Saturday, September 28, 2013

ஸ்பெஷல் தோழி

ஃபோரம் லேண்ட்மார்க்கிற்குள் நுழையும்போது தான் எஸ்கலேட்டரில் ஏறிக்கொண்டிருந்தவளை கவனித்தேன். அது... அது... நெட்டை நித்யா தானே...? ஆம்... அவளேதான். உடை, ஹேர்ஸ்டைல், பேசும் விதம், மேக்கப்... எட்டு வருட இடைவெளியில் அடியோடு மாறிவிட்டாளே? எனக்கு நித்யாவை நேருக்கு நேர் சந்திக்க தயக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

காரணம் பிறகு... முதலில் நித்யாவின் கண்ணில் பட்டுவிடக் கூடாது. என் மகளை இழுத்துக் கொண்டு சிடி செக்சனுக்குள் நுழைந்தேன். கண்கள் சிடிக்களை மேய்ந்தாலும், என் சிந்தனை கல்லூரி காலத்திற்கு சென்றது.

இருவருமே கோவை ஜிசிடியில் ஐடி படித்தவர்கள். கல்லூரியில் அமைதியாக அடக்கமாக இருந்தாலும், விடுதியில் நான் அடிக்கும் லூட்டியே தனிதான். சீனியர், ஜூனியர், ஏன் லெக்சரர்களை கூட விட்டு வைக்காமல் ஓட்டு ஓட்டுவேன். கலாட்டா காலனி என்றுதான் எல்ஹைச்சுக்கு பெயர் சூட்டியிருந்தோம்! என்னிடம் அதிகமாக சிக்கித் தவித்தது நித்யாதான்! ஆறு மூன்று என அதீத உயரம், திக்கல் பேச்சு, குழந்தைத்தனம் என்று நித்யா ஒரு வெகுளியானப் பெண். டிரெஸ்ஸிங் சென்ஸ் கிடையாது. மேக்கப் தெரியாது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட தேவையில்லாத பயம்.

என்னால், அவள் அழாத நாளே இருக்காது! கரெக்டாக கூறனும்னா, என்னை அவள் எரிச்சலூட்டாத நாளே கிடையாது! நித்யாவை நான் எவ்வளவு திட்டினாலும், என்னையே சுற்றி சுற்றி வருவாள். கேள்விக் கணைகளால் என்னை துளைத்து எடுத்து விடுவாள். ஐயோ என்னை விட்டுடின்னு கையெடுத்து கும்பிட்டாலும் விடமாட்டாள்.

அவள் பிறந்த நாளுக்கு பாஸிட்டிவாக செய்வோம்னு ஒரு அட்வைஸ் செய்தேன். பிறந்த நாள் உடை விஷயமாய்.

“உன் உயரத்திற்கு சேலை கட்டனும்னா, லோஹிப்ல கட்டனும். அதை நீ செய்ய மாட்டே... அதனால் இந்த தடவை சுரிதார் மெட்டிரியல் எடுத்து தைக்கலாம். அளவெடுக்கும் போது உன் திருவாயை மூடி வைத்துக் கொண்டு சும்மா இரு! மாடல், மற்ற விஷயங்களை நான் கூறிக் கொள்கிறேன். அளவை மட்டும் கொடுத்து விட்டு வா! உன் பிறந்த நாளன்று நீதான் நா.ந.நி! நாகரீக நங்கை நித்யா!!” அவள் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு எரிந்தது.

இவ்விஷயத்தில் நான் சொன்னபடியேதான் செய்திருந்தாள். ஆனாலும் பிறந்த நாளன்று வந்தாளே ஒரு சுடிதாரோடு! அந்த கலர்...! ஐயோ! கண்ணைக் கூசுவது போல மிட்டாய் கலரில்...! ரெண்டு நிமிஷம் அதிகமாக பார்த்தால் கண் கெட்டுப் போய்விடும்! தலையில் அடித்துக் கொண்டேன். “நீ திருந்தவே மாட்டேடி.... நிச்சயமாய் நீ அநா.ந.நி.தான்!”

அவ்வளவுதான். அவளின் உற்சாகம் ஒரு வினாடியில் குறைந்துவிட்டது. கண்கள் குளமாகி விட்டன. அழ ஆரம்பித்து விட்டாள். பிறந்த நாளன்று கூட வெறுப்பேற்றி விட்டோமேன்னு எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

எதிர்பாராத விஷயங்கள் நடப்பதுதானே எதிர்காலம்! நினைப்பது எல்லாம் நடந்து விடுவதில்லையே! எழுபத்தைந்து சதவீத மதிப்பெண்கள், கேம்பஸ் இண்டவியூவில் செலக்சன் என்றிருந்தாலும், என்னுடைய பல வருட கனவான அமெரிக்கா வேலை மட்டும் சாத்தியமாகவேயில்லை!
நான் வேலை பார்ப்பதென்னவோ அமெரிக்கா பேஸ் கம்பெனிதான் என்றாலும், வேலை பெங்களூரில்தான். அடுத்த புராஜக்ட்க்கு அனுப்புவோம்னு சொல்லி சொல்லியே காலத்தை கடத்தி விட்டனர். இடையில் லேஆஃப் வரவும் இருக்கிற வேலை நிலைத்தால் போதும்னு, நானும் ரொம்ப நெருக்கவில்லை. கல்யாணம், குழந்தை, அவளுக்கு ஸ்கூல்னு நாட்கள் பறந்து விட்டன. என் ஹஸ்பெண்டும் சாஃப்ட்வேர் என்ஜினியர்தான். என்னைப் போலவே... என் ஆபீஸிலேயே.... ஸோ இனி ரெண்டு பேருக்கும் சேர்த்து அமெரிக்கான்னாதான் வசதியும் கூட. மொத்தத்தில் ஒரு விஷயத்தில் தெளிவாகிவிட்டேன். அமெரிக்கா கனவு இனி கானல் நீரே!

அதே நேரத்தில் நெட்டை நித்யாவின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. கல்லூரி முடித்த ஒரு வருடத்திற்குள் கல்யாணம்... அமெரிக்கா மாப்பிள்ளை... பறந்து விட்டாள்! ஃபேஸ்புக்கில்தான் விபரங்கள் அறிந்து கொண்டேன்.

எதிர்காலம் புதிரானதுதான். விதி வலியது! தகுதியான எனக்கு அமெரிக்கா கிட்டவில்லை. நித்யாவிற்கு கிட்டியிருந்தது. அமெரிக்காவிற்கு அவள் தகுதியானவளா...? சொல்லத் தெரியவில்லை. ஏன் இப்படி யோசிக்கிறேன்? மனதிற்குள் பொறாமைப் படுகிறேனோ? அதுவும் தெரியவில்லை!
எப்படியிருந்தாலும் இப்போது அவளை நான் சந்திக்க முடியாது. எப்படியெல்லாமோ அவளை வெறுப்பேற்றியிருக்கிறேன். அழ வைத்திருக்கிறேன். டென்னிஸ் பந்து நிச்சயமாய் திரும்பி வரத்தான் செய்யும். அவள் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணத் தான் செய்வாள். எட்டு வருடத்தில் அவள்  உருவமே மாறிவிட்டது. அல்ட்ரா மாடர்ன்னாக இருக்கிறாள். கல்லூரியில் எப்படியெல்லாம் இருக்கணும்னு அவளைத் திட்டினேனோ, எந்தெந்த விஷயத்திலெல்லாம் மாறச் சொன்னேனோ, அதன்படியே மாறி இருக்கிறாள். ஆனால், இந்த மாற்றம் எனக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணுவதற்கு பதில், பயத்தையே உண்டு பண்ணுகிறது. நோ...! அவள் பார்வையில் பட்டுவிடக் கூடாது.

வெளியே வந்த நான், உடனே KFCக்குள் நுழைந்தேன். மகள் ஷிவானிக்கு ஆச்சர்யம்.

”நான் கேட்காமலே கூட்டி வந்து விட்டீர்களே?” என்று சந்தோஷப்பட்டாள்! அவளுக்கென்ன தெரியும்,  என்னுடைய மனக் குழப்பம்...
’கிரிஸ்பி சிக்கன் ஸ்ட்ரைப்ஸ்’ ரெண்டு பிளேட் வாங்கிக் கொண்டு டேபிளுக்குச் சென்றால், அங்கே என் மகளோடு நித்யா பேசிக் கொண்டிருந்தாள்!

”ஹாய் ரேஷ்மி, நீ லேண்ட்மார்க்கிலிருந்து வெளியேறும் போதுதான் உன்னைப் பார்த்தேன். குஷியில் கத்தி கூப்பிடனும்னு நினைத்தேன். ஆனால், பொது இடத்தில் பெயரைச் சொல்லி கத்தாதேன்னு நீ அட்வைஸ் பண்ணியது நினைவுக்கு வந்தது. அதான், அமைதியாக பின்னாலேயே வந்தேன்!”

“என் திட்டுதலை அட்வைஸ்னு நாகரீகமாக சொல்றியே, நித்யா.... அது மட்டுமில்லை நீயே மாடர்ன்னா மாறிட்டியே...?”

“எல்லாவற்றுக்கும் நீதான் காரணம் ரேஷ்மி! கல்லூரி நாட்களில் உன்னிடம் கொஞ்சம் பயம் இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் உன்னையே ஃபாலோ பண்ண முயற்சிப்பேன். உன்னோட தோழியாக இருக்க முயற்சிப்பேன். இப்போதுகூட ஃபேஸ்புக்கில் உன் போட்டோக்களை மாடலாக வைத்துதான் என்னையே நான் மாற்றிக் கொண்டுள்ளேன்! என்னுடையே ரோல் மாடலே நீதான் ரேஷ்மி!”

கல்லூரி நாட்களில் பார்த்த அதே நித்யாதான்.... அதே வெகுளித்தனம்...

“ஹே ஷிவானி குட்டி! கார்ட்டூனில் உங்களுக்கு என்ன பிடிக்கும்?,,, ஓ...! டாம் அண்ட் ஜெரியா...? என்னோட ஃபேவரைட்டும் அதுதான்!”

அதே குழந்தைத்தனம்... நித்யா மாறவில்லை! அப்படியேதான் இருக்கிறாள்! ஆனால்... அவளின் குணம் இப்போது என்னை எரிச்சலூட்டவில்லை!

“ரேஷ்மி, நீயும் யூ.எஸ். வரலாமே?”

“முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நித்யா. கிடைக்க வாய்ப்புள்ளது. பார்ப்போம்”

“வேலை நிமித்தமாய் வரணும்னு இல்லையே. ஃபேமிலியோடு வெக்கேசனுக்கு வாயேன். ஷிவானி குட்டி, அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு எங்க வீட்டிற்கு வா. டிஸ்னிலேண்ட், நயாகரா, லீகோலேண்ட் எல்லாம் பார்க்கலாம். செலவைப் பற்றி யோசிக்காதேடி. நீ அங்கு வந்து, உன் விருப்பம் போல பத்து நாளோ, இருபது நாளோ இருந்து சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி இந்தியா வரும் வரையில் எல்லாமே என் பொறுப்பு! எனக்கு தன்னம்பிக்கை ஊட்டிய தேவதை நீ. ரேஷ்மியா இருந்தா எப்படி டிரெஸ் பண்ணிப்பா, எப்படி பேசுவா. இப்படி நினைச்சு நினைச்சு தான் நானே மாறினேன்... நீ என்னோட ஸ்பெஷல் தோழிடி!”

முதன்முறையாக நித்யாவால், என்னுடைய கண்கள் கலங்கின.

** மங்கையர் மலர்  ஜூலை 2012 தன்னம்பிக்கை சிறப்பிதழ் இதழில் வெளிவந்த சிறுகதை**

No comments: