Thursday, September 05, 2013

காரணம்

“பெருமாள் கோவில் ஆண்டாள் சந்நிதி முன்பு.... சரியாக நான்கு மணிக்கு....”

போனை வைத்த தங்கராசு, தன் தொழிலில் இருக்கக் கூடாத பதட்டத்தில்தான் இருந்தார். இதுதான் கடைசி முயற்சி. இதிலும் தட்டிப் போய்விட்டால், சுந்தர் ஜாதகத்தை கிடப்பில் போட்டு விடவேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தார்.

திருமண தரகர் தங்கராசுவிற்கு, கல்யாண மார்க்கெட்டில் உயர்வான பெயருண்டு. தேவைக்கதிகமாக பெண் வீட்டார் பற்றியோ, மாப்பிள்ளை வீட்டார் பற்றியோ பில்டப் கொடுக்க மாட்டார். தனக்கு தெரிந்த உண்மைகளை நிச்சயமாய் கூறிவிடுவார். இதனால், தன் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமென்று அவர் நினைத்ததே கிடையாது. இன்னும் சொல்லப் போனால், இந்த நேர்மைதான் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்றே நம்புபவர்!

கடந்த பதினைந்து வருடங்களாக தன் தொழிலை கணினி பக்கம் திருப்பியிருந்தார்! கணினி பக்கம் என்றதும், மேட்ரிமோனியல் வெப்சைட்டொன்று ஆரம்பித்து, வரன்களை பற்றி துளியும் தெரிந்து கொள்ளாமல், ரிஜிஸ்தர் செய்யவே காசு வாங்கிக் கொண்டு, உட்கார்ந்த இடத்தில் பேங்க் பேலன்ஸை ஏற்றிக் கொண்டிருக்கும் அல்ட்ரா மாடர்ன் தரகர் என்று எண்ணி விடாதீர்கள். சென்ற சில வருடங்களில் கணினி என்ஜினியர்களின் பொருளாதார நிலை, சேவாக் ஸ்கோர் மாதிரி திடீரென்று எகிறியதும், வாழ்க்கை வசதிகள் அதிகரித்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அத்தகைய வீடுகளில், சொந்தங்கள், நட்பு வட்டாரங்கள் மூலம் சொல்லப்படும் வரன்கள், அவர்களின் பழைய லெவலிலேயே இருக்கும். தங்கள் லெவல் உயர்ந்துள்ளது என்று கூறினாலும், தலைக்கனம் அதிகரித்துவிட்டது என்ற பழிச்சொல்தான் வரும். இத்தகைய கணினி துறை வரன்களாக தேடிச் சென்று, சேகரித்து, முடித்து வைக்க ஆரம்பித்தார். இதில் கணினி துறையின் அபரீத வளர்ச்சியும், அவரின் நேர்மையும் இணைந்து செயல்பட, மார்க்கெட்டில் இன்று அவர் முதல்தர தரகர்!

வெல். நான் சொல்ல வந்தது, தரகர் தங்கராசு பற்றி அல்ல. தங்கராசுவிற்கு சவாலாக அமைந்த சுந்தர் பற்றியது.

இந்தியாவிலேயே ஆறு இலக்க சம்பளம், அடிக்கடி வெளிநாட்டு டூர், அந்த சமயங்களில் மனைவிக்கும் டிப்பெண்டட் விசா தகுதி, கெட்ட பழக்கங்கள், சகவாசங்கள் இல்லாதது என்ற பல குவாலிஃபிகேஷன்கள் இருந்தாலும், அவனுக்கு பிடித்த பெண்ணை அவரால் கொண்டு வரமுடியவில்லை.

முதன்முதலில், அவன் பெண் பார்க்க சென்றது இன்னமும் அவர் ஞாபகத்தில் இருந்தது. எல்லா ஃபார்மாலிட்டீஸும் ஒழுங்காகத்தான் சென்றது. பெண் கொஞ்சம் உயரம் போல் இருக்கிறதே என்று கூறி வேண்டாமென்றான். அஞ்சு நாலு, தம்பி என்றதும், நான் அஞ்சு அஞ்சு. அதிக வித்தியாசம் வேண்டாமா என்று கேட்டான். அந்த கேள்வி, அப்போது நியாயமாகத்தான் பட்டது.

ஆனால், அடுத்து பார்த்த பெண்ணும் உயரத்தில்தான் தட்டிக் கழிக்கப்பட்டாள். அஞ்சுதான் இருக்கும் போல. ரொம்ப குள்ளமாக உள்ளதே என்ற காரணம் வந்தது!

ஆக, அஞ்சு நாலுக்கும் அஞ்சுக்கும் இடைப்பட்ட, அஞ்சு இரண்டில் பார்க்க வேண்டியதிருந்தது. தங்கராசு கொண்டு வரவேண்டிய வரன்களின் வட்டம் குறுகிப் போனது!

உயரத்திலேயே இவ்வளவு --- என்றால், நிறம், குண்டு ஒல்லி போன்றவைகளில் எப்படி எப்படி கோரிக்கைகள் வந்திருக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

தெத்துப்பல் மாதிரி தெரிகிறதே....

கண் எங்கேயோ பார்ப்பது போல் உள்ளதே...

நிறம் இன்னும் கொஞ்சம் அதிகம் இருக்கலாமே...

காரணம்... காரணம்... பெண்ணை வேண்டாமென்று சொல்ல விதவிதமான காரணங்கள்தான் எத்தனை... சுந்தரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். தங்கராசுவின் வட்டம் மேலும் மேலும் குறுகி, புள்ளி அளவிற்கு வந்தது! அது கூட அவருக்கு கவலையில்லை. அவரின் ஒரே ஆதங்கம் என்னவென்றால், அத்தனை நிராகரிப்பும் பெண்பார்த்தபின் வருவதுதான். பெண்ணை பார்த்தபின் நிராகரிப்பது, அவளுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கும் என்பதை இந்தக்கால பையன்கள் புரிந்து கொள்வதே இல்லை.

இதை தவிர்ப்பதற்காகவே, போட்டோ, வீடியோ போன்றவைகளை முதலிலேயே காண்பித்து விடுவார். என்றாலும், காரணம் என்னவோ பெண் பார்த்தபின் தான் வருகிறது!

சுந்தர் இந்தக்கால மாப்பிள்ளைகளின் பிரதிநிதி. தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் இன்றைய இளைஞர்களில் ஒருவன். அவனுக்கு யார் எடுத்து சொல்வது? பெற்றோராவது சொல்வார்களா என்று பார்த்தால், ஒரே பையன் சார். வீ வாண்ட் தி பெஸ்ட் என்கிறார்கள்.

”தம்பிக்கு ஐஸ்வர்யா ராயைத்தான் நிறுத்த வேண்டும் போல”, என்று ஒருமுறை நக்கலாக குத்திக் காண்பித்தார்.

“அதுக்கு பூனைக் கண் சார்! எனக்கு சரிப்பட்டு வராது!”, என்று
 சுந்தர் காரணம் சொன்னதும் நொந்து போய் விட்டார். தலையை முட்டிக் கொள்ள பாறையைத் தேடினார்!

அந்த குடும்பமே யோசனையில்லாமல் நடந்து கொள்வதாய் அவருக்குப் பட்டது. அதனால், சிறிது காலமாய் சுந்தரையே மறந்து விட்டார். வரன் எதுவும் சிபாரிசு செய்யவில்லை. எனினும், இன்டெர்நெட் மூலம் ஃபிக்ஸ் பண்ணி சில பெண்களை பார்க்கச் சென்றதாய் அறிந்து கொண்டார். எதுவும் முடிவாகவில்லை. தனக்கு பிடித்தது என்ன, என்பதே சுந்தருக்கு தெரியுமா என்ற சந்தேகம் அவருக்குண்டு!

வேண்டாவெறுப்பாய் இருந்தவரை மாற்றமடைய வைத்தது சுவாதியின் ஜாதகம்தான். சுவாதி, தங்கராசுவிற்கு தூரத்து உறவும் கூட. நல்ல பெண், குடும்பம், மற்றும் சுந்தர் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் அவளிடம் இருந்தன.

மீண்டும் சுந்தரை ஆரம்பித்து வைக்க ரொம்பவே யோசித்தார். மற்ற பெண்களைப் போல சுவாதியையும் கஷ்டப்படுத்தி விடக்கூடாது. ரிஜக்சனுக்காக அவன் கூறிய அத்தனை காரணங்களையும் யோசித்து யோசித்து பார்த்தார். சுவாதியை எந்த காரணத்தாலும் நிராகரிக்க முடியாது. மேலும், ஏதாவது ஒரு முடிவு வரவேண்டுமே. இந்த பெண்ணுக்காகத்தான் இவ்வளவு நிராகரிப்புகள் நிகழ்ந்ததோ என்னவோ? சுந்தர் ஒன்றும் அவ்வளவு பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள மாட்டான். இவ்வாறு, தன்னைத்தானே தேற்றிக் கொண்டு விக்கிரமாதித்தன் போல மனந்தளராமல் மீண்டும் ஆரம்பித்தார்.

ஜாதகப் பொருத்தம், விசாரிப்புகள், வீடியோ போன்ற ஆரம்ப கட்ட விஷயங்கள் வழக்கம் போல எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தன. இந்தமுறை சுந்தரின் அம்மா மட்டும் முதலில் பெண் பார்க்க வந்திருந்தார்.

அவருக்கு சுவாதியை மிகவும் பிடித்திருந்தது.

“இந்த பெண்ணை தம்பிக்கு நிச்சயம் பிடிக்கும்னு நினைக்கிறேன்...”

அம்மாவின் உற்சாகம் தங்கராசுவிற்கும் தொற்றியிருந்தது.

அன்று மாலை, பெருமாள் கோவிலில் வைத்து, சுந்தர் பெண் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். அன்று முழுவதும், பெண் வீட்டார் போல அவர்தான் டென்ஷனில் இருந்தார்.

சொன்னபடியே இரண்டு வீட்டாரும் நான்கு மணிக்கு கோவிலுக்கு வந்து விட்டார்கள். வழக்கமான வரவேற்புகள்...  வழிசல்கள்... பேச்சுக்கள்... இந்த பெண்பார்க்கும் படலமே ஒரு சங்கோஜமான விஷயம். திருமணம் உறுதியாகிவிட்டால், அதை இல்லற பந்தத்தின் முதல்படி, தெய்வீக சந்திப்பு, ஆண்டவன் முடிச்சின் ஆரம்பம் என்றெல்லாம் அழகழகான வார்த்தைகளில் கூறி விடலாம். ஒருவேளை உறுதியாகாமல் போய்விட்டால், அதுவே அநாகரீக சந்திப்பாகி விடும்!

முடிச்சா.... அநாகரீகமா... சுந்தரின் முடிவு என்ன? தங்கராசு டென்ஷனில் இருந்தார்.

பெண் பார்த்துவிட்டு வந்த சுந்தரின் முகம், தங்கராசு எதிர்பார்த்தபடி இல்லை! ஆம். இம்முறையும் வழக்கமான சுழிப்பு....! அதிருப்தி....!!

“பிடிக்கலை. வேற பார்க்கலாம்”, என்று தங்கராசுவிடம் கூறி விட்டு, வாசலை நோக்கி நடந்தான் சுந்தர்.

“ஏன்... ஏன்... என்ன காரணம்?”, எரிச்சலோடு வினவினார் தங்கராசு.

“இந்த பெண் வேண்டாம்னு ஏனோ மனசுக்கு படுது, சார்.... விட்டுடுங்க...”, கூறிய சுந்தரின் சட்டையை பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைய வேண்டும் போல இருந்தது தங்கராசுவிற்கு.

“என்ன காரணம் இது? முட்டாள்தனமாக இருக்குது. வேண்டாம்னு மனசில படுதாம்... எதுதான் வேணும்னு படுமாம்?”, எரிச்சலோடு திரும்பி நடந்தார். பெண் வீட்டாருக்கு என்ன காரணம் கூறுவது என்று யோசித்துக் கொண்டே சென்றார்.

காரில் ஏறிய சுந்தர், “இதோடு நாற்பத்தொன்பது முடிந்து விட்டது! இன்னும் ஒன்றை பார்த்துவிட்டால், அரை செஞ்சுரி அடித்து விடலாம்! உண்மை காரணத்தை சொன்னால், இவர்களால் இந்த சாதனையை புரிந்து கொள்ள முடியுமா? அதான் ஏதேதோ சொல்ல வேண்டியதிருக்கு”, என்று எண்ணிக் கொண்டே கோவிலிலிருந்து விலகிச் சென்றான்.

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை  தொகுப்பு புத்தகத்தில் பிரசுரமான சிறுகதை**

No comments: