Tuesday, September 10, 2013

விச்சுவின் சாகசங்கள்


பள்ளி அலுவலகத்தில் அமர்ந்திருந்த விச்சுவை விட அம்மா தான் படபடப்போடு இருந்தார்.

ஆறாவதுக்கு அட்மிஷனே இப்படி உள்ளது! நன்கொடை கேட்காத, ரெண்டு பள்ளிகளில் இந்த பயல் தேர்வாகவில்லை. இந்த ஒன்றில் தான் அதிசயமாக இண்டர்வியூவிற்கு அழைத்துள்ளார்கள். செலக்ட் ஆகி விடுவானா?

அம்மாவின் பி.பி. எகிறிக் கொண்டிருந்தது.

“உனக்கு கொஞ்சங்கூட கவலை இல்லையாடா?”

“நானும் டென்ஷனில்தான் உள்ளேன்மா ... “

“நிஜமாகவா?”

“ம்ம் .. இங்கு லேட்டாவதைப் பார்த்தால், பென் டென்னை தவற விட்டு விடுவேன்னு நினைக்கிறேன்!”

“படவா ... சீட் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறேன். உனக்கு கார்ட்டூன் கவலையா?”

கோபப்பட்ட அம்மாவிடம் விச்சு, “கூல்!”, என்று சிவாஜினான்.

முதல்வரின் அழைப்பு வந்தது.

அறைக்குள் இருக்கையில் அமர்ந்த பின்பும் அம்மாவின் நடுக்கம் குறையவில்லை.

“ஓ ... நீ தானா அது?”, விச்சுவின் நுழைவுத் தேர்வு விடைத்தாளை பார்த்துக் கொண்டே கேட்டார் முதல்வர்.

“இந்த பதில் தான்! குட், குட்!”

அம்மாவின் மனதிற்குள் ஒரு நம்பிக்கை துளிர்ந்தது. ஏதோ ஒரு பதில் முதல்வரை கவர்ந்துள்ளது.

”எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்? என்ற கேள்விக்கு நீ எழுதிய பதில் என்ன, விஷால்?”

“ஆர்க்கியாலஜிஸ்ட், மேம்!”

“குட், குட்! பத்து வயது மாணவன் லட்சியத்தோடு இருப்பதே பாராட்டுக்குரிய விஷயம். அதிலும் நீ வித்தியாசமான துறையை அல்லவா தேர்ந்தெடுத்துள்ளாய்!”

ஆர்க்கியாலஜிஸ்ட்ன்னா என்ன .. ? புதுசா இருக்கே .. ? ஜோதிட படிப்போ?

குழம்பிக் கொண்டிருந்தார் அம்மா.

“ஆர்க்கியாலஜிஸ்ட்டோட கடமைகள் என்னென்ன, விஷால்?”

“பழங்கால பொருட்களை கண்டுபிடிப்பது, பாதுகாப்பது, அதன் வரலாற்றை அறிந்து கொள்வது ...”

“வெரிகுட்! நீ செலக்ட் ஆகி விட்டாய்!”

“தேங்க்யூ மேம்!”

அம்மா தான் ஆச்சர்யத்தில் இருந்தார். இந்த பெயரை நானே இப்போதுதான் கேள்விப் படுகிறேன். விச்சுவுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்துள்ளது. வெளியே வந்ததும் அவனிடமே கேட்டார்.

“கார்ட்டூன் பார்ப்பதில் உபயோகமே இல்லைன்னு இனி சொல்லாதிங்கம்மா ... ஏன்னா இது ... ஜாக்கிசானின் சாகசங்கள்மா!”

“அடப்பாவி!”

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை**

5 comments:

குட்டன்ஜி said...

கார்ட்டூன் பார்ப்பதிலும் பயன் இருக்கு!
தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!

குட்டன்ஜி said...

ஓட்டுப் போட முடியவில்லை

Yaathoramani.blogspot.com said...

அருமை
எதிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது
நாம் தான் அதனை தேடிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
மனம் கவர்ந்த கதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீ தேவி said...

**கார்ட்டூன் பார்ப்பதிலும் பயன் இருக்கு!
தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!** நன்றி குட்டன்..!

ஸ்ரீ தேவி said...

நன்றி ரமணி...!