத்துக்கு முன்னாடி.”

“நான் அப்ப பிறக்கவேயில்லையே? என்னோட லைஃப தீர்மானிக்கிறதுக்கு அவங்க யாரு? அவங்களுக்கு என்ன உரிமை?”

ஆமாம் அவர்களுக்கு ஏது உரிமை? எனக்கே உரிமை கிடையாதே?

”எல்லாமே சரிதான் பூர்ணா. உன் லைஃபைப் பற்றித் தீர்மானிக்க உனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு. ஆனா நீயும் அவனும் இப்ப இணையலேன்னா, எப்படி அடுத்த தலைமுறையை உருவாக்குறது? இப்ப உனக்கு இருபத்தி அஞ்சு வயசு. கணிணியின் திட்டப்படி பெண்கள் 26 வயசில ஒரு குழந்தையும், 28ல் ஒன்னும்தான் பெற்றுக் கொள்ளமுடியும். இந்த நேரத்தை விட்டா ஒரு குழந்தை வேஸ்டாயிடும். சரி, உனக்குப் பிடிக்கலைன்னா ஆர்டிஃபிஷியல் இன்செமினேஷன் செய்வோமா? நீயும் அவனும் இணையத் தேவையில்லை. கண்ணாடிக் குடுவைல உன்னோட கருமுட்டைய வச்சு...”

”அப்பவும் ப்ரவீனோட குழந்தையைத்தானே என் வயிற்றில் வளர்ப்பீங்க?” வெறுப்பு தெரிந்தது.

”பூர்ணா, உன் விருப்பப்படி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கறதுக்கு, உன்னை உடனே பூமிக்கா திருப்பி அனுப்ப முடியும்? இல்ல வேற ஒருத்தனை புதுசா இங்கே வரவழைக்க முடியுமா? நிலைமைய புரிஞ்சிக்க. யூ ஹவ் டூ டிஸைட் சம்திங்.”

”ஏம்பா? நான் என்ன ஏவாளா? ஒரே ஒரு ஆதாமைத் தவிர எனக்கு வேற ஆப்ஷனே இல்லையா? ஒரே ஒரு ஆதாம் மட்டும்தான் ஆப்ஷன்னா, எனக்கு அந்த ஆப்ஷன் வேண்டாம்பா. நான் கடைசி வரை இப்படியே இருந்துர்ரேன்.”

“பூர்ணா. ப்ளீஸ் பி பிராக்டிகல். அவ்வளவுதான் சொல்லுவேன். நல்லா யோசி”, என்று சொல்லிவிட்டு எழுந்து என் அறைக்கு சென்று விட்டேன்.

X--------X---------X

ராஜீவையும் ப்ரவீனையும் சந்தித்து விஷயத்தைக் கூறினேன். ராஜீவ் ரொம்பவும் கலவரப்பட்டுப் போனான். ப்ரவீன் ஓரளவு இதை எதிர்பார்த்திருப்பான் போல. “அங்கிள், எனக்குப் பூர்ணாவை பிடிச்சிருக்கு. ஆனா கல்யாணம்னா அவளோட இஷ்டம் கண்டிப்பா முக்கியம். அவளுக்கு இதில் இஷ்டமில்லைன்னா விட்டுருங்க. ரெண்டு பேரும் இப்படியே ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டுப் போறோம்.” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அதற்குப் பின் ராஜீவ் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ப்ரவீனும் பூர்ணாவின் பார்வையில் படுவதை தவிர்ப்பதாகத் தோன்றியது. நானும் இந்த விஷயம் குறித்து தீவிரமாக யோசித்தேன். பூர்ணாவின் இஷ்டப்படி ஒரு நீக்ரோவை, இங்கே கப்பலில் உருவாக்கவா முடியும்? இல்லை கிட்டத்தட்ட ஒரு ஒளியாண்டுத் தொலைவிலிருக்கும் பூமியிலிருந்து வரவழைக்க முடியுமா? ப்ரவீனுக்கு வேறு ஆப்ஷன்? நானும் என் மனைவியும் இன்னொரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? ஊகூம். அதுவும் அபத்தம். என் சந்ததி எப்படி வளரப் போகிறது? எங்கள் மிஷன் இரண்டாம் தலைமுறையைத் தாண்டுமா? ம்ம்ம். என்ன செய்வது?

நாட்கள், நியூட்டனின் விதிகள் ஓட்டிக் கொண்டிருந்த எங்கள் கப்பலைப் போலவே, வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.

மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் பத்து நாட்களில் பூர்ணாவின் பிறந்தநாள். அன்று ராஜீவ் எனது அறைக்கு வந்தான்.

“உன் பெண்ணைக் கூப்பிடு.”

“என்ன விஷயம்?”

“கூப்பிடு சொல்றேன்.”

பூர்ணாவை அழைத்தேன். வந்தாள்.

“வெல், பூர்ணா. உன்னோட விருப்பம் என்ன? என் பையன் உனக்கு வேண்டாம். அழகான நீக்ரோதான் வேண்டும். இல்லையா?”

“சாரி அங்கிள். ப்ரவீன் எனக்கு நல்ல ஃபிரெண்ட். ஆனா...”

“ஓகே, தெரியும். எனக்கு என் பையனை விட, இந்த மிஷனோட வெற்றிதான் முக்கியம். அதனால, உன் விருப்பத்தை நிறைவேத்தப் போறேன்.”

”அங்கிள் ஆனா...”

“வெய்ட். வெய்ட். வெய்ட். பதறாம கொஞ்சம் அங்கே பாரு” என்று வாசலைக் காண்பிக்க, அங்கே..........ஒரு நீக்ரோ!!! ஆறரை அடி உயரம், கருஞ்சிவப்புத் தோல், கொஞ்சம் சப்பையான அகலமான மூக்கு, தடித்த உதடுகளுடன் பெரிய வாய், நீக்ரோவேதான்.

“ஹவ் இஸ் ஹீ பூர்ணா? டூ யூ லைக் ஹிம்?”

பூர்ணா கலவரமாக அந்த நீக்ரோவையும், ராஜீவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“வாட்ஸ் திஸ் நான்சென்ஸ்? என்ன அங்கிள் இது? நான் உங்ககிட்ட கேட்டனா? யார் இது? எப்படி இங்க வந்தான்? இவனை எங்க பிடிச்சீங்களோ, அங்கேயே கொண்டு விட்டுருங்க!”

ராஜீவ் பதட்டத்தோடு அவளிடம், “நீதானேம்மா நீக்ரோவைத்தான் காதலிப்பேன்னு உங்கப்பாக்கிட்ட...”

“ஆஆஆவ். எப்பவோ ஏதோ சொன்னதை ஸீரியஸா எடுத்துக்கிட்டு, இப்படியா ஒரு கருப்பனைக் கொண்டு வந்து என் கழுத்தை அறுப்பீங்க?! போங்க அங்கிள். முதல்ல இவனைத் திரும்ப அனுப்புங்க.” உச்சஸ்தாயில் கத்திவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

ராஜீவ் குழப்பமாக என்னைப் பார்த்தான். “டேய் நீதானேடா அவள் நீக்ரோவைத்தான் காதலிப்பேன்னு சொல்றாள்னு சொன்னே?”

”அது இருக்கட்டும். யார்டா அவன்? எப்படிடா வந்தான்? டெலிபோர்ட்டிங் மெஷின் ஏதாவது வச்சிருக்கியா என்ன?”

ராஜீவ் இப்பொழுது வசதியாக சாய்ந்து உட்கார்ந்தான்.

”டெலிபோர்ட்டிங்கா. அது ஒன்னோட டிபார்ட்மெண்ட் தம்பி! நான் பயாலஜி, ஜீன்ஸ், குரோமோசோம்ஸ். அப்படி ஏதாவது யோசிச்சுப் பாரு. புரியலாம்.”

“ஜீன்ஸ், குரோமோஸோம்ஸ்? அப்படின்னா லேப்ல வச்சு உருவாக்கினியா? இதத்தான் மூனு மாசமா பண்ணிட்டிருந்தியா?

“ம்ம்ம். நான் பூமிலேருந்து கிளம்பறப்பவே பரிசோதனைக்காக எல்லா மனித இனங்களோட ஜீன்ஸ் சாம்பிளையும் கொண்டு வந்திருந்தேன். இப்போ இந்தப் பிரச்சனைக்கு விஞ்ஞான ரீதியா தீர்வு இருக்கான்னு யோசிச்சேன். ஒரு ஐடியா தோனுச்சு. அதுபடி ஒரு நீக்ரோ ஜீன்ஸ் சாம்பிளை லேபில் வச்சுப் பல மடங்காக்கினேன். ஆனால் நீ நினைக்கிற மாதிரி ஜீன்ஸை மட்டும் வச்சிகிட்டு ஒருத்தனை, ஒரு மனித உயிரை லேபில் உருவாக்க முடியாது. அந்த அளவுக்கு நம்மகிட்ட இன்னும் விஞ்ஞானம் இல்லை. அப்படி இருந்தாத்தான் அடுத்த தலைமுறைக்கு குழந்தையே தேவையில்லையே”

“அப்ப?”

“போதுமான அளவு ஜீன்ஸ் உற்பத்தியானதும், அதை முறையாப் பிரிச்சு, ஒரு உயிருள்ள உடம்புல விதைச்சிட்டேன். ஜீன்ஸ் ட்ராஸ்ப்ளாண்டேஷன்.”

“அப்போ அந்த நீக்ரோ?!”

“ப்ரவீனேதான்.”

“அடப் பாவி!”

“வாட்?”

“நான் இந்த மூனு மாசத்தில பூர்ணாவுக்கு, அவளுக்கேத் தெரியாமல் நாலு செஷன் மெண்டல் கமெண்டிங் பண்ணியிருக்கேண்டா.”

“அடப்பாவி!”

“இட்ஸ் அ டீடியஸ் ப்ராஸஸ். பூர்ணாவோட மூளையிலிருந்த அந்த பழைய எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமா மாற்றி, அவளுக்கு ’வெள்ளையானவர்கள்தான் அழகானவர்கள்’ அப்படிங்கிற எண்ணத்தை, அவ மூளைல நேரடியா விதைச்சிருக்கேன். இப்போ மறுபடி அதை ரிவர்ஸ் பண்ணினா, அவளுக்கு பைத்தியம் பிடிச்சாலும் பிடிச்சுடுமே?”

எங்கள் இருவரையும் அந்த ஒரே ஒரு கருப்பு ஆதாம் பரிதாபமாகப் பார்த்தான்.

Friday, March 05, 2010

செருப்பு

அந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே, அவரின் பார்வைக் கோணத்தில் பார்த்தால், அந்த செருப்பு!

எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள், ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் - கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால், எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள், அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர்.

சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை, என் எம்சிஏ படிப்பில், எனக்கு பலமுறை வந்த சந்தேகம், எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்துகிறார்களா, இல்லை நான் அவர்களுக்கு பாடம் நடத்துகிறேனா என்பதுதான். ஆனாலும் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மற்றபேர் தலை மேல் ஏறி கழுதை மேய்க்க முனைந்தார்கள்.

சந்தியா மேடம் கிளாஸில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாமல், பதிலுக்கு பதில் கிண்டலாகவே விஷயத்தை முடித்து விடுவார். பசங்க இன்று பாடம் நடத்த வேண்டாம் என்று சொன்னால் பாடம் நடத்துவதில்லை. சில சமயம் “போர்ஷன் முடிக்கனும்பா. ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திக்கிறேன். ப்ளீஸ்” என்பார். அப்படி நடத்துவதையும் யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இந்தளவுக்கு ஸ்டூண்ட்ஸோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மேடத்தின் முகத்தில் அவ்வளவு கோபத்தை பார்த்த பிறகுதான் எனக்கும் விஷயத்தின் தீவிரம் உரைத்தது.

“யார் செருப்பு இது?” கொஞ்சம் உயர்ந்த குரலில்தான் மேடம் கேட்டார்.

பதிலில்லை.

“யாருதுன்னு கேக்கறனில்லை?!” குரல் மேலும் உயர்ந்தது, கோபமும்!

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

யாரும் அசைவதாகத் தெரியவில்லை. ஃப்ரெட்ரிக் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

மேடம் முகத்தில் அவமானம். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது.

“ஓகே. யாரோடதாவும் இருக்கட்டும். யாராவது ஒருத்தர் அதை எடுத்து வெளில போடுங்க.”

யாரும் வரவில்லை.

“இந்தக் கிளாஸ்ல எம்பேச்சை கேக்கிறதுக்கு ஒர்த்தர் கூட இல்லியா?”

பாக்கியராஜ் கடைசி வரிசையிலிருந்து வேகமாக எழுந்து வந்து வெளியே சென்றான். அங்கு முக்கில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடை குச்சியை எடுத்து வந்து, அந்த செருப்பை கொழுக்கி வெளியே எடுத்து சென்று ஜன்னல் வழியே வெளியே விட்டான். வகுப்பிருந்தது முதல் மாடியில். அதனால் கீழே போடப்பட்ட செருப்பு சன் ஷேடில் விழுந்தது.

மேடம் தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. பசங்க இன்னிக்கும் கிளாஸை காலி பண்ண முடிவு செய்துவிட்டார்கள். செமஸ்டர் முடியப் போகிறது. இன்னும் பாதி போர்ஷன் கூட முடியவில்லை.

”நான் கொஞ்ச நேரம் கழிச்சு நடத்துறேன்.” என்று சொல்லிவிட்டு வகுப்பில் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டார். வழக்கமாக இப்படி நின்றிருந்தால் பசங்க ஃபிரீயாக அரட்டை அடிப்பார்கள். இன்றும் உடனே அரட்டை ஆரம்பமான சத்தம் கேட்டது.

மேடம் திரும்பி, “உங்களுக்கு கொஞ்சம்கூட டிஸிப்ளின் தெரியாதா? இங்க முன்னாடி வந்து பாடம் நடத்திப் பாருங்க. அப்ப யாராவது உங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா எப்படியிருக்கும்னு தெரியும். சே!” என்று மறுபடி திரும்பிக் கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டேன், ’இந்தப் பசங்களுக்கு நல்லா வேணும்.’

பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ஃப்ரெட்ரிக்கை யாரோ தட்டி விட்டார்கள். பாக்கியராஜ் அவனிடம், “யேல, ஒன் செருப்பு எங்க?” என்று கேட்டது என் காதில் விழுந்தது. மேடத்துக்கு கேட்டிருக்காது.

ஃப்ரெட்ரிக் மலங்க மலங்க விழித்து குனிந்து தேட ஆரம்பித்தான்.

“யேல! என்ன?”

“என் செருப்பக் காணோம்ல.”

மேடம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“மேடம் ஓன் செருப்பத் தூக்கி வெளியே வீசிட்டாங்க” கடைசி வரிசை பசங்க ஊதி விட்டார்கள்.

ஃப்ரெட்ரிக் எழுந்து மேடத்தை நோக்கி விழித்தான்.

மேடம், ”என்ன?”

“செருப்பு!?!”

“என்னது?”

“என் செருப்பக் காணோம் மேடம்.”

கொஞ்சம் குறைந்திருந்த மேடத்தின் கோபம் மறுபடி கூடியது.

“அப்பத நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை.”

“அவன் தூங்கிட்டான் மேடம்.” பின்னாலிருந்து கேட்ட குரல் பாக்கியராஜினுடையதுதான்.

“ஏன் சொல்லலைன்னு கேட்கிறேன்.”

“தூங்கிட்டேன் மேடம்.”. ஃப்ரெட்ரிக் இப்படித்தான். கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆனவன். சில சமயம் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை உணராமலே சொல்லி/செய்து விடக் கூடியவன். அவன் சொந்த வாழ்வை புகுந்து பார்த்தால், அம்மா கிடையாது, சித்தி கொடுமை, அப்பா கவனிக்கவில்லை என்று பல காரணங்கள் சொன்னாலும், இந்தக் கதைக்கு அவையெல்லாம் தேவையில்லையாதலால், அவன் மெண்டலி டிஸ்டர்ப்ட். அது போதும்.

“இங்க ஒருத்தி போர்ஷன் முடிக்கனுமேன்னு, உங்களுக்காக நைட்டெல்லாம் நோட்ஸ் எடுத்து வந்து பாடம் நடத்துவா. நீ பாட்டுக்கு அதை கவனிக்காம தூங்கிருவே. ஒன் செருப்ப எடுத்து இன்னொருத்தன் அவ மேல வீசுவான். அதுவும் ஒனக்குத் தெரியாதுல்ல. என்னன்னும் போங்க.” மேடம் மறுபடி வெடித்தார்.

இப்பொழுது பின் வரிசையிலிருந்து ஸாம் எழுந்தான், “மேடம் அவன் நெஜமாவே தூங்கிட்டிருந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் செருப்பை எடுத்து யாரோ லேசா தள்ளி விட்ருக்காங்க. அதுக்காக அவன் செருப்பை எடுத்து வெளியே வீசினா என்ன மேடம் அர்த்தம். பாவம் மேடம். ரொம்ப கஷ்டப்பட்ட பையன். இன்னொரு ஜோடி செருப்பு வாங்குறதனா அவனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருந்தாலும் நீங்க சரியா விசாரிக்காம அவன் செருப்ப வெளியே போட்ருக்கக் கூடாது மேடம்.”

எனக்கு சனியன் சங்கில் ஏறி உட்காருவதாகத் தோன்றியது.

“அப்ப அவன் செருப்ப யாரு முன்னாடி தள்ளி விட்டதுன்னு சொல்லுங்க.”

“அத நான் கவனிக்கலை மேடம். ஆனா நீங்க எப்படி மேடம் அவன் செருப்ப வெளில போடலாம். இப்ப அவன் செருப்புக்கு என்ன மேடம் பதில். நீங்க வாங்கிக் கொடுப்பீங்களா? யேல, ஒனக்காகத்தான்ல பேசிட்டிருக்கேன். ஒன் செருப்புக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு கேளு.” இன்னும் தூக்கம் சரியாகக் கலையாத ஃப்ரெட்ரிக்கை உசுப்பிவிட்டான்.

“நீங்க நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. செருப்ப...” என்று மேடம் திரும்ப பழைய பல்லவியை பாட, ஸாமும் பதிலுக்கு அவன் பல்லவியை பாட, இதற்குள், கடைசி வரிசை பசங்க நாலு பேரும் ஸாமுடன் இணைந்து கொண்டார்கள். பொன்ராஜுக்கு ஸாமை பகைத்துக் கொள்ள முடியாது. முரளிக்கு கிளாஸை எப்படியாவது ஓய்த்து விட வேண்டும். எப்படி ஓய்த்தால் என்ன. பாக்கியராஜோ எப்பொழுது எந்தப் பக்கம் நிற்கிறான் என்றே தெரியவில்லை.

அப்புறம் நடந்த சம்பாஷனைகளை விவரிப்பது கொஞ்சம் கடினம். இரு தரப்பும் மாறி மாறிப் பேச, சண்டை போட,
மாணவர்கள் பக்கம் மடத்தனமான பலம் சேர்ந்து விட, செருப்பை வெளியே வீசச் சொன்ன சந்தியா மேடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிலைமை தலை கீழாக மாறியது.

பீரியட் முடிய ஐந்து நிமிடமே பாக்கியிருந்ததால், மேடம் கோபித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார். அடுத்து பத்து நிமிடம் பிரேக். அதற்கு அடுத்து கம்யூட்டர் பிராக்டிக்கல் பீரியட். பின் வரிசையில் மாணவர்கள் மாநாடு கூட்டப்பட்டது. ’மேடம் எப்படியும் பிரச்சனையை இந்நேரத்துக்கு ஸ்டாஃப் ரூம்ல ரிப்போர்ட் பண்ணிருப்பா. ஹெச்.ஓ.டி. கலைமகள் சும்மாவே முசுடு. ஏற்கெனவே நம்ம கிளாஸ் மேல கொலவெறில இருக்கா. அதுனால பிரச்சனையை பிரின்ஸி வரைக்கும் கொண்டு போய்டுவா. அவங்க பிரச்சனையை பிரின்ஸிகிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். அதுனால நாம ஒத்துமையா இருக்கனும். நம்ம மேல தப்பு வராம இருக்கனும்னா, நாமளும் ஸ்ட்ராங்கா ஏதாவது பண்ணனும். பேசாம பிராக்டிக்கல் லேப பாய்காட் பண்ணிரலாம். அப்பதான் அவங்க பக்கமும் தப்பு இருக்குன்னு பிரின்ஸிக்குப் புரியும்.’

”நான் ரெடிப்பா”, என்றான் முரளி, “பாய்காட்!” என்று கூவினான்.

”ஸோ, அடுத்த பீரியட், கம்ப்யூட்டர் லேபை எம்.சி.ஏ. செகண்ட் இயர் பாய்காட் பண்றோம். பண்றோம்டா. பண்றோம்டா” என்று பொன்ராஜ் எக்கோ கொடுத்தான். கடைசி வரிசை பசங்கள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தனர். நான் எதுவும் காதில் விழாத மாதிரி பிரேக்குக்கு போய் விட்டேன்.

பிரேக் முடிந்ததும், நேராக லேபுக்கு போய் விட்டேன். லேப் கீழேதான். அதனால் முதல் மாடி வகுப்புக்குள் நுழையவோ, வாசலைக் கடக்கும் பிரச்சனையோ இல்லை. அப்ஸர்வேசன் நோட்டெல்லாம் லேபுக்கு எடுத்துப் போகும் பழக்கமும் நமக்கு கிடையாது. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லேபுக்குள் நுழைந்தேன், அதாவது லேப் காரிடாரில். லேபுக்குள் நுழைய இன்னொரு கதவைத் திறக்க வேண்டும்.

லேப் காரிடாரில் எங்கள் வகுப்பு பெண்கள் நின்று குழம்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. பசங்களை பகைத்து கொண்டு லேபுக்குள் போவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழையவும் ஹேமாவையும், ரம்யாவையும் என்னிடம் அனுப்பி என்ன செய்யலாம் என்று கேட்கச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மட்டும்தான் பசங்களோடு வெட்கப்படாமல் பேசுபவர்கள்.

ஹேமா என்னிடம் வந்து, ”என்னடா பண்றது? நீ உள்ளப் போப்போறியா?” என்று கவலையோடு கேட்டாள்.

நான் வாயைத் திறந்து, “ஆ...”, யாரோ என் பெயரை சொல்லி அழைத்ததால் திரும்பிப் பார்த்தேன். பாக்கியராஜ் காரிடார் வாசலில் நின்று கொண்டிருந்தான். “என்ன?” என்றேன்.

“ஒர் நிம்சம் இங்க வாயேன்.”

போனேன். “நம்ம பசங்கல்லாம் லேபை பாய்காட் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்காங்க.” சொல்லும்பொழுது அவன் குரல் மிகவும் தாழ்ந்து இருந்தது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்வது போல. பசங்களுக்கு என் மேல் எப்பொழுதும் ஒரு பயமுண்டு. நான் அடிதடி பயில்வான் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் என்னை புல்தடுக்கி பயில்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் எப்பொழுதும் எந்த விஷயத்திலும் கரெக்டாக நடந்து கொள்வேன் என்பதால்தான் என் மீது பயம். அந்த பயம் எனக்கும் கொஞ்சம் கர்வமாக இருந்தது.

“சரி, அதுக்கென்ன?”

“அதான், நீயும்....”, என்று இழுத்தான்.

“இங்கப் பாரு. தப்பு யாரு மேல? ஒருத்தங்க பாடம் நடத்திட்டிருக்கும்போது அவங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா அவங்களுக்கு கோபம் வராம என்ன செய்யும்? இந்த ஃப்ரெட்ரிக் வேற பாடம் நடத்தறப்போ தூங்கிட்டு, அதையும் அவங்ககிட்டயே சொன்னா எரிச்சல் வராதா. இதுல இவன்கிட்ட மேடம் மன்னிப்பு கேக்கனும்னு வேற நீங்கல்லாம் சொல்றீங்க.”

“எனக்கும் தெரியுதுடா. இருந்தாலும் இப்ப நாம ஒன்னா இல்லைன்னா நம்ம கிளாஸுக்குதான் அவமானம். இந்த ஒரு தடவை மட்டும் வந்துறேன்.” அவன் குரல் மிகவும் கெஞ்சலோடு இருந்தது. எனக்கு அவன் மீது எப்பொழுதும் கொஞ்சம் மதிப்பு உண்டு. ’பையன் நல்லவந்தான். சேர்க்கதான் சரியில்ல’ என்று நினைத்துக் கொள்வேன்.

அவன் மறுபடி, “ப்ளீஸ்டா” என்றான். கொஞ்சம் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தேன். “சரி வர்ரேன். ஆனா, உங்களுக்கு சாதகமா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.” என்றேன்.

“நீ வந்தா போதும்.” என்றான், என்னை இழுத்துச் செல்லும் அவசரத்துடன்.

பின்னால் திரும்பி பெண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அவனுடன் மேலே சென்றேன். நானும் வந்து விட்டதால், பெண்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள்.

கிளாஸுக்குள் என் இருக்கைக்கு போய் உட்கார்ந்து கொண்டேன். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை.

அரைமணி நேரம் கழித்து ஹெச்.ஓ.டி. கலைமகள் வந்தார். பசங்க அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பிரின்ஸி எங்கள் அறைக்குள் நுழைந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். நான் முதல் வரிசையில், நான் மட்டும்.

அவரும், “ஒருத்தங்க முன்னாடி கிளாஸ் எடுத்தி....” என்று பழைய பல்லவியை பாடிவிட்டு, “நீங்களெல்லாம் படிக்க வந்திருக்கீங்களா வேற எதுக்காவது வந்திருக்கீங்களா? ஆர்ட்ஸ் படிக்கிற பயலுங்கதான் இந்த மாதிரி ஸ்ட்ரைக் கிய்க்ன்னு பண்ணுவாங்க. நீ சைன்ஸ் படிக்க வந்திருக்கேய்யா. பொறுப்பு வேணாம்.....” அரை மணி நேரத்துக்கு அவர் ஓயவில்லை. பசங்கள் இடையில் ஒரு வார்த்தை பேசவில்லை.

எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் பார்த்துதான் அவ்வளவு திட்டுக்களையும் திட்டிக் கொண்டிருந்தார். போன வருடம் நடத்திய எக்ஸ்போ மூலம் என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். என்னிடம் அவருக்கு நல்லெண்ணம் உண்டு என்று எனக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு நல்லெண்ணமும் இன்று நாசமாகிவிட்டது என்று தோன்றியது.

இறுதியில், “கடைசியா சொல்றேன். இப்ப எல்லாரும் அவங்கவங்க அப்ஸர்வேசன் நோட்டை எடுத்துகிட்டு லேபுக்கு போங்க.” என்றார். அரைமணி நேரமாக இதற்காகவே காத்திருந்தது போல நான் எனது ஒரே நோட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி, லேபுக்கு போனேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இருவர் வர, அவர்களைத் தொடர்ந்து பெண்களும் வர, கடைசி வரிசை பாக்கியராஜ், ஸாம், முரளி, பொன்ராஜ், செருப்புக்கு சொந்தக்காரன் ஃப்ரெட்ரிக் ஆகிய ஐவர் தவிர எல்லோரும் லேபுக்கு போய்விட்டோம்.

எங்கள் முன்னால் வாங்கு வாங்கென்று வாங்கிய பிரின்ஸி, முக்கியமாக என்னை கிழி கிழியென்று கிழித்தவர், நாங்கள் லேபுக்கு வந்தபின்னும், அவர்கள் ஐவரும் பிடிவாதமாக நின்றதால், அவர்களிடம் சமாதானமாக பேசியதாகவும், மேடம் ஃப்ரெட்ரிக்கிடம் தனியாக மன்னிப்பு கேட்டதாகவும், யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும், பின்னர் ஸ்டாஃப் ரூமில் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து லேபுக்குள் செய்தி கிடைத்தது.

எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வின் நியாய தர்மங்கள் எனக்குப் புரியவேயில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிளாஸில் நான் யாருடனும் பேசுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடம். அப்புறம் பிரியப்போகிற சமயம் எதற்கு வீணாக பகையோடு பிரிய வேண்டும் என்று சமாதானமாகி, கல்லூரி விட்டு வெளியே வந்து, சென்னையில் வேலை தேடும் பொழுது ஸாம், பொன்ராஜோடு ஒரே மேன்ஷனிலும், முரளியோடு ஒரே அறையிலும் காலம் தள்ளி என்று வாழ்க்கை போய் விட்டது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதும் இந்த நிகழ்வு குறித்து எனக்குள் எழுவது ஒரே ஒரு கேள்விதான்.

’அந்த செருப்ப எறிஞ்சது யாரு?’

Thursday, January 28, 2010

ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் - ௨௲௧௧

டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85



பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)